ADVERTISEMENT

இயற்கையைப் பாதுகாக்கும் இயற்கை வழிபாட்டு கோவில் காப்புக்காடுகள்!

02:30 PM Aug 04, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் இயற்கை சூழலைப் பாதுகாக்கும் சூழலியல் மண்டலங்களாக இயற்கை வழிபாட்டு கோவில் காப்புக்காடுகள் பல அமைந்துள்ளன.

மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை ஏரி, குளம், கண்மாய், ஏந்தல் என பலவற்றை வெட்டி அதில் தேக்கி வைத்தனர் நம் முன்னோர்கள். மாதம் மும்மாரி மழை பொழிய ஊர் தோறும் கோவில்களையும், அவற்ற சுற்றி காடுகளையும், தமிழர்கள் உருவாக்கி வைத்தனர். இதனால் கோவில்களும், வழிபாடுகளும், காடுகளும், நீர்ப்பாசனமும் இயற்கை சார்ந்ததாகவும், அதை பாதுகாப்பதாகவும் இருந்தன. மருத்துவக் குணமுள்ள பல மூலிகை தாவரங்களைப் பெருக்கவும், இயற்கை சூழலைப் பாதுகாக்கவும் தமிழர்கள் பழங்காலக் கோவில்களைச் சுற்றி காடுகளை உருவாக்கினர். இத்தகைய காடுகள் காப்புக்காடுகள் எனப்படுகின்றன.

அடர்ந்த காட்டுப்பகுதியில் மரங்களின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழர்களின் ஆதி ஆலயங்கள், பின் மண் தளிகளாகவும், செங்கல் தளிகளாகவும், குடைவரை கோவில்களாகவும், கற்றளிகளாகவும் காலத்துக்கு ஏற்ப உருமாற்றம் பெற்றன.

இதுபற்றி தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக தொல்லியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில் காடுகள் அவ்வூர்களின் இயற்கையைப் பாதுகாக்கும் சூழியல் மண்டலங்களாகவே உருவாக்கப்பட்டன. இக்காடுகள் பருவமழையை வரவழைத்தல், மருத்துவ மூலிகைகள் தருதல், பறவைகள், விலங்குகளின் வாழ்விடம் என பலவித பயன்பாடுகளை நமக்கு வழங்குகின்றன. இக்கோவில் காடுகளில் உள்ள மரங்களை மக்கள் புனிதமாக கருதுவதால், அவற்றை கோவில் பணிகளுக்காக கூட வெட்டுவதில்லை. பல இடங்களில் இதை ஊர்க் கட்டுப்பாடாகவே பின்பற்றுகிறார்கள். கோவிலில் பொங்கல் வைக்க, தானாக உடைந்து விழும் குச்சிகளையே பயன்படுத்துகின்றனர். இவை இயற்கையைப் பாதுகாக்க நம் முன்னோர்கள் உருவாக்கிய வழிமுறைகள் ஆகும்.

ஐயனார், காளி ஆகிய தெய்வங்களுக்குரிய கோவில்கள், மரங்கள் சூழ்ந்த காப்பு காடுகள் கொண்டதாகவே இன்றும் இருக்கின்றன. மேலும் பெரிய கோவில்களில் நந்தவனம் என்ற பெயரிலும் மரங்கள் நிறைந்த காடுகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பெருங்கோவில்களில் தலவிருட்சமாக மரங்கள் வளர்க்கும் வழக்கமும் வந்திருக்கிறது. கேரளாவில் பல சாஸ்தா மற்றும் காளி கோவில்கள் காப்பு காடுகளால் உருவாகியுள்ளன.

இத்தகைய கோவில்கள் காவு எனப்படுகின்றன. கா, காவு என்ற சொல்லுக்கு சோலை என்பது பொருள். காவுக்கோவில் அமைந்த பகுதிகளில் உருவான ஊர்களும் கோவில் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இப்போதும் அங்கு பழமை மாறாமல் இக்காடுகளும், அவற்றின் மூலிகைகளும் பாதுகாக்கப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமக்கோவில்கள், முக்கியமாக ஐயனார், காளி கோவில்கள், உகாய், ஆதண்டை, ஆத்தி, மணிபூவந்தி, தாழை, நாட்டுவீழி, சங்கஞ்செடி உள்ளிட்ட பல மூலிகை தாவரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. சில ஐயனார் கோவில்களில் உள்ள மூலிகைகள் மருந்தாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பார்த்திபனூர் அருகில் கீழ்ப்பெருங்கரை ஐயனார் கோவில், நரிப்பையூர் செவக்காட்டு ஐயனார் கோவில், போகலூர் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் 20க்கும் மேற்பட்ட மிஸ்வாக் எனப்படும் உகாய் மரங்கள் கோவிலைச் சுற்றி காவல் நிற்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என அழைக்கப்பட்டாலும் பல அரியவகை மரங்கள் இங்கு செழித்து வளர்ந்து வருவதை இன்றும் பல கிராமக் கோவில்களில் காணமுடிகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காடுகள் சூழ்ந்த ஆலயங்களை கொம்படி ஆலயங்கள் என அழைப்பதாகக்கூறிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் மேலும் கூறியதாவது, கந்தர்வக்கோட்டை ஒன்றியம் மங்கனூர், நத்தமாடிப்பட்டி கிராம எல்லையில் உள்ள வீசிக்காடு, கீழவாண்டான்விடுதி சிவனார் திடல், குன்றாண்டார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் வாட்டாருடையார் கோவில், வளத்தாரப்பன் கோவில் சிட்டை, அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள வெள்ளாஞ்சாறு புலிக்குத்தி அய்யனார் கோவில் காடு, திருமயம் ஒன்றியத்திலுள்ள மலையடிப்பட்டி கிராமத்திலுள்ள குருந்தடி அய்யனார் பாதுகாக்கப்பட்ட‌ வனப்பகுதி, மல்லாங்குடி பிடாரி அய்யனார் கோவில் காடு, திருவரங்குளம் ஒன்றியம் நெமக்கோட்டை கோவில் காடு, செரியலூா் கிராமத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் காடுகள், ஆலடியான்கோயில் காடுகள், கருப்பாயி அம்மன்கோயில் காடுகள், நெடுவாசல் கிராமத்தில் வவ்வால்களின் சரணாலயமாக திகழும் வெள்ளைச்சாமி கோயில் காடு, கீரமங்கலம் கூத்தப்பெருமாள் கோயில் காடு என இம்மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோவில் காடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு குருந்தமரம், வெப்பாலை, உசிலை, வீரமரம், நெய்க்கொட்டான், வெள்வேலம், காட்டத்தி, கிளுவை உள்ளிட்ட பல்வேறு மர வகைகள் இக்காடுகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் அருகிலுள்ள யாளக்காட்டில் ஆயிரக்கணக்கான உகாய் மரங்கள் வளர்ந்துள்ளதாக தெரிவித்த இலங்கை வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் மேலும் கூறியதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மாமங்க ஈஸ்வரம், மண்டூர் கந்தசுவாமி கோயில், செட்டிபாளையம் கண்ணகி அம்மன் கோயில், களுதாவளை பிள்ளையார் கோயில், கோராவெளி அம்மன் கோயில் ஆகியவையும், அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயில், மடத்தடி மீனாட்சி அம்மன் கோயில், உகந்தை முருகன் கோயில், தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில் ஆகியவையும், திருகோணமலை மாவட்டத்தில் சேனையூர் நாகதம்பிரான் கோயில், கட்டைபறிச்சான் அம்மச்சி அம்மன் கோயில், பறையான்குளம் எல்லைக்காளி அம்மன் கோயில் ஆகியவையும் வடமாகாணத்தில் நகுலேஸ்வரம், செல்வச் சந்நிதி முருகன் கோயில் ஆகியவையும், கேகாலை மாவட்டத்தில் அம்பன்பிட்டிய கந்தசுவாமி கோயில் ஆகியவையும் சோலைகளின் மத்தியில் அமைந்துள்ள முக்கியக் கோயில்களாகும். இங்கு மருதமரம், மாமரம், தென்னைமரம், வேப்பமரம், பனைமரம் ஆகிய மரங்கள் வளர்ந்துள்ளன.

இத்தகைய கோவில் காப்புக்காடுகளை மக்கள் அனைத்து கோவில்களிலும் வளர்த்து இயற்கையை பாதுகாத்து மழைவளம் பெறலாமே!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT