ADVERTISEMENT

இந்திய அரசியலில் மாற்றம்? - ஜூன் 12ல் பீகாரில் நடக்கும் முக்கிய நிகழ்வு

12:09 PM May 30, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தற்போது 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் பாஜகவானது 9வது ஆண்டை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பாஜகவிற்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்துப் பேசி வருகின்றனர். பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இதற்கிடையில் பீகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சமீப காலமாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்துப் பேசி வருகிறார். அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி நித்திஷ் குமார், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நித்திஷ் குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பு குறித்து பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு இது. எதிர்க்கட்சிகளின் தொலைநோக்கு பார்வையை வளர்த்துக்கொண்டு முன்னேறுவோம். நாட்டுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம். கொள்கை ரீதியான போரில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்திய நிறுவனங்கள் மீதான தாக்குதலை ஒற்றுமையுடன் எதிர்த்துப் போராடுவோம்" என்று தெரிவித்திருந்தார். நிதிஷ்குமார், “எங்களால் முடிந்தவரை பல கட்சிகளை ஒன்றிணைத்து செயல்பட முயற்சிப்போம்” என்று தெரிவித்தார். மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “இது வரலாற்று சந்திப்பு” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும், துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி பேசுவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து பேசினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மெகா கூட்டணி அமைப்பதில் எந்த மோதலும் இல்லை. நிதிஷ் குமாரிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் முன் வைத்தேன். ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கம் பீகாரில் இருந்து தொடங்கியது போல பீகாரில் அனைத்துக் கட்சி கூட்டத்தையும் நடத்தினால் அந்த கூட்டத்தில் நம்முடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யலாம். முதலில் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

பாஜகவை ஜீரோவாக்க வேண்டும். நாள்தோறும் பாஜகவினர் ஊடகங்களின் உதவியாலும், மக்களிடம் திணிக்கும் போலிக் கதைகளாலும் பெரும் ஹீரோவாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்காக பாஜகவினர் எதையும் செய்யவில்லை. சொந்த விளம்பரம் தேடுவதில் மட்டுமே அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இடம் பெற்றுள்ளன" எனப் பேசி இருந்தார்.

நிதிஷ் குமார் கடந்த 9 ஆம் தேதி (09.05.2023) ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்றிருந்தார். அப்போது அம்மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு நிதிஷ் குமார் பேசுகையில், "இப்போது நாங்கள் இருவரும் அரசியல் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. நவீன் பட்நாயக்குடன் நட்பு வலுவாக உள்ளது. நவீன் பட்நாயக்குடன் அரசியல் பேசும் தேவை இல்லை" எனத் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள், "நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றி பேசி முடிவு எடுக்க டெல்லியில் நடக்க உள்ள கூட்டத்திற்கு நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு விடுத்தீர்களா" என நிதிஷ் குமாரிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நிதிஷ் குமார் கடந்த 22 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை மீண்டும் சந்தித்துப் பேசி இருந்தார். அவர்கள் 2024 ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதற்கு முன்னதாக கடந்த 21 ஆம் தேதி, நிதிஷ் குமார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது டெல்லி அரசு உயர் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் மத்திய அரசுடன் ஏற்பட்டுள்ள மோதல் விவகாரம் தொடர்பாக விவாதித்ததாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் டெல்லி அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக நிதிஷ் குமார் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்தும் பேசப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் ஜூன் 12 ஆம் தேதி பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாட்னாவில் நடைபெற உள்ள கூட்டம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில், "எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்வார். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உருவாக்குவது மற்றும் அதனை வலுப்படுத்துவது குறித்து தனது யோசனைகளை மம்தா முன்வைப்பார்’’ என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்ற பிறகு, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வலுவான இடங்களில் அக்கட்சியை ஆதரிக்கத் தயார் என மம்தா கூறியிருந்தார்.

கடந்த 28 ஆம் தேதி பிரதமர் மோடியால் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. . நாடாளுமன்றக் கட்டடத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலையும் நிறுவினார். கட்டடம் திறக்கப்பட்டதை அடுத்து, அங்கு அனைத்து மத குருமார்களின் முன்னிலையில் வழிபாடுகள் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தன. இந்நிலையில் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் ஜூன் 12 ஆம் தேதி பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்திருப்பது தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையும் எனச் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT