Skip to main content

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்; காங்கிரஸ் பச்சைக் கொடி

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

opposition leaders patna meeting congress green flag

 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக  கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இதற்கிடையில் பீகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்துப் பேசி வருகிறார்.

 

இது தொடர்பாக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்,  உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் ஜூன் 12 ஆம் தேதி பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் குறித்து தெரிவிக்கையில்,"பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். ஆனால், கட்சியின் சார்பில் யார் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும் ராகுல் காந்தி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் இந்த கூட்டத்தில் யார் பங்கேற்பது குறித்து கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்வார்" என தெரிவித்தார். மேலும் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து தெரிவிக்கையில், "மே 29 ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின் போது அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் அது தொடர்பாக சுமூக முடிவு எட்டப்பட்டது. அனைவரும் ஒற்றுமையாக இணைந்து ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலை சந்திப்பது என உறுதியளித்துள்ளனர். கட்சிதான் பெரியது எனவே அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.


 

சார்ந்த செய்திகள்