ADVERTISEMENT

நகைக் கொள்ளை! மிரட்டும் காக்கிகள்... மராத்திய வியாபாரிகள் ஓட்டம்...

12:00 PM Jan 10, 2019 | cnramki


வீட்டுக் கதவை உடைத்து நகைகள் கொள்ளை.. பெண்கள் கழுத்தில் கிடந்த நகை பறிப்பு.. திருட்டு நகைகள் மீட்பு என நாளிதழ்களில் அவ்வப்போது செய்திகள் வரும். ‘உண்மையிலேயே நடந்தது என்ன?’ என்பதை, நகைத் திருட்டு வழக்கு ஒன்றைப் புலனாய்வு செய்து, நிஜப் பின்னணியை இங்கே விவரித்திருக்கிறோம்.

ADVERTISEMENT

காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்

ADVERTISEMENT

‘நள்ளிரவு 1-30 மணிக்கு, எஸ்.எஸ்.காலனி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் உள்ளிட்ட 5 பேர், என் வீட்டுக்கதவைத் தட்டி, என் கணவர் சந்தீப்பை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அடுத்து, என் கணவரின் மொபைல் ஸ்விட்ச்-ஆப் ஆகிவிட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால், மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டேன். எனக்கும், போலீசாருக்கும், நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். ஆஜரான இன்ஸ்பெக்டர் அருணாச்சலம், எனது கணவரைக் காவலில் எடுக்கவில்லை என்றும், அவர் மீது எவ்வித வழக்கும் இல்லை என்றும் அறிக்கை அளித்தார். சம்பவ சாட்சியான சூரஜ் நடந்ததை உறுதிப்படுத்தியபோது, இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மறுத்தார். மகாராஷ்டிராவிலிருந்து மதுரையில் குடியேறிய என் குடும்பத்தினருக்கு, குறிப்பாக என் கணவர் சந்தீப்புக்கு இன்ஸ்பெக்டர் அருணாச்சலத்தால் பெரும் அச்சுறுத்தல் உள்ளது.’கடந்த 25-ஆம் தேதி, மதுரை மாநகர் காவல் ஆணையாளரிடம் கோமல் என்ற வர்ஷா ராணி அளித்த புகாரின் சாராம்சம் இது.

பெரிய வீடுகளில் குவிந்து கிடக்கும் தங்க நகைகள்!

‘சந்தீப் மீது எந்த வழக்கும் இல்லை; காவலில் எடுக்கவும் இல்லை’ என்று ஆய்வாளர் அருணாச்சலம் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் வர்ஷா ராணி. அதன்பிறகு, ஒரே ஒரு வழக்கில் 27-ஆம் தேதி சந்தீப்பைக் கைது செய்ததாக நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டது காவல்துறை. அதனைத் தொடர்ந்து, சுப்பிரமணியபுரம் காவல் நிலையம், எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் என இரண்டு காவல் நிலையங்களிலும் மொத்தம் 6 வழக்குகள் சந்தீப், அவருடைய தந்தை மகாதேவ் மற்றும் உறவினர் பீமா மீது பதிவாகி உள்ளன.

என்னென்ன வழக்குகள்? டூ வீலர்களில் சென்று பெண்களிடம் நகைகளைப் பறிக்கும் ரவிச்சந்திரன், பாபு ஆறுமுகம், பாண்டியராஜன், லட்சுமணன் ஆகிய வழிப்பறி திருடர்களுக்கும் சந்தீப் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருந்ததாகவும், திருட்டு நகைகளை சந்தீப் மற்றும் அவருடைய தந்தை மகாதேவிடம் தொடர்ந்து விற்று வந்த ரவிச்சந்திரனிடம் அவர்கள், ஏதாவது பெரிய வீடுகளில் திருடினால், நிறைய தங்க நகைகள் கிடைக்கும் என்று கூறியதாகவும், மதுரை அண்ணாநகர், எஸ்.எஸ்.காலனி, தல்லாகுளம் ஏரியாவில் தனித்தனியாக உள்ள பெரிய வீடுகளில் திருடுவதற்கான திட்டம் வகுத்ததாகவும், கடந்த 27-ஆம் தேதி அதிகலை 3 மணிக்கு, பழங்காநத்தத்தில், மேற்கண்ட நகைத் திருடர்கள் நால்வரிடமும் சந்தீப் பேசிக்கொண்டிருந்தபோது பிடிபட்டு, தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்ததை ஒத்துக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும், 158 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், காவல்துறை ஆவணங்களில் பதிவாகி உள்ளன.

சந்தீப்

‘பத்து லட்சம் கொடு!’ - போலீஸ் நடத்திய பேரம்!

சிறையிலிருந்து பிணையில் வெளிவந்திருக்கும் சந்தீப் நம்மிடம் “மிட்நைட்ல இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் சார் விசாரிக்கணும்னு வீட்ல இருந்து கூட்டிட்டுப் போனார். பத்து லட்ச ரூபாய் கொடு. இல்லைன்னா.. மதுரைல இருக்கிற கேஸ், தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா கேஸையும் உன் மேல போட்டு உன் குடும்பத்தையே அழிச்சிருவோம். இந்த ஊர்லயே இல்லாம பண்ணிருவோம்னாரு. அவர்கிட்ட என்ன சார் தப்பு பண்ணுனோம்னு கேட்டதுக்கு, இல்லப்பா நீ நிரபராதின்னு தெரியும். ஆனா, என் மேல கேஸ் போட்ருக்கீங்க. கேட்ட பணத்த கொடுத்திருங்க. இல்லைன்னா.. உன் குடும்பத்தை அழிச்சிருவேன்னு சொன்னாரு. என்னை அங்கே இங்கேன்னு ஓவ்வொரு ஸ்டேஷனா கூட்டிட்டுப் போனாங்க. இன்னொரு பக்கம் காம்ப்ரமைஸ் பேசிக்கிட்டிருந்தாங்க. உன் குடும்பம் வீணாப்போச்சுன்னா.. அதுக்கு காரணம் நாங்க இல்லைன்னு சொன்னாரு. அந்த ஸ்டேஷன்ல அக்யூஸ்ட் நாலு பேரு இருந்தாங்க. அவங்கள இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. அவங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல. அவங்ககூட என்னையும் சேர்த்து கேஸ் போட்டுட்டாங்க. நாங்க போட்ட கேஸை வாபஸ் வாங்கச் சொன்ன அருணாச்சலம் சார் ‘என்னை வேலையை விட்டு தூக்கினாலும் எனக்கு எந்த பாதிப்பும் இல்ல. உன்னைவிட நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு நான் பெரிய ஆளு. என்னை ஒண்ணும் பண்ண முடியாது. மூணு வருஷமா நான் இன்ஸ்பெக்டரா இருக்கேன். சந்தோஷமா இருக்கேன். இந்த கேஸ் இருந்தா, ப்ரமோஷன் கிடைக்காது. நீங்க வாபஸ் வாங்கலைன்னா. உங்க மேல கேஸ் போடறதைத் தவிர எங்களுக்கு வேற வழியில்ல’ அப்படின்னாரு. என் மேல போட்டிருக்கிறது என்ன கேஸுன்னே எனக்குத் தெரியல. மிரட்டி கையெழுத்து வாங்கினாங்க. நான் வாழ்க்கையில எந்தத் தப்பும் பண்ணுனது கிடையாது. சின்ன வயசுல எங்க வீட்ல பிஸ்கட்கூட திருடினது இல்ல. என் மேல போயி திருடிருக்கேன், கிருடிருக்கேன்னு பொய்க்கேஸ் போட்டிருக்காங்க. நான் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். கவர்மென்டுக்கு டேக்ஸ் கட்டி நேர்மையா வியாபாரம் பண்ணுறவன். திருடினேன்னு கேவலப்படுத்தி, என் வாழ்க்கைய நாசமாக்கிட்டாங்க” என்று அழுதார்.

ஒன்றரை கோடி பணம் பறிப்பு! ஓட்டம் பிடித்த மராத்தியர்கள்!

மதுரையில் தங்கம் மற்றும் வெள்ளி நகை வியாபாரம் செய்துவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மராத்தியர்கள் தங்களுக்கென்று சங்கம் வைத்திருக்கின்றனர். அதன் தலைவரான சிவாஜி “நாலாவது தலைமுறையா மதுரையில் நாங்க தொழில் பண்ணிக்கிட்டிருக்கோம். அம்பது வருஷத்துல இந்த மாதிரி எதுவும் நடக்கல. மாசம் பத்துலட்சம் கொடுன்னு கேட்கிறாங்க. கொடுக்கலைன்னா.. நைட்ல தூக்கிட்டுப் போயி பொய்க்கேஸ் போட்டு.. பணம் கொடுக்கச் சொல்லி பிரஷர் கொடுக்கிறாங்க. ஏற்கனவே மூணு பேரை கூட்டிட்டுப்போயி, கனமான அமவுன்டா ஒன்றரை கோடி வாங்கிட்டுத்தான் விட்டாங்க. போலீஸ் டார்ச்சர் தாங்காம எங்காளுங்க பாதிப்பேர் சொந்த ஊருக்கே ஓடிட்டாங்க. நாங்க எல்லாரும் பயந்துக்கிட்டுத்தான் இருக்கோம். நேர்மையா வியாபாரம் பண்ணுனாலும் போலீஸ் டார்ச்சர் ரொம்ப இருக்கு. மூணு மாசமா நாங்க யாரும் தூங்கல.” என்றார் பரிதாபமாக.

மாமூல் காவல்துறையின் மெகா நெட்வொர்க்!

தென் தமிழக நகை வணிகர்கள் கூட்டமைப்பின் சீனியர் பிரசிடென்ட் பாலசுப்பிரமணியன் “பெரும் தொகை மாமூல் கேட்கிறதுக்கு போலீஸ் சொல்லுற காரணம் என்னன்னா, நகையைத் திருடுறவன் அதை வியாபாரிகிட்டதான் கொடுப்பான். அந்த வியாபாரி சேட்கிட்ட கொடுப்பான். கோல்ட் பிசினஸ் பண்ணுறதெல்லாம் சேட்டுங்கதான். அப்புறம் என்ன? மாமூலை லட்சமா கொடு. இல்லைன்னா சேட்டுங்க எல்லாரும் சேர்ந்து ஒரே பேமன்டா கோடியில் கொடு. இந்தமாதிரி கணக்குப் போட்டுத்தான் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மிரட்டுறாரு. ஒரு மராத்தி வியாபாரிய ரோட்ல வச்சு மிரட்டி 30 லட்சம் வாங்கிருக்காரு அருணாச்சலம். போலீஸ் பொய் கேஸ் போட்டிரும்னு பயந்து சேட்டுங்க ரொம்பப்பேர் மகாராஷ்ட்ராவுக்கே போயிட்டாங்க. சந்தீப்பை தூக்கிட்டுப் போயிட்டு, அப்படி எதுவும் பண்ணலைன்னு கோர்ட்ல பொய்யா ஒரு அபிடவிட் தாக்கல் பண்ணுறாரு. இத்தனைக்கும் அவர் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர்தான். கிரைம்ல இல்ல. சந்தீப்பை கடத்திட்டுப் போனார்ன்னுதான் கிட்நாப் கேஸா நாங்க ஹைகோர்ட்ல போட்டிருக்கோம். அதுக்கு ஆதாரமா, சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்கு. அரசாங்கத்துக்கு வரி கட்டி பிசினஸ் பண்ணுறவங்கள இந்தப் பாடா படுத்துறது?

தனக்காக அருணாச்சலம் இவ்வளவு பெரிய தொகை கேட்கிறாருன்னு சொல்லமுடியாது. மேல வரைக்கும் நிச்சயம் கொடுக்கிறாரு. மாமூல் வாங்கிறதுக்குன்னு போலீஸ் டிபார்ட்மென்ட்ல பெரிய லெவல்ல ஒரு லிங்க் இருக்கு. கமிஷனர்கிட்ட அருணாச்சலம் மேல பெட்டிஷன் கொடுத்தோம். இப்ப வரைக்கும் விசாரிக்கல. லிங்க் இல்லாமலா இருக்கும்? இல்லைன்னா அருணாச்சலத்துக்கு இவ்வளவு தைரியம் எப்படி வரும்? டெய்லி ஆளனுப்பி மிரட்டுறாரு. போலீஸ் டிபார்ட்மென்ட்ல மேலிடத்து சப்போர்ட் இருக்கு. இந்த வழக்கில், சந்தீப் மனைவி வர்ஷா ராணிக்கு சட்ட ரீதியான ஆலோசனைகள் கிடைப்பதற்கு வழிமுறை சொன்னேன். அதனால் எரிச்சலான காவல்துறை, என் மீதும் பொய் வழக்கு போடப் போவதாக மிரட்டுகிறது. இதுகுறித்து, குடியரசுத்தலைவர், பிரதமர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக முதல்வர், காவல்துறை டி.ஜி.பி. என அதிமுக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு, மதுரை காவல்துறையின் அத்துமீறல் குறித்து புகார் அனுப்பியிருக்கிறேன். நகைத் திருட்டு வழக்குகளிலும் மீட்பு நடவடிக்கைகளிலும் பணம் பறித்து பங்கு போட்டுக்கொள்வதில் தமிழக காவல்துறையினரின் நெட்வொர்க் மிகப்பெரிய அளவில் செயல்படுகிறது. அதனால், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரியிருக்கிறோம்” என்றார்.

காவல்துறையில் பைத்தியக்காரர்கள் இல்லை!’ – கமிஷனர் விளக்கம்!

மதுரை, எஸ்.எஸ்.காலனி காவல்நிலைய ஆய்வாளர் அருணாச்சலத்தை தொடர்பு கொண்டு நகை வியாபாரிகளின் குற்றச்சாட்டு குறித்து கேட்டோம்.
“நீங்க கேட்பது எதுவும் எனக்குத் தெரியவும் இல்லை; புரியவும் இல்லை.” என்று ஒரே போடாகப் போட்டார்.

நம்மிடம் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் “திருடுபோன நகைகளை மீட்பதென்பது கடினமான வேலை. நான் அமைத்த ஸ்பெஷல் டீமில் இன்ஸ்பெக்டர் அருணாச்சலமும் இருக்கிறார். அவர் தலைமையிலான டீம் நல்லபடியாக வேலை செய்திருக்கிறது. போலீசார் நைட் ரவுண்ட்ஸ் போன சிசிடிவி ஃபுட்டேஜை வைத்துக்கொண்டு, காவல்துறைக்கு எதிரான ஆதாரம் என்கிறார்கள். இதை நாங்கள் நீதிமன்றத்திலேயே விளக்கமாகச் சொல்லிவிட்டோம். கிரைம் பார்ட்டி எப்போதும் நகைக்கடை பஜாரில் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். பல ஊர்களிலிருந்தும் திருட்டு நகைகளைக் கொண்டுவந்து சேர்க்கும் இடமாக மதுரையைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சம்பந்தம் இல்லாத யாரையோ நகைத்திருடன் என்று பிடித்து வழக்கு போடுவதற்கு, காவல்துறையில் யாரும் பைத்தியக்காரர்கள் இல்லை. போலீஸ் (இன்ஸ்பெக்டர் அருணாச்சலம்) மீது புகார் கொடுத்திருக்கும் நபர் (பாலசுப்பிரமணியன்) சரியில்லாதவர். போலீஸ் அதிகாரிகளுக்கு திருட்டு நகைகளை சப்ளை செய்பவர். பழைய போலீஸ் அதிகாரிகளோடு அவருக்கு தொடர்பு உண்டு. சீனியர் பிரசிடெண்ட் என்று அவர் சொல்லிக்கொள்ளும் சங்கம் அப்படி ஒன்றும் மெயினான சங்கம் கிடையாது. ஸ்பெஷல் டீம் போலீஸ் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் அதிருப்தியாக உள்ளனர். அவர்களில் ஒரு சில அதிகாரிகள் ‘கேம்’ ஆடுகிறார்கள். இன்ஸ்பெக்டர்கிட்ட யாரும் ஒன்றரை கோடி ரூபாய் தரமாட்டாங்க. அப்படி நடக்கும் அளவுக்கு நான் இங்கே தூங்கிக் கொண்டிருக்கவில்லை. காவல்துறை அதிகாரிகள் யாரும் நகைக்கடைக்காரர்களிடம் பணம் வாங்கியதை ஆதாரத்துடன் கூறினால், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.” என்றார் சீரியஸாக.

சட்ட விரோதக் காவல்! ஜோடிக்கப்பட்ட வழக்குகள்!

சந்தீப் வழக்கில் தனக்கு எதுவும் தெரியாது என்று இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் கூறியதும், அவர் தலைமையில் ஸ்பெஷல் டீமை இயக்கியதே நான்தான் என்று கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் அளித்திருப்பதும் முரண்பாடாக இருக்கின்றன. இந்த நிலையில், “தென் தமிழக நகை வணிகர்கள் கூட்டமைப்பில் 500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இது ஒன்றும் சாதாரண சங்கம் கிடையாது. மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலராகவும் இருந்திருக்கிறார் பாலசுப்பிரமணியன். பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு உதவுவதற்காகத்தானே நிர்வாகிகள் நாங்கள் இருக்கிறோம். எல்லா வழக்குகளையும் பாலசுப்பிரமணியன் மேல் போடுவோம் என்று போலீஸ் மிரட்டுவது சரியில்லையே?” என்று கொதித்துப்போய் பேசிய கூட்டமைப்பின் தலைவர் தில்லைராஜ் “கொள்ளை மற்றும் வழிப்பறியால் நகையைப் பறிகொடுத்த பொது மக்களுக்கு, மீட்பின் மூலம் நகைகள் திரும்பக் கிடைப்பதை சங்கம் வரவேற்கவே செய்கிறது. அதே நேரத்தில், நகைத் திருட்டு வழக்கை பகலில் வந்து விசாரிக்க வேண்டியதுதானே? பஜாரில் நகைக்கடை வைத்திருப்பவர்கள் எங்கேயும் ஓடிவிடப் போவதில்லை. சந்தீப்புக்கும் நகைத் திருட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவரை மூன்று நாட்கள் சட்ட விரோத காவலில் வைத்து, ஒவ்வொரு காவல் நிலையமாகக் கூட்டிச் சென்று மாமூல் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். கேட்ட பணத்தைக் கொடுக்காததால், பல வழக்குகளை ஜோடித்திருக்கிறார்கள். நகைத் திருடன் ஒருவன் பிடிபட்டால், காவல்துறையினருக்கு ஜாக்பாட் அடித்த மாதிரிதான். அந்த ஒரு வழக்கை வைத்து 10 நகைக்கடைகளுக்குச் செல்வார்கள். இந்த வழக்கில் உங்களைச் சேர்த்துவிடுவோம் என்று மிரட்டி 10 நகைக்கடைக்காரர்களிடமும் பணம் பறிப்பார்கள். நீதிமன்றம் சுட்டிக்காட்டும் வழிமுறைகளை ஏன் காவல்துறை பின்பற்றுவதில்லை? மாதம் ரூ.10 லட்சம் மாமூல் கேட்கும் காவல்துறையினரின் அராஜகத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றுதான், சந்தீப் வழக்கை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம்.” என்றார்.

வழிப்பறித் திருடர்களைக் காட்டிலும் பலே கொள்ளையர்களாகவா காவல்துறையினர் இருக்கின்றனர்? உண்மை எதுவானாலும், கொடுமைதான்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT