ADVERTISEMENT

கத்தி குத்து.... 3000 கிமீ நடை பயணம்.... சந்திரபாபுவை தோற்கடித்த ஜெகனின் அரசியல் பயணம்...

03:29 PM May 25, 2019 | santhoshkumar

கடந்த 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி ஆந்திர அரசியலில் காங்கிரஸ் என்றொரு வலிமை மிக்க கட்சிக்கு மிகப்பெரிய சோகம் நேர்ந்தது. ராஜசேகர ரெட்டி என்ற அப்போதைய ஆந்திராவின் வலிமை மிக்க முதல்வர் ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். அதனை அடுத்துதான் காங்கிரஸின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாக உடைய ஆரம்பித்தது. மக்களின் செல்வாக்கு அதிகம் இருந்த ஒய்.எஸ்.ஆர் -க்கு பின் யார் ஆந்திராவை ஆள்வது என்ற குழப்பம் காங்கிரஸ் தலைமையிடத்திற்கு அதிகமாக இருந்தது. அந்த இடத்திற்கு உரிமை கோரினார் அரசியலுக்குள்ளே வராத ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால், தலைமையோ அவருக்கு முதலமைச்சர் பதவி தராமல் அரசியலில் அனுபவம் வாய்ந்த ரோசையாவுக்கு தரப்பட்டது. இது ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவருடைய தந்தையின் ஆதரவாளர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியளித்தது. ரோசையாவுக்கு முதலமைச்சர் பதவி தரப்பட்டவுடன் அந்த நிலையை பயன்படுத்தி கே. சந்திரசேகர ராவ் தெலங்கானாவை பிரித்து தர வேண்டும் என்று கடுமையான போராட்டங்களை நடத்தினார். வேறு வழியின்றி காங்கிரஸ் அரசும் தெலங்கானாவை பிரித்துக்கொடுக்க ஒப்புக்கொண்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனயடுத்து தன்னுடைய தந்தை மறைவின் செய்தியை கேட்டு தற்கொலை செய்துகொண்ட நூறுக்கும் மேற்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஜெகன் ஆறுதல் கூறினார். அந்த யாத்திரையை பாதியிலேயே நிறுத்திக்கொள்ளும்படி காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியது. அதை மீறியும் ஜெகன் அந்த யாத்திரையை நடத்தினார். இதான் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சில மாதங்களிலேயே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்று கட்சியை நிறுவினார் ஜெகன்.

கட்சி தொடங்கியவுடன் இடைக்கால சட்டமன்ற தேர்தலை சந்தித்து பல தொகுதிகளில் வெற்றியை கண்டது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். கடப்பாவில் போட்டியிட்ட ஜெகனும் பெரியளவில் வெற்றிபெற்றார். சுமார் 18 தொகுதிகளில் வெற்றிபெற்றனர். இதனை அடுத்து சொத்து குவிப்பு வழக்கினால் 16 மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். அப்போதுதான் தெலங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெகன் மோகன் ரெட்டி சிறையிலேயே 125 மணி நேரங்களுக்கு மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஜெகன் வெளிவந்த பின்பு 72 மணிநேர பந்துக்கு அழைப்புவிடுத்தார். இவரும் இவரது அம்மா விஜய லக்‌ஷ்மியும் தெலங்கானா உருவாக்கப்பட்டதற்கு தங்களின் எதிர்பை தெரிவித்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இன்னும் ஆறு மாதத்தில் பொதுத் தேர்தல் மற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்தது. அரசியல் சூழலே வேறு விதமாக இருந்தது, அப்போது ஜெகனின் கட்சி எந்த இடத்தில் இருந்தது என யாருக்கும் தெரியவில்லை.

2014ஆம் ஆண்டு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மோடியுடன் கூட்டணி அமைத்து சந்திரபாபு நாயுடு களத்தில் இறங்கினார். காங்கிரஸின் மேலிருந்த வெறுப்பு, சந்திரபாபுவின் மேல் நம்பிக்கையாக மக்களை திருப்பியது. ஜெகன் மோகன் ரெட்டியை மக்கள் மாற்றாக கருதவில்லை அதனால் நடைபெற்ற அத்தேர்தலில் ஜெகன் 65 தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றார். ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டிக்கு போட்டியாக இருந்த சந்திரபாபு நாயுடு 10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஆட்சிக்கு வந்தார். பின்னர், சந்திரபாபுவும் மூன்றாம் அணி உருவாகும் இந்திய அரசியலில் மிகப்பெரிய ஒரு இடத்தை பிடிக்க போகிறோம் என்று நினைத்தாரா என தெரியவில்லை. பாஜகவுடன் முறித்துக்கொண்டு, மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார்.

மோடி போல அரசியல் வியூகங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைத்த ஜெகன் மோகன் ரெட்டி மோடிக்கு 2014 தேர்தல் வியூகங்களை வகுத்தவரையே அடுத்த சட்டமன்ற தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு வகுக்க கோரினார். தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பிரசாந்த் கிஷோருடன் இணைந்தார். இதனையடுத்து பிரசாந்த் வகுத்துக்கொடுத்த வியூகத்தின்படி 15 மாதங்களில் 3,000 கி.மீ. பயணம் செய்து இரண்டரை கோடி மக்களை சந்தித்தார் ஜெகன்மோகன். அப்போதுதான் ஜெகன் மோகன் ரெட்டியை கத்தியால் குத்தி தெலுங்கு தேச தொண்டர் ஒருவர் கொலை செய்ய முயற்சித்தார். ஒட்டுமொத்த மக்களையும் 'ஜெகன் அண்ணா அழைக்கிறார்' என்ற போஸ்டர்களால் கவர்ந்து பொது மக்களையே ஜெகன்மோகனை அண்ணா என அழைக்க வைத்தார். ஜெகனின் பிம்பம் ஒருபுறம் உயர மற்றொரு புறம் சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கை சரிக்கவும் திட்டங்களை தீட்டினார்.

‘உங்களை நம்பமாட்டோம் பாபு’, ‘பை-பை பாபு’ ஆகிய வாசகங்களுடன் கூடிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் பரப்பப்பட்டது. அவரின் இந்த வியூகங்கள் சரியான முறையில் வேலை செய்தன. இது ஆந்திர சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அள்ளிக் கொடுத்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி தன்னுடைய அப்பாவின் பதவியை சுலபமாக கேட்டார். ஆனால், தற்போது மக்களின் செல்வாக்குடன் தன்னுடைய தந்தை பெற்ற அதே அந்தஸ்துடன் 151 சீட்டுகளை சட்டமன்றத்திலும், 22 சீட்டுகளையும் பெற்று மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT