ADVERTISEMENT

தீர்ப்பு வந்தபிறகே..! ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பம் சபதம்!

09:30 AM Oct 26, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

"வாய்மையே வெல்லும்' என்ற பொருளில்தான் அசோகச் சக்கரச் சின்னத்துக்குக் கீழ் "சத்தியமேவ ஜயதே' என்ற வாசகம் பொறிக் கப்பட்டுள்ளது.

ஆனால் சாத்தான்குள போலீசார் "லத்தியமேவ ஜயதே' என ஆடிய ஆட்டம் சர்வதேசிய அளவில் பேசுபொருளானது. கண்ணீர் நின்றாலும் காயம் ஆறாத அந்தக் குடும்பத்தினர் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்.

கிறிஸ்தவர்கள் இறந்த பிறகு பொதுவாக அவர்களை அடக்கம் செய்து கல்லறை கட்டி வழிபடுவது சமூக வழக்கம். வருகின்ற நவம்பர் 2-ஆம் தேதி கல்லறைத் திருநாள் கொண்டாடப்படவுள்ள வேளையில், "சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் விரைவாக விசாரிக்கப் பட்டு தீர்ப்பு வந்த பிறகே கல்லறையை எழுப்பு வோம்' என குரல் எழுப்பி யுள்ளனர் அவரது குடும்பத்தார்கள்.

பெர்ஸி

""வெள்ளிக்கிழமை மத்தியானம் வீட்டில் சாப்பிட்டுப் போன பென்னிக்ஸை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. அன்னைக்கு நைட் 7 மணிக்கு வந்து வீட்டிற்கு தேவையானதையெல்லாம் வாங்கி வைத்து விட்டுப் போன பென்னிக்ஸ், அப்பா நேரமாகியும் வீடு திரும்பாததால்... "என்ன ஆச்சு..? ஏன் வரலை'ன்னு விசாரிக்கையில்தான் அவரை போலீஸ் புடிச்சிட்டுப் போனதாக தகவல் வந்தது. என் கொழுந்தனும், சம்பந்தியும் "வந்துடுவாங்க... பதட்டப்படாதீங்க...'ன்னு சொன்னாலும் மனசு கேட்கலை. கொஞ்ச நேரம் கழித்து என் அண்ணன், தம்பி என்கிட்ட வந்து, "இப்ப வரைக்கும் விட மாட்டேனுங்கிறாங்க. நீ வந்து, விட்டுடுங்கன்னு போலீஸ் ஸ்டேஷனில் கேட்டால் விட்டுடு வாங்க'ன்னு சொல்ல, நானும் அங்க போனேன். பாவிக... விடலை. இருந்தாலும் நமக்குத் தெரிஞ்ச அங்க வேலைபார்த்த மெய்ஞ்ஞானபுரம் பையனைக் (காவலர் தாமஸ் பிரான்சிஸ்) கூப்பிட்டுக் கேட்கையில், "சாப்பாடு சாப்பிட்டுட்டு மாத்திரையைப் போட்டுட்டுப் படுத்துட்டாங்க. காலையில் விட்டுடுவாங்க'ன்னு சொல்ல... அங்க இருக்கவேண்டாம்னு வீட்டுக்கு வந்துட்டேன். பின்னாடி கேட்கையில்தான் மெய்ஞ்ஞானபுரம் பையனும் சேர்ந்து இவுக இரண்டு பேரையும் அடிச்சிருக்கானுக. போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போன அன்னைக்கு மட்டும் என்ன எதுவெனக் கேட்காமலேயே இரண்டு போர்வையும், 2 கலர் சாரமும், 2 வெள்ளைச்சாரமும் கொடுத்து விட்டிருந்தேன். அத்தனையிலும் ரத்தம்... அப்படி கொடூரமாக அடிச்சிருக்கானுக.

ஜெயிலுக்கு இரண்டுபேரையும் கொண்டு போகையில் அங்கே யாரிடமிருந்தோ போனை வாங்கி, ‘"இப்போதைக்கு எதுவும் செய்யவேண் டாம். உடனே ஜாமீனில் எடுக்கின்ற வேலையைப் பாருங்க. இல்லைன்னா இன்னும் கேசைப் போட்டுடுவானுக' என எனக்கும், என்னுடைய அண்ணனுக்கும் அவர் கூறியதுதான் கடைசி வார்த்தை. வெள்ளிக்கிழமை சாப்பிட்டுவிட்டுப் போன மகனை ஜெயிலிலாவது பார்த்துடலாமென கோவில்பட்டி கிளைச்சிறை வாசலிலேயே உட் கார்ந்து பார்த்தேன். கடைசி வரைக்கும் அவனைப் பார்க்க முடியலை! திங்கட்கிழமை இரவில், "உங்க பையனுக்கு பிரஷர் இருக்கிறதா?'’எனக் கேட்டு ஜெயிலிருந்து போன் அடிச்சாங்க. ‘"இல்லையே' என்றதற்கு, ‘"இல்லம்மா... பிரஷர் அதிகமாயிட்ட தாலே அவரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறோம்'’ என்றாங்க!

செல்வராணி

நாங்களும் அவசர அவசரமாக அந்த நேரத்திலேயும் வண்டியை எடுத்துட்டுப் புறப்பட்டோம். இடையில் அந்த எண்ணிற்கு போன் போட்டுப் பார்த்தோம். பதிலில்லை. அதற்கப்புறம் தான் தெரிஞ்சது பென் னிக்ஸ் இறந்துட்டான்னு. இது எப்படியும் அவருக்குத் தெரியக்கூடாது. மனதளவில் காயப்படுவாரென அழுது புலம்புகையில் தான் உறவுக்காரப் பெண் வந்து, "அண்ணனும் இறந்துட்டாராம்...'’என சொன்னாங்க. மொத்தமும் போச்சு..!. என்ன தப்பு செய்தார்கள்? ஏன் அவர்களை அடித்தார்கள்..? ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு நபர்களையும் இழந்த என் நிலைமையை இப்போதாவது போலீசார் உணர்ந்திருப்பார்களா..? இதைத்தான் நீதிபதி பாரதிதாசன் ஐயாவிடம் கேட்டேன்'' என்கிறார் செல்வராணி.

மேலச்சாத்தான்குளம் கிறிஸ்துவின் ஆலய திருச்சபைக்குச் சொந்தமான கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கும் இருவருக்கும், கிளைச் சிறையிலிருந்த போது கைலிகள் உடுத்தாமல் பருத்தியிலான துண்டுகளையே கட்டி வந்துள்ளனர். இவர்களுக்காக முதல்நாள் நான்கு துண்டுகளும், மறுநாள் நான்கு துண்டுகளும் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் குறிப்பெழுதியாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மூத்த மகள் பெர்சியோ, ""வழக்கில் விரைவாக தீர்ப்பு வந்தபிறகுதான் கல்லறை கட்டப்பட வேண்டுமென்பது குடும்பத்தார்களின் ஒருமித்த கருத்து. அதுதான் உண்மையும்கூட. பிரேதப் பரிசோதனையின்போது எங்களிடம் பேசிய நீதிபதி பாரதிதாசன் உங்களுடைய உணர்வுகளை மதிக்கிறேன். பிரேதப் பரிசோதனைக்கு சம்மதியுங்கள். நீங்கள் கொடுக்கின்ற அத்தனை சாட்சிகளையும் நான் விசாரிக்கிறேன் என்று கூற, சம்பவம் நடந்த சூழலிருந்த உறவினர்கள், தம்பியின் நண்பர்கள் உள்ளிட்டோர்களை விசாரிக்க ஆரம்பித்து நம்பிக்கையளித்தார். நீதித்துறை மேல் அபரிமிதமான நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இருப்பினும் இவ்வழக்கினை தாமதப் படுத்தாமல் விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே நாங்கள் நிம்மதியடை வோம்'' என்கிறார் அவர்.

படங்கள்: விவேக்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT