ADVERTISEMENT

ஜெ. கொடுத்த வாக்குறுதி..! அலட்சிய எடப்பாடி! அரசுக்கு நட்டம் ரூ.20 ஆயிரத்து 600 கோடி!

06:02 PM Jan 12, 2021 | rajavel

ADVERTISEMENT

"அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டாலும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்கமாட்டேன்' என முதலமைச்சர் எடப்பாடி பிடிவாதம் காட்டி வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள் அரசு ஊழியர்கள் சங்கத்தினர். இதனால், தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொருளாதார வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, சம்பள உயர்விலுள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட வருடங்களாகப் போராடிவருகிறார்கள் அரசு ஊழியர்கள். அவர்களின் கோரிக்கையை புறந்தள்ளியே வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, "மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வோம்' என 2016 தேர்தலின்போது தெரிவித்தார். அதை நம்பி அ.தி.மு.க.வை அரசு ஊழியர்கள் ஆதரித்தனர். ஆட்சிக்கும் வந்தார் ஜெயலலிதா. நிறைவேற்றாமலேயே இறந்துபோனார். "அம்மா ஆட்சி' என்கிற எடப்பாடியும் கண்டுகொள்ளவில்லை என்ற கொந்தளிப்பு அரசு ஊழியர்களிடம் உள்ளது.

பழைய பென்ஷன் திட்டத்தின்படி அரசு ஊழியர் ஓய்வு பெற்றவுடன் குறிப்பிட்ட அளவில் பலன்களும், அதன் தொடர்ச்சியாக மாத ஓய்வூதியமும், இறந்தபிறகு அந்தக் குடும்பத்திற்கு கிடைத்து வந்தது. புதிய ஓய்வூதியத்தில் இவை சாத்தியமில்லை. எல்லாமே தாமதம்தான். அண்மையில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற 14ஆயிரம் பேரில் சிலர் இறந்தும் போய்விட்டனர். அவர்களின் குடும்பத்திற்கு இன்றளவிலும் பலன்கள் கிடைக்கவில்லை. இத்திட்டத்திற்கான உரிய நெறி முறைகளும் இல்லை.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸிடம் இது குறித்து நாம் விவாதித்த போது,’""பழைய ஓய்வூதிய திட்டம்ங்கிறது அரசு ஊழியர் களிடம் மாதம்தோறும் குறிப் பிட்ட தொகையை அரசு பிடித்துக்கொள்ளும். அரசு ஊழியர் ஓய்வுபெற்ற பிறகு அந்த தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான தொகை மாதாமாதம் பென்ஷனாக அரசு வழங்கும்.

இந்த திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசும் ஊழியர்களும் பங்களிப்பை செலுத்தும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத் தியது. அதாவது, அரசு ஊழியர் களிடம் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அதே அளவிலான தொகையை அரசும் செலுத்தும். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அந்த தொகை திருப்பித் தரப்படும். இதுதான் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம். இந்த திட்டத்தில் விருப்பமிருந்தால் மாநில அரசு இணைந்து கொள்ளலாம் என்ற அரசாணையின்படி, முதலில் கையெழுத்திட்டு இணைந்தவர் ஜெயலலிதா.

"இதனால் தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் நட்டம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டி, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யுங்கள்' என போராடினோம். உண்மைகளை காலதாமதமாக உணர்ந்த ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் "புதிய பென் ஷன் திட்டத்தை ரத்து செய் வோம்' என்றதுடன், அது குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் கமிட்டியை அமைத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இறந்து போனார். வல்லுநர் கமிட்டியின் காலத்தை மட்டும் நீட்டித்தே வந்த முதல்வர் எடப்பாடியிடம் கமிட்டியின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால், அதனை இதுநாள் வரை வெளியிட மறுப்பதுடன் எங்கள் கோரிக்கையில் அக்கறையும் காட்டவில்லை.

புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்புத் தொகை, அதற்கான வட்டி தொகை ஆகியவை மூலம் தற்போது சுமார் 36,000 கோடி ரூபாய் தமிழக அரசின் பொதுக்கணக்கில் இருக்கிறது. இந்த தொகையை ரிசர்வ் வங்கியிலுள்ள மத்திய அரசு கருவூலப் பெட்டகத்தில் வைத்திருக்கிறார்கள்.

இந்த 36,000 கோடியில் அரசு ஊழியர்களின் தொகை மட்டும் 18,000 கோடி ரூபாய். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தால், அரசு பங்களிப்பாக உள்ள 18,000 கோடி அரசுக்கு லாபம். பழைய பென்ஷன் திட்டமும் நடைமுறைக்கு வந்து விடும். இதுதவிர, 1.4.2019 முதல் அரசின் பங்களிப்பு தொகையை மட்டும் 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக மத்திய அரசு உயர்த்திவிட்டது. திட்டத்தில் தமிழக அரசு இணைந்திருப்பதால் இந்த உயர்வை முதல்வர் எடப்பாடி அரசும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

அதாவது ஒரு அரசு ஊழியரின் சம்பளத்தில் 100 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதே 100 ரூபாயை அரசும் வழங்கி வந்தது. ஆனால், 1.4.2019 முதல் அரசு ஊழியரிடம் 100 ரூபாய் பிடித்தம் செய்தால் அரசாங்கமோ தனது பங்களிப்பு தொகையை 140 ஆக செலுத்த வேண்டும். இதனால் இந்த 4 சதவீத உயர்வினால் சுமார் 1200 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவாகும். அந்த வகையில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தால் இந்த 1,200 கோடி ரூபாயும் அரசுக்கு லாபம்.

இது மட்டுமல்ல, இந்த திட்டத்தில் மத்திய கருவூல பெட்டகத்தில் தமிழக அரசு வைத்துள்ள 36,000 கோடிக்கும் தற்போது 3.17 சதவீத வட்டித் தொகைதான் தருகிறது ரிசர்வ் வங்கி. ஆனால், இந்த 36,000 கோடியில் அரசு ஊழியர்களின் பணமாக இருக்கும் 18,000 கோடிக்கு தமிழக அரசோ 7.1 சதவீத வட்டி தருகிறது. ரிசர்வ் வங்கியிடமிருந்து 3 சதவீத வட்டி வாங்கும் தமிழக அரசு, ஊழியர்களுக்கு 7 சதவீத வட்டி தருகிறது. இதன் மூலம் 4 சதவீத வட்டி அதிகமாக தருவதால் வருடத்திற்கு 1,400 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் 20,600 கோடி (18,000+1,200+1,400) ரூபாய் தமிழக அரசுக்கு லாபம் ஏற்படும்.

ஆனால், ரத்து செய்வதில் அக்கறை காட்ட மறுக்கிறார்கள் இதனால் 20,600 கோடி ரூபாய் நடப்பாண்டில் நட்டம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே 4 லட்சம் கோடிக்கு அதிகமான கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழக அரசு, புதிய பென்சன் திட்டத்தினால் 20,600 கோடி ரூபாய் நட்டத்தையும் சந்தித்து வருவது கவலை தருகிறது'' என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார் பிரடெரிக் ஏங்கெல்ஸ்.

இது குறித்த உண்மைகளை முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., தலைமைச்செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து தெரிவிப்பதற்காக, பிரடெரிக் ஏங்கல்ஸ் உள்ளிட்ட பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் பல முறை முயற்சி செய்தனர். ஆனால், அவர்களை சந்திக்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலரையும் சந்தித்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்கள் பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தினர். இவர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ""எடப்பாடி அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு இது மிகப்பெரிய உதாரணம். இப்படிப்பட்ட திட்டங்களால் ஏற்படும் நட்டங்களால்தான் அரசு கஜானா திவாலாகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வோம்'' என்று உறுதியளித்திருக்கிறார்.

தமிழக அரசின் நிதித்துறை வட்டாரங்களில் இது குறித்து விசாரித்தபோது, ""முன்னாள் நிதித்துறைச் செயலாளரான தலைமைச் செயலாளர் சண்முகமும், தற்போதைய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் அரசுக்கு ஏற்படும் நட்டங்களை குறைப்பது குறித்து எந்த உருப்படியான யோசனையையும் சொல்வதே இல்லை. குறிப்பாக, புதிய பென்ஷன் திட்டத்தின் பாதகங்களை முதல்வர் எடப்பாடியிடமும் நிதி அமைச்சரான துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சிடம் விவரித்து ரத்துசெய்ய முயற்சித்திருக்கலாம். ஏனோ அந்த முயற்சியை அவர்கள் எடுக்க வில்லை''’என்கின்றனர்.

இதுபற்றி கருத்தறிய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனை தொடர்புகொள்ள நாம் முயற்சித்தபோது அவரது எண் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தது. அலுவலக எண்ணை தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் தொடர்ந்து பிஸியாகவே இருந்தது. அரசுத் தரப்பின் விளக்கத்தை அளித்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT