ADVERTISEMENT

“என்ன கோடி கோடியா சேர்த்துட்டீங்களா...என்று கேட்டார் ஜெயலலிதா...” - சுவாரஸ்யம் பகிரும் ஜாகுவார் தங்கம்

06:06 PM Nov 26, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சினிமா சண்டை பயிற்சியாளர், இயக்குநர், தமிழ்நாட்டின் மூன்று முதல்வர்களுடன் நெருங்கிப் பழகியவர். சினிமா, அரசியல், ஆன்மீகம் என பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் ஜாகுவார் தங்கம், முன்னாள் முதல்வர்களுடனான தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான தனது நட்பை நமக்களித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது;

1981 ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கத்தில் ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தார். அப்போது எம்.ஜி.ஆர் என்னை அழைத்து ஜெயலலிதாவின் கூடவே இருந்து பார்த்துக்க சொன்னார். அவரின் ஆரம்ப கால அரசியலில் ஒரு வருட காலம் அவருடன் இருந்தேன். ஜெயலலிதா கட்சியில் சேரும்போது, நான் கட்சியின் முக்கியப் பிரமுகர்களுடன் முன் வரிசையிலேயே அமரும் அளவிற்கு அதிமுகவில் இருந்தேன். ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் போது, போலீஸ் எல்லாம் நிறைய அவருடன் இருக்கமாட்டார்கள். அதனால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரின் காருக்கு முன்பாக சென்று சிலம்பம் சுற்ற காருக்கு வழி ஏற்படுத்தி தருவேன். நீங்க சோர்வடையவே மாட்டீங்களா என்று கேட்டார். இப்படியே இருவரும் சகோதர சகோதரியாக பழகினோம்.

ஒருமுறை அவரது டிவி நிகழ்ச்சி தொடர்பாக வேலை செய்யும் போது, நிர்வாகத்தினர் என் சம்பளம் தொடர்பாக பேசினார்கள். நான் சம்பளம் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். மூன்று நான்கு நாட்கள் கழித்து ஜெயலலிதா என்னை அழைத்தார். அவரைச் சந்தித்தபோது, “என்ன கோடி கோடியா சேர்த்துட்டீங்களா” என்று கேட்டார். நான் சம்பளத்திற்கு எல்லாம் வேலை செய்யவில்லை. அன்புக்காகத்தான் வேலை செய்கிறேன் என்றேன். ஒரு கோடி ரூபாய் தருவதாக சொன்னார். வேண்டாம் என்று மறுத்துவிட்டு ஒரு ரூபாய் மட்டும் தாருங்கள் என்றேன். உங்கள் அன்பு மட்டும் போதும் என்றேன். உடனே அவர் தனது உதவியாளரைப் பார்த்து கண் அசைத்தார். அவர் ஒரு பெட்டியைக் கொண்டுவந்து ஜெயலலிதாவிடம் கொடுத்தார். அதிலிருந்து ஒரு யானை பொம்மையை எடுத்து ஜெயலலிதா என்னிடம் கொடுத்தார். அதனை எப்போதும் பத்திரமாக வைத்துக்கச் சொன்னார்.

கொரோனா காலத்தில் நான் எம்.ஜி.ஆர் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, எம்.ஜி.ஆர், ஜப்பான் நரம்பியல் டாக்டருக்கு இதேபோல் தங்க யானை பொம்மையைப் பரிசாகத் தரும் படம் இருந்தது. அப்போது ஜெயலலிதா கொடுத்த அந்த யானை பற்றிய ஞாபகம் வந்து அது தங்கமாக இருக்குமோ என உடனே அருகிலிருந்த ஒரு அடகு கடையில் கொடுத்து பரிசோதித்தபோது அது உண்மையான தங்கம் என்றும் அதன் கண்கள் வைரம் என்பதும் தெரிந்தது. அதனுடைய தற்போதைய மதிப்பு ஒன்னரை கோடி. அப்போதைய மதிப்பு நாற்பது முதல் ஐம்பது லட்சம் வரை இருக்கும். ஜெயலலிதாவிடம் கொடுக்கும் மனம் இருந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT