ADVERTISEMENT

காடு முழுக்க ஆக்கிரமித்த ஈஷா! ஒரு திகில் பயணம்!

06:17 PM Sep 08, 2018 | prakash

யானைகளின் வழித் தடங்களை மறித்து நிற்கும் ஆடம்பர விடுதிகளுக்கு சீல் வைப்பதோடு, இடிக்கவும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். "இந்த உத்தரவு, ஜக்கி வாசுதேவின் ஈஷாவுக்கும் பொருந்தும்' என்கிற சூழலியல் ஆர்வலர்கள், "ஆனால் அரசாங்கம் அதை ஏன் கண்டு கொள்ளவில்லை என்கிற கேள்வியை முன்வைக்கிறார்கள். அந்தக் கேள்வியில் உண்மை உள்ளதா என அறிய "நக்கீரன்' டீமின் பயணம் தொடங்கியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

7 மலைதாண்டி வெள்ளியங்கிரி சிவனை வழிபட்டு வந்த பாரம்பரியமிக்க பக்தர்களை, அடிவாரத்திலேயே பரவசத்தில் ஆழ்த்தி, பன்னாட்டு பக்தர்களின் நிதியை அள்ளும் திட்டத்துடன் கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டதுதான் காட்டை ஆக்கிரமித்த ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம்.

அதனைப் புலனாய்வு மையமாகக் கொண்டு நமது கார் பயணித்தது. பூண்டி என்கிற பகுதியிலிருந்து ஈஷாவுக்கு செல்லும் சாலையே வனத்துறைக்கு சொந்தமானதுதான் என்பதை வனத்துறையின் எச்சரிக்கைப் பலகைகள் காட்டுகின்றன. நத்தை போல ஊர்ந்து செல்லவேண்டிய பாதை. முட்டத்துவயல் என்னும் ஊரை ஒட்டியுள்ள குளத்துஏரியில் வசிக்கும் வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் ஈஷா ஜக்கியின் மீது வழக்கு தொடுத்துள்ளதால் சங்கத்தின் ரங்கநாயகி, முருகம்மாள் ஆகியோரைக் கண்டோம்..

"54 ஏக்கர் நெலமுங்க சாமி. அத்தனையும் இந்த ஜக்கி வாசுதேவ் எங்க கிட்ட இருந்து பறிச்சு வச்சிருக்காருங்கறது எங்க யாருக்கும் தெரியாது, பழங் குடியின மக்களான எங்களுக்கு உதவி செய்ய வந்த ஒரு மகராசன் சொல்லித்தான் எங்களுக்கே அது தெரியும். எங்க நிலத்தை யாராலும் வாங்க முடியாதாமே. அமெரிக்க கவுண்டர்னு ஒரு மகராசன் எங்க இருளர் சனத்துக்கு எழுதி வச்சுட்டு போன நெலமாம். இதைய எல்லாம் சொல்லித்தான் கோர்ட்ல வழக்கு போட்டோம். ஆனா, எங்க நெலத்துல பெரிய பெரிய கட்டடங்க கட்ட ஆரம்பிச்சு நைட்டும் பகலுமா 20 வண்டிகள்ல மண்ணு, கல்லுன்னு கொண்டு போனாங்க.


அதை எதிர்த்து, முள்ளங்காடு செக்போஸ்ட் பக்கத்துல இருக்கற எங்க நிலத்துக்குள்ள ராத்திரியோட ராத்திரியா குழந்தை, குட்டிகளோட பொம்பளைக நாங்க நின்ன போது, கத்தி கம்புகளோடு இருட்டுல மறைஞ் சிருந்த ஜக்கி ஆசிரம சாமியார்கள் எங்களைத் தாக்க வந்துட்டாங்க. நாங்க பயப்படலை. குட்டி, குஞ்சுகளோடு அங்கியே ராத்திரி படுத்துகிட்டோம். அடுத்த நாளு பிரச்சனை பெரிசாகறதை பார்த்துட்டு பஞ்சாயத்து ஆட்கள் எல்லாம் வந்தாங்க. "ஈஷாக்காரங்க யாரும் உங்க நெலத்துல எந்த வேலையும் செய்ய மாட்டாங்க..'ன்னு சொல்லி எங்களை சமாதானப்படுத்தி அனுப்பினாங்க. யானைகளோட வழிய மறைச்சு நெறைய கட்டடங்களை ஈஷா கட்டுறதால இங்கே எல்லாம் யானைகள் வந்துருதுங்க. விடியக்காலையில வர்ற யானைக, எங்க வீட்டை இடிச்சிடுது. …குழந்தைகளை வச்சுக்கிட்டு இருக்கிற நாங்க, "சாமீ.. போயிரு. வயிறார சாப்பிட்டு போயிரு'ன்னு யானைகிட்ட வேண்டிக்குவோம்'' என்ற அவர்களின் பயமும் பதற்றமும் அப்பட்டமாய் தெரிந்தது. வனத்துறையிடம் முறையிட்டும் பலனில்லை என்பதை உணர்ந்துள்ள மலை கிராமத்தினர், வழக்கின் தீர்ப்பை மட்டுமே நம்பியுள்ளனர்.

தொடர்ந்து நாம் சென்ற பயணத்தில், ஈஷாவின் ஆதி யோகி சிலை மலைகளை விழுங்கி நின்று கொண்டிருப்பது தெரிந்தது. பாறைகளை வெட்டி சாலை போட்டிருந்தார்கள். பயணிகள்- வாகனங்கள் என அந்த இடமே சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. அங்கிருந்து நாம், ஈஷா அமைந் துள்ள தியான மண்டபத்தை கடந்து தாணிக்கண்டி ஆதிவாசி கிராமத்திற்குப் போக வேண்டிய சூழல் இருந்தது. வழியை மறைத்துவிட்டதால், இப்படித்தான் கிராம மக்களும் கடந்து செல்கிறார்கள்.

கைகளில் கேமராக்களுடன் நாம் ஈஷாவின் தியான லிங்கத்திற்கு முன் இறங்கியபோது அங்குள்ள வனத்துறையினரால் நாம் தடுத்து நிறுத்தப்பட்டு, "படம் பிடிக்கக்கூடாது' என்ற வனவர் ராஜாவிடம், வீரப்பன் காட்டுக்குள்ளேயே பயணித்த "நக்கீரன்' என்பதை எடுத்துச் சொல்லி, பிறகு மாவட்ட வன அதிகாரி வெங்கடேசனைத் தொடர்புகொண்டு வலியுறுத்தினோம். வனத் துறையைச் சேர்ந்த இரண்டு பேரை துணைக்கு அனுப்புவதாக சொன்னார்.

அப்போது, நமக்கு எதிரே ஒரு பெரிய குழி வெட்டப்பட்டிருப்பதை பார்த்தோம். "யானைகள் ஈஷா கட்டடங்களுக்குள் வராமல் இருக்க வெட்டியது..' என வனத்துறையினரே சொல்ல, ஜக்கியின் கட்டடங்களுக்கு எந்த பாதிப்பும் வராதபடி, யானைகளை வழிமாற்றி திசை திருப்ப வெட்டப்பட்டிருக்கும் அகழியை படம் பிடித்துக் கொண்டோம். பின்னர் வனத்துறையினர் இருவரின் துணையுடன் நாம் அந்த வழியில் பயணமானபோது வழியில், மலைகளைப் பெயர்த்து வந்து ஏழு அடிக்கும் மேலாக சுற்றுச்சுவர் எழுப்பியிருந்ததைக் கண்டோம்.

யானைகள் வருகையைத் தடுப்பதற்காகப் பெரும் செலவு செய்து, சுற்றுச் சுவர்களில் எல்லாம் மின் கம்பிகள் பொருத்தி வைத்து இருந்தார்கள். கட்டடங்கள் கட்டக்கூடாதென எத்தனையோ முறை நகர ஊரமைப்பு துறையினரால், வன அதிகாரிகளால் சொல்லப்பட்ட போதும்.. ஜக்கியை எந்த உத்தரவுகளும் கட்டுப்படுத்தாது என்பதை நிரூபணம் செய்யும்படி அங்கே ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்ததை நாம் படம் பிடித்துக்கொண்டே கடந்தோம்.


தாணிக்கண்டி கிராமத்தில் நுழைந்ததுமே ஊர்த்தலைவரான நஞ்சனிடமும், சின்னான் என்ற இன்னொருவரிடமும் நாம் பேசினோம்... "ஈஷாக்காரங்க யானை பாதையை மூடிட்டதால, ஊருக்குள்ள யானை வந்திடுது'' என நம் கைகளைப் பிடித்துக் கொண்டு, இறக்கப் பாதைக்கு கூட்டிக் கொண்டு போனவர்கள்.. அங்குள்ள சிற்றாருக்குள் நம்மை இறக்கினார்கள். பனிக்கட்டி உருகி ஓடுவதுபோல ஜில்லிட்டது தண்ணீர்.

""சார் இங்க ஒரு யானை நின்னுக்கிட்டு இருந்துச்சு.. அவ்வளவு ஒசரம். ரெண்டு தந்தத்தாலேயும் இந்த மேட்டுப்பகுதியை கோபமா குத்தி இருக்கு பாருங்க'' என்றார் ஒருவர். வழித்தடம் மறிக்கப்பட்ட கோபத்தில், தண்ணீர் பருக வந்த யானை கோபத்தை வெளிப்படுத்தி யிருப்பதைக் காண முடிந்தது.

ஈஷாவில் தியான லிங்கம் அமைந்துள்ள, பாம்பு படம் வரைந்திருக்கும் அந்த இமாலய கல் சுவர் கடந்து உள்ளே போனோம். இளைஞர் களும், இளைஞிகளும் மொட்டைத்தலைகளுடன் ஏதோ நேர்ந்துவிடப் பட்ட பலி ஆடுகளை போல மந்திரம் சொல்லிய படியே செல்ல, உள்ளே வரும் மனிதர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. செல்போன் உள்பட எதுவும் அனுமதிக்கப் படுவதில்லை. எல்லாவற்றையும் நம் கேமராவின் கண்கள் பதிவு செய்துகொண்டன.

காட்டை அழித்து ஜக்கி அமைத்துள்ள ஈஷாவின் விதிமீறல்களின் உச்சமாக வி.ஐ.பி.களை ஏற்றிக் கொண்டு ஜக்கியின் த222 ரக ஹெலிகாப்டர் ஒன்று காட்டிற்குள் அமைக்கப் பட்டிருக்கும் ஹெலிபேடில் விலங்குகளை அச்சுறுத்தும் சப்தத்தோடு வானிலிருந்து இறங்கி கொண்டிருந்தது. நாம் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தோம்.


ஈஷாவுக்கு எதிராக போராடி வருபவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பன்னீர் செல்வத்தை சந்தித்தோம்... ""இந்த பழங்குடியின மக்களின் நிலத்தை அபகரித்த வழக்கு நடந்து கொண் டிருக்கும் நிலையில், ஜக்கியோ.. "எனது பட்டா நிலத்தில் நான் கட்டடங்கள் கட்டுவதில் என்ன தவறு இருக்கிறது' எனக் கேட்கிறார்.

நான் எனது பெயரில் நிலம் வைத் திருக்கிறேன் என்பதற்காக நான் வெடி மருந்து தொழிற்சாலை அமைத் தால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா..? வெடி மருந்து தொழிற்சாலை, சாய ஆலையை விடவும் நூறு மடங்கு கொடூரமானது யானைகளின் வாழ்விடங்களில் பெரிய பெரிய கட்டடங்கள் கட்டியிருப்பது.

வெள்ளியங்காடு மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கம் சென்னை ஹைகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில்... "ஐஆஈஆ எனச் சொல்லப் படுகிற மலைவழித் தள பாதுகாப்புக்குழுவிடமும், வனத்துறையிடமும் இருந்தும், ஏன் பஞ்சாயத்து போர்டிடம் இருந்தும் கூட ஈஷா யோகா மையம் எந்தவிதமான அனுமதியும் வாங்காமல்தான் கட்டடங்கள் கட்டி இருக்கிறது' என வனத்துறையே கோர்ட்டில் ஒப்புதல் அளித்திருக்கிறது. ஆனாலும் ஜக்கி வாசுதேவின் அதிகாரக் கரங்கள் எங்கும் செல்பவை.. என காலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் எங்கள் கரங்களில் தொடர் போராட்டம் இருக்கிறது'' என்கிறார் உணர்ச்சியாய்.

ஈஷா மையம் என்னும் பெயரில் ஜக்கி வாசுதேவின் அட்டூழியங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் இயற்கை ஆர்வலர் சிவாவிடம் பேசினோம்.

""நீலகிரி மாவட்டம் கூடலூரில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. யானைகள் வழித்தடத்தில்தான் உள்ளது ஜக்கி வாசுதேவின் ஈஷா மையமும், காருண்யா கல்வி நிறுவனமும் அமைந்துள்ள கோவை வனப்பகுதி. இந்தப் பகுதியை போளுவாம்பட்டி வனப்பகுதி என்று வனத்துறை ரெக்கார்டுகள் தெரிவிக்கின்றன. மொத்தம் 482 சதுர கிலோமீட்டர் காப்புக் காடுகளைக் கொண்ட இந்த பரப்பில் 329 யானைகள் இருப்பதாக வனத்துறை வெளியிட்ட சர்வே சொல்கிறது.

கன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை நீண்டு நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சமதள வனப்பகுதி இது. பாலக்காடு கணவாய் என்று பெயர். இந்தப் பகுதியில்தான் இந்தியா முழுதும் சுற்றித் திரிந்து இரை தேடும் யானைகள் தங்கி ஓய்வெடுத்து செல்லும். அந்த இடத்தை ஆக்கிரமித்துதான் ஈஷா, காருண்யா உள்ளிட்ட 32 நிறுவனங்கள் கட்டடங்கள் கட்டியுள்ளன.

கடந்த 3 வருடங்களில் ஈஷா மையத்திற்கு அருகே யானைகள் தாக்கி ஈஷாவில் வேலை செய்பவர் உட்பட 5 பழங்குடியினர் இறந்து போயிருக்கிறார்கள்.

1991-96 ஜெயலலிதா ஆட்சியில் கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி பிளசண்ட் ஸ்டே கட்டடம் கட்டப்பட்டது போல, யானைகளின் வாழ்விடத்தையும், வழித்தடத்தையும் ஆக்கிரமித்து தி.மு.க. ஆட்சியில் 40-க்கும் மேற்பட்ட கட்டடங்களை கட்டியுள்ளார் ஜக்கி வாசுதேவ்.


பிரதமர் மோடி இங்கே ஈஷாவுக்கு வந்து போனதும் மத்திய வனத்துறையிடம் இருந்து பெயரளவுக்கு ஒரு சிறப்பு அனுமதியை பெற்றி ருக்கிறார் ஜக்கி. இவர்களின் விதிமீறல்களுக்கு சாதகமாக அரசு தரப்பும் இதனை யானை களின் சரணாலயமாக அறி விக்கவில்லை. அறிவிக்கப்பட்டி ருந்தால் 10 கி.மீ. சுற்றளவுக்கு எந்தக் கட்டடமும், யாராலும் கட்ட முடியாது.

யானைகளுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பால், ஈஷாவுக்கு எதிராக பழங்குடி மக்கள் தொடுத்த வழக்கு, நிச்சயமாக வெற்றி பெறும். நீலகிரியில் விதி மீறிய தனியார் விடுதிகள் போல ஜக்கியின் ஈஷா ஆசிரம கட்டடங்களும் மற்றவையும் அகற்றப்படும் என நம்புகிறோம்'' என்றார்.

இயற்கை அளித்த கொடைகளை, இறைவன் பெயரைச் சொல்லி சுயநலமாக அனுபவிக்கும் கூட்டத்தாரையும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அதிகாரத்தையும் தகர்க்க நீதிதேவன் கரங்களுக்கு வலு உண்டு என இப்போதும் நம்பு கிறார்கள் பழங்குடி மக்கள்.

படங்கள் : அசோக்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT