Skip to main content

கரோனா... ஈஷா மையத்தில் ஆய்வு செய்ய கோவை மக்கள் கோரிக்கை 

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

 

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்களை முதலில் அடைக்க சொன்ன அரசு, அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது. தற்போது ஏப்ரல் 14ஆம் தேதி வரை நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மக்கள் தனித்திருப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. 

 

coimbatore




கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி சிவராத்திரி கொண்டாட்டத்தை கோவை ஈஷா மையத்தில் நடத்தினார் ஜக்கிவாசுதேவ். அதில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றதாகவும், வந்தவர்கள் அனைவரும் திரும்பச் சென்றுவிட்டார்களா என்று சந்தேகம் எழுந்திருப்பதாகவும், இதனால் அங்கு தங்கியிருப்பவர்களுக்கு இந்த நோய் தொற்று  இருக்கிறதா? பரிசோதனை செய்யப்பட்டுவிட்டதா? என்று பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
 

கரோனா வேகமாக பரவி வந்த நிலையில்தான் கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி கொண்டாட்டம் நடந்தது. ஈஷா யோகா மையத்தில் அரசு ஆய்வு செய்து மக்களுக்கு உண்மையை தெரிவித்திட வேண்டும் என்கிறார்கள் கோவை பகுதியினர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
School students at BJP road show; Order to take action

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், கோவை சாய்பாபா காலனியில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை பாஜக பேரணிக்கு அழைத்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

கோவையில் ‘ரோடு ஷோ’வைத் தொடங்கினார் பிரதமர் மோடி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Prime Minister Modi started the 'road show' in Coimbatore

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) பிற்பகல் நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இதற்கிடையே, கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி இன்று (18-03-24) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக ஏற்கனவே, கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18  ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன் 4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஏற்கனவே ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக இன்று (18-03-24) தமிழகம் வந்துள்ளார். பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கார் மூலம் வாகன அணிவகுப்பு (ரோடு ஷோ) நடக்கும் சாய்பாபா காலனிக்கு சென்றார். அங்கிருந்து கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே, ரோடு ஷோவை பிரதமர் மோடி தொடங்கினார். திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டுள்ளார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்கிறார்.