ADVERTISEMENT

குப்பை மேட்டில் கோல்ஃப் மைதானம்! அசத்திக் காட்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரி!

11:01 AM Jan 19, 2019 | Anonymous (not verified)

நவீன உலகம் எதிர்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்றுதான் குப்பைமேடுகள். வானுயர மலைபோல குவிக்கப்பட்டிருக்கும் இந்தக் குப்பைகளால் ஏகப்பட்ட பிரச்சனைகளைப் பொதுமக்கள் சந்திக்கின்றனர். திடீரென்று அவற்றில் தீப்பற்றிக் கொள்வதால் காற்று மாசு, சுகாதாரக்கேடுகள் உள்ளிட்ட ஏராளமான அசவுகரியங்களை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இந்தக் குப்பைமேடுகளை அகற்றுவது குறித்தான தொலைநோக்குத் திட்டங்கள் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், நூறு ஏக்கர் பரப்பளவில் இருந்த 13 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை வெறும் ஆறே மாதங்களில் அகற்றி, அதில் கோல்ஃப் மைதானம் அமைக்கும் பணியிலும் இறங்கியிருக்கிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் கடந்த ஆண்டு மே மாதம் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றவர் அஷீஷ் சிங். இவர் பொறுப்பேற்கும் முன்புவரை அந்தப் பகுதியில் குவிக்கப்படும் திடக்கழிவு மேடுகளை அகற்ற தனியார் நிறுவனங்களிடம்தான் காண்ட்ராக்ட் விடப்பட்டிருந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடந்துவந்த இந்தப் பணியில் வெறும் 2 லட்சம் மெட்ரிக் டன் குப்பையை மட்டும் அந்த நிறுவனங்கள் அகற்றியிருக்கின்றன. முறையான திட்டமிடல் இல்லாமல் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை அறிந்த அஷீஷ் சிங், தானே முழுமையான கவனம் செலுத்தி முழுவீச்சில் இந்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்.

இதற்காக, பயோ-ரெமெடியேசன் எனப்படும் உயிரி மாற்று முறையைப் பயன்படுத்தி இருக்கிறார் அஷீஷ். அதாவது மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து அவற்றுக்கான ஆலைகளுக்கு அனுப்பும் முறை. இதன்மூலம், உடனடியாக குப்பைகள் பிரிக்கப்பட்டு, அதன் அளவைக் குறைக்க முடிந்திருக்கிறது.

அதேபோல், கட்டுமானப் பணிகளின்போது உருவான கழிவுகளை சேகரித்து மீண்டும் அவற்றைக் கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பியும் வைத்துள்ளனர். இப்படியாக மே மாதம் தொடங்கிய இந்தப்பணி கடந்த டிசம்பர் 05ஆம் தேதியே நிறைவடைந்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்ட தனியார் காண்ட்ராக்ட் நிறுவனங்கள் ரூ.65 கோடிக்கும் மேல் கூலியாக வாங்கியிருக்க, ஆறு மாதங்களில் ரூ.10கோடிக்கும் குறைவான செலவிலேயே ஒட்டுமொத்த பணிகளையும் நிறைவுசெய்து நிதி மேலாண்மையில் அசத்தியிருக்கிறார் அஷீஷ். இந்தப் பணியில் முழு ஒத்துழைப்பு தந்த தனது குழுவுக்கும் அவர் நன்றி கூறியிருக்கிறார்.

சுமார் ரூ.400 கோடி மதிப்புள்ள இந்த நிலத்திலிருந்த குப்பைக் குவியலை அகற்றியதோடு மட்டுமல்லாமல், அதில் கோல்ஃப் மைதானத்தை அமைக்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்திருக்கிறார் அஷீஷ். அரசுத் துறை அதிகாரிகளும், அரசு நிறுவனங்களும் நினைத்தால் நல்ல செயல்கள் எதையும் சாதித்துக் காட்டலாம் என்பதற்கு உதாரணம் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அஷீஷ் சிங். திடக்கழிவு மேலாண்மையில் மைல்கல்லாக இருக்கும் இந்த சாதனையை இந்தியா முழுமைக்கும் கடைபிடிக்கலாமே!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT