ADVERTISEMENT

அமைதிப்படையா... அழிவுப்படையா? - இலங்கையில் மாறிய இந்தியாவின் முகம்

09:57 AM Mar 31, 2018 | raja@nakkheeran.in


மார்ச் 31 - இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படை திரும்பி வந்த நாள்

ADVERTISEMENT

இந்திய இராணுவம் உலகத்தின் இரண்டாவது பெரிய இராணுவம். மற்ற நாட்டு இராணுவத்தினரை விட கண்ணியத்துக்குப் பெயர் போனவர்கள் இந்திய ராணுவ வீரர்கள் என்கிறது இந்திய அரசு. உண்மையில் இந்திய இராணுவம் அமைதியானதா என்று கேட்டால், இந்தியாவின் அமைதிப்படை ஈழத்தில் நடத்திய கொடூரத்தை கண்டவர்கள் இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

ADVERTISEMENT

இலங்கையில் வாழும் தமிழர்கள் இது எங்கள் மண், இங்கு எங்களுக்கும் சமஉரிமை வேண்டும், அதிகாரம் வேண்டும் என கேட்டபோது, இலங்கையில் உள்ள பெரும்பான்மை சமூகமான சிங்களர்கள், இது எங்களது மண், தமிழர்கள் எங்கள் அடிமைகள் என்றதால் உருவானது சர்ச்சை. ஆரம்பத்தில் சாத்வீகமாக போராடினார்கள். சிங்கள இராணுவத்தினரின் கொடூரத்தால் தமிழ் இளைஞர்கள் துப்பாக்கி தூக்கினார்கள். இருதரப்பும் துப்பாக்கிகள் வழியாக பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முயன்றன. ஒரு கட்டத்தில் இலங்கையரசும், தமிழக போராளி குழுக்களும் பிராந்திய வல்லரசான இந்தியாவின் உதவியை எதிர்பார்த்தன.

இந்தியாவோ சிங்கள அரசுக்கும் கை கொடுத்தது, தமிழர் போராளி குழுக்களிடமும் கைகுலுக்கியது. நேரத்துக்கு தகுந்தாற்போல் ஆதரவு – எதிர்ப்பு நிலையை எடுத்து பிரச்சனையை தீர்க்காமல் புகைய வைத்துக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் தான் இலங்கை பிரதமராக பிரேமதாசா இருந்த காலத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி முடிவுகள் எடுத்தார். அந்த முடிவுகளின் படி, இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த அமைதி காக்கும் படை இந்தியா சார்பில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

10 ஆயிரம் வீரர்களைக் கொண்ட 4வது, 36வது, 54வது, 57வது படைப்பிரிவுகள் இலங்கைக்கு சென்றன. இலங்கையின் தமிழர் பகுதிகளில் ஊர்வலம் வந்த இந்திய ராணுவத்தை பூமாலையிட்டு வரவேற்றார்கள் தமிழர்கள். 1987 ஆகஸ்ட் 4-ந்தேதி தம் மக்களிடம் இயக்கத்தின் நிலையை விளக்க சுதுமலையில் சொற்பொழிவாற்றினார் பிரபாகரன். இந்தியா நமக்கு சாதகமாயிருக்கும் என நம்புகிறோம் என பேசிய மறுநாள் 5-ந்தேதி விடுதலைப்புலிகளின் முதன்மை தளபதி யோகி தலைமையிலான போராளிகள், அமைதிப்படை ஜெனரல் குபேந்தர்சிங்கிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்தனர். மற்ற இயக்கங்களும் ஒப்படைத்தன. ஆனால் போராளி குழுக்கள் சிலவற்றை இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான ரா ரகசியமாக வளர்த்தது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக அவர்களை கொம்புசீவி விட்டதால் விடுதலைப்புலிகள் மீது சகோதரக்குழுக்கள் துப்பாக்கி சூடு நடத்தின. இதனால் விடுதலைப்புலிகள் தரப்பில் உயிர் சேதம் அதிகமானது. அது பற்றி விடுதலைப்புலிகள் இந்திய அமைதிப் படையிடம் முறையிட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதோடு இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை இந்திய அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டார்கள்.


இதையெல்லாம் கண்டித்து விடுதலைப்புலிகள் 13.9.87 அன்று இந்திய அரசுக்கு 5 அம்ச கோரிக்கையை வைத்தனர். அவை,

1. தமிழ் மண்ணிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேற வேண்டும்.

2. அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

3. தமிழ் பிரதேசத்தில் சிங்கள காவல் நிலையம் திறக்கப்படுவது நிறுத்தவேண்டும்.

4. தமிழ் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்தப்பட வேண்டும்

5. வட-கிழக்கில் இடைகால ஆட்சி உடனே நிறுவ வேண்டும்.

ஒரு நாள் கெடு வைத்து உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார்கள். இந்தியாவிலிருந்து பதிலேதும் இல்லாததால் தலைமை கட்டளைப்படி 15.09.87 காலை யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவில் முன்பு கோரிக்கைகளை முன்வைத்து விடுதலைப் புலிகளின் தளபதி திலீபன் உண்ணாவிரதமிருந்தார், மக்களின் ஆதரவு ஏகமாக கிடைத்தது. இந்தியாவின் ஆதரவு கிடைக்கவில்லை. தண்ணீர் கூட அருந்தாத திலீபனின் உண்ணாவிரதத்தால் உடல் மெலிந்தது. 14வது நாள் அதாவது 1987 செப்டம்பர் 26ந்தேதி திலீபன் மரணமடைந்தார். தமிழீழ பகுதியே கொந்தளித்தது. இந்திய ராணுவத்தை மக்கள் தாக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி இடைக்கால நிர்வாகசபை அமைக்குமாறு இலங்கை பிரதமர் ஜெயவர்தனாவுக்கு நெருக்கடி தர பேச்சுவார்த்தை பலாளியில் ஆரம்பமானது.

இந்தியா, இலங்கை அரசுக்கு நெருக்கடி தந்து நிர்வாக சபை அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்தது. இடைக்கால நிர்வாக சபையில் இடம் பெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 12. இதில் விடுதலைப் புலிகளுக்கு 2 இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் விடுதலைப்புலிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கைக்கான இந்திய தூதரான முதன்மை செயலாளர் ஹர்திப்புரி மற்றும் புலிகளின் துணை தலைவர் மாத்தையாவும் இலங்கை அரசுடன் பேசினர். பின்னர், 12 உறுப்பினர்களில் விடுதலைபுலிகள் - 7 பேர், மீதி மற்றவர்களுக்கு என முடிவானது. விடுதலை புலிகள் தரப்பிலிருந்து தரப்பட்ட 7 பேர் பட்டியலில் என்.பத்மநாபன், சிவஞானம், கவிஞர்.காசி.ஆனந்தன், ரமேஷ் ஆகியோர் இருந்தனர். அதில் இரண்டாவது பெயராக இருந்த யாழ்ப்பாண மேயர் சி.வி.கே. சிவஞானத்தை இடைக்கால நிர்வாக சபை தலைவராக தேர்ந்தெடுத்தார் அதிபரான ஜெயவர்தனா. ஆனால் விடுதலை புலிகளோ முதல் பெயராகவுள்ள என்.பத்மநாபனை இடைக்கால நிர்வாகசபை தலைவராக நியமிக்கச் சொன்னார்கள். அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைக்குப் போய் வந்தவர், அதனால் அவரை நியமிக்க முடியாது என்றார் அதிபர். விடுதலைப் புலிகளோ என்.பத்மநாபன் தான் வரவேண்டும் என பிடிவாதம் பிடித்தார்கள். இறுதியில் 'நான் சொல்வதைத் தான் அந்த முதலமைச்சர் கேட்கனும். அப்படின்னா சரி' என்று கூறினார் ஜெயவர்தனா.

பேச்சுவார்த்தை நடக்கும்போதே, 1987 அக்டோபர் 2ந்தேதி பருத்தித்துறை துறைமுகத்தில் விடுதலைப்புலிகள் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 திறமையான வீரர்களைப் பிடித்தது சிங்கள ராணுவம். அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்றது விடுதலைப்புலிகள் தலைமை. மறுத்தார் இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சரான லிலித் அத்துலத்முதலி. கைதானவர்களை கொழும்பு கொண்டு செல்ல முயன்றார். கொழும்பு போனால் சாம்பல் கூட திரும்பி வராது என்பதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என திரும்பவும் கேட்ட விடுதலைப்புலிகள் தலைமை, நீங்கதான் எல்லா பிரச்சனைக்கு காரணம் என இந்தியா மீது குற்றம் சாட்டியது.

கைது செய்யப்பட்ட 17 போராளிகளும் அமைதிப்படை இருந்த பலாளி ராணுவ தளத்திலேயே இலங்கை ராணுவம் வைத்திருந்தது. 17 பேரை விடுதலைப்புலிகள் சார்பாக பாலசிங்கம், மாத்தையா இருவரும் இரண்டு முறை சந்தித்து பேசினர். மூன்றாவது முறை உணவு பொட்டலம் மூலம் சயனைட் குப்பி சிறைக்குள் அனுப்பட்டது. சையனைட் குப்பியை கடித்து 12 போராளிகள் இறந்தார்கள், 5 போராளிகள் உயிர் ஊசலாடியது. போராளிகள் இறந்த தகவல் மக்களுக்குத் தெரியவந்தது. இந்தியாவின் சதி என்று இந்திய-சிங்கள ராணுவ அலுவலகத்தைத் தாக்கத் தொடங்கினார்கள், ஜீப்களை எரித்தனர் மக்கள். இத்தகவல் டெல்லிக்குச் சென்றது. 1987அக்டோபர் 7ந்தேதி பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பாண்ட், ராணுவத் தளபதி சுந்தர் ஆகியோர் கொழும்பு சென்றனர். இலங்கை அதிபர் ஜெயவர்தனோவுடன் அவசர ஆலோசனை ஆரம்பமானது. இறுதியில் புலிகளின் ஆயுதங்களை சுத்தமாக கலைவது, புலிகளை அழிப்பது என ரகசிய முடிவெடுத்து ஆப்ரேஷன் பவன் நடவடிக்கையைத் தொடங்கினர். இந்தியா, தான் வளர்த்துவிட்ட ஒரு குழந்தையோடு மோதுவது தவறு என அமைதிப்படை பொறுப்பாளரான ஜெனரல் குபேந்தர்சிங் டெல்லி தலைமைக்கு எடுத்துக்கூறியும் பயனளிக்கவில்லை.

1987 அக்டோபர் 10 இந்திய வீரர்கள் தமிழர் பகுதிகளில் பாய்ந்தனர். அதற்கு முன்பு தமிழின பகுதியிலிருந்து தகவல்கள் வெளியே போகாமல் தடுக்க இலங்கை தமிழனத்துக்காக வெளிவந்த ஈழமுரசு, முரசொலி, நிதர்சனம் டி.வியின் அலுவலகங்கள் குண்டு வைத்து தகர்த்தது இந்திய ராணுவம். போர் ஆரம்பமானது. புலி ஆதரவாளர்கள் யார், யார் என முதலில் தேட ஆரம்பித்தவர்கள், மாலையிட்டு வரவேற்ற தமிழர்களை சுட்டுக் கொன்றனர். காலையில் தூங்கி எழும் வீரர்களுக்கு சிறுநீர் மஞ்சளாக வந்தால் போதும், இதற்கு தமிழின பெண்கள் தான் காரணமென செக்கிங் என்ற பெயரில் கற்பை சூறையாடுவார்கள். உடல்பசி, சூடு தீர்ந்ததும் அப்பாடா என வருவார்கள் கண்ணியமிக்க இந்திய ராணுவ வீரர்கள்.


விடுதலை புலிகள் - இந்திய ராணுவம் நேரடியாக மோத ஆரம்பித்த சமயம், இந்தியா இங்கிலாந்து இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் இங்கிலாந்து ஜெயித்துவிட்டது. உடனே கர்ஜித்த பிரிகேடியர் பெர்ணான்டஸ் என்ற அதிகாரி, 'இந்தியா தோத்துடுச்சின்னு பட்டாசு வெடிப்பானுங்க தமிழனுங்க. அதைத் தடுங்க' என்றார். அதை அப்படியே கேட்டுக்கொண்ட வீரர்கள் வீரம் வந்தவர்களாக அப்பாவிகள் வாழ்ந்த கோண்டா, கொக்கு, நல்லூர், யாழ்பாணம் மீது குண்டு வீசினார்கள். தமிழர் வீடுகளில் காலை, இரவு, விடியற்காலை என காலம் நேரமில்லாமல் புகுந்து புலிகளை தேடுகிறோம் என்று சொல்வார்கள். வீட்டில் உள்ள ஆண்கள், இளைஞர்கள் என 30 பேர், 40 பேரை இழுத்துச் செல்வார்கள். அவர்கள் யாரும் திரும்பி வந்ததேயில்லை. சுட்டுக்கொன்று கிணறுகளிலும், மலக்குழிகளிலும் போட்டுவிடும் இந்திய அமைதிப்படை. விடுதலைப்புலிகள் இந்திய ராணுவத்தை தாக்கும் போதெல்லாம் இந்திய படைகள் பழிவாங்க, தமிழர் பகுதிகளை குறிவைத்து ஆண்களைக் கொல்வதும், பெண்களின் கற்பை சூறையாடுவதும் தொடர்ந்தது. அதே போல் விடுதலைப் புலிகள் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கும் போது அடைக்கலம் தருகிறவர்கள் என்று மீண்டும் அதே தமிழர்களின் வீடுகளில தேடுதல் என்ற பெயரில் தீ வைப்பு, கற்பழிப்பு செய்தனர் இந்திய இராணுவ சிப்பாய்கள்.

1988 டிசம்பர் மாதம் இலங்கையில் தேர்தல் நடந்து. இலங்கையின் புதிய அதிபராக, அது வரை பிரதமராக இருந்த பிரமதேசா 2.1.89 ஆட்சிக்கு வந்தார். அப்போது நாட்டில் இந்தியப்படை – விடுதலைப்புலிகள் இடையேயான போர், ஜே.வி.பி கலவரம் என நடந்து வந்தது. அமைதி ஏற்படுத்த நினைத்த அதிபர் பிரேமதாசா அதிகாரிகளை அழைத்து, இந்திய தலையீடு என் ஆட்சியில் இருக்கக் கூடாது, அதோடு கலவரம் செய்கிற மத்த இயக்கத்தையும் கூப்பிடுங்க பேசலாம் என்று சொல்லி பேச ஆரம்பித்தார். பிரபாகரனிடம், 'அமைதிப்படை நம்ம நாட்டை விட்டு வெளியேறனும். அதுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்க, செய்கிறேன்' என்றார். புன்னகைத்தபடியே தலையாட்டினார் பிரபாகரன். இலங்கையில் 1989-மே-19 பிரேமதாசா அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

அதே நேரம் இந்தியாவில் போபர்ஸ் ஊழல் வழக்கால் ராஜிவ்காந்தி பிரதமர் பதவியில் இருந்து இறங்கியிருந்தார். சமூகநீதி காவலர் வி.பி.சிங் பிரதமராகயிருந்தார். அப்போது வி.பி.சிங்குடன் நெருக்கமாக இருந்த தமிழக முதல்வர் கலைஞரின் நெருக்கடியால் இலங்கையிலிருந்து அமைதிப்படையை திரும்ப அழைத்துக்கொண்டது வி.பி.சிங் அரசாங்கம். இந்தியா திரும்பும் அமைதிப்படையை தமிழக முதல்வராக இருந்த கலைஞர், நேரில் போய் வரவேற்க வேண்டும் என்றார்கள். என் தொப்புள் கொடி உறவை சுட்டுக்கொன்றுவிட்டு வரும் படையை நான் போய் வரவேற்கமாட்டேன். இதனால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டாலும் கவலையில்லை என்று கூறிவிட்டார். இதற்கு எதிராக வரிந்துகட்டியது காங்கிரஸ், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக போன்ற கட்சிகள்.

1987 ஜீலை முதல் 1990 மார்ச் 31ந்தேதி வரை இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறி தமிழகம் வந்தடைந்தபோது அரசு வெளியிட்ட கணக்கின்படி இந்திய ராணுவ வீரர்கள் 1,115 பேர் இறந்து போயிருந்தார்கள். ஆனால் இதைவிட பத்து மடங்கு அதிகமாக ஈழத்தமிழர்களை அழித்திருந்தது இந்தியாவின் அமைதி காக்கும் படை. தான் வளர்த்த குழந்தையை சொடக்கு போடும் நேரத்தில் அழித்துவிடுவோம் என தம்பட்டமடித்துவிட்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை அங்கிருந்து தோல்வியோடு வந்தது இந்தியாவின் அதிகாரத் திமிரின் மீது பூசப்பட்ட கரியாகவே இன்றளவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT