ADVERTISEMENT

கலைஞரை நினைத்த நேரத்தில் சந்தித்தேன்; ஸ்டாலினுக்காக மாதக்கணக்கில் காத்திருக்கிறேன் - ‘கலைஞரும் நானும்’ எஸ்ஏசி நெகிழ்ச்சி!

11:34 AM Oct 07, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர், புரட்சி கரு்துக்களை தன்னுடைய திரைப்படம் வாயிலாக தெரிவித்தவர், நடிகர் விஜய்யின் தந்தை என்ற பன்முக அடையாளத்தைக் கொண்டிருப்பவர் எஸ்.ஏ. சந்திரசேகர். எம்ஜிஆர் ஆட்சியில் கலைஞருடன் இருந்து பல படங்களில் பணியாற்றியவர். கலைஞர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்ஜிஆர் அரசின் எதிர்ப்பை சம்பாதித்தவர். அதிமுக ஆட்சியில் ‘தலைவா’ படத்துக்கு விஜய் சந்தித்த எதிர்ப்பை, 40 ஆண்டுகளுக்கு முன்பே தன் படத்திற்கு எம்ஜிஆரிடம் இருந்து அந்த எதிர்ப்பை பார்த்தவர். இந்த நிலையில், கலைஞருக்கும் அவருக்கும் இடையேயான தொடர்பு, பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவரிடம் நாம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் தடாலடி பதில்கள் வருமாறு,

எம்ஜிஆர் இருந்த காலத்திலேயே திமுக முன்னாள் தலைவர் கலைஞருடன் மிக நெருக்கமாக இருந்தீர்கள். தற்போது திமுக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சி தலைமையுடன் அதே தொடர்பில் இருக்கிறீர்களா?

கலைஞருடன் எனக்கு இருந்த நட்பு என்பது சினிமாவையும் தாண்டியது. வேறு யாருக்கும் கிடைக்காத ஒன்றாக எனக்கு மூன்று படங்களுக்கு அவர் வசனம் எழுதியிருக்கிறார். எங்கள் உறவு என்பது அரசியலையும் தாண்டியது. இத்தனை படங்களில் பணியாற்றினாலும் அவர் என்னிடம் ஒருமுறை கூட அரசியல் தொடர்பாக பேசியதில்லை. கலைஞரிடம் இருக்கும் மிக முக்கிய சிறப்பம்சம் என்றால், அவர் நட்புக்கு தருகின்ற முக்கியத்துவம். அவருடைய கடைசி காலம் வரை தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரிடமும் நடப்பு பாராட்டினார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்தார். அந்த வகையில் கலைஞருக்கு நிகரான ஒருவர் அரசியலில் இல்லை என்றே கூறலாம்.

எப்போது அவரை பார்க்க வேண்டும் என்றாலும் முன் அனுமதி பெறாமல் செல்லாம். ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்றால், என்ன மாதிரியான முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு வாரத்திற்கு முன் அனுமதி கேட்க வேண்டும், அவர்கள் சொல்கிற நேரத்துக்குச் சென்று, அவர்கள் அழைக்கும்வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு முற்றும் நேர் மாறான தன்மையுடைவர் கலைஞர். திடீர் என்று கலைஞரை பார்க்க வேண்டும் என்றால், சண்முகநாதனுக்கு ஒரு ஃபோன் போட்டு, கலைஞரை பார்க்க வேண்டும் என்று சொல்வேன். அவர், “என்னய்யா திடீர்னு இப்படி சொல்ற, நிறைய அப்பாயிண்மெண்ட் தலைவருக்கு இருக்கே” என்பார். நான், “அண்ணே வீட்டுக்கு வரேன், கலைஞரை முடிந்தால் பார்க்கிறேன், இல்லை என்றால் போகிறேன்” என்று சொல்வேன். கலைஞர் வீட்டிற்குச் சென்ற உடன் அவர், கலைஞரிடம் போய் சொல்வார். மிக சில நிமிடத்திலேயே அவர் என்னை அழைப்பார். என்ன உதவி என்றால் அந்த ஸ்பாட்டிலேயே செய்வார்.

அந்த விதத்தில் அவரை யாரும் ஓவர்டேக் செய்ய முடியாது. மிக அன்பாக நண்பர்களைப் பார்த்துக்கொள்வார். அந்த வகையில் என் வயதுக்கு கலைஞருடன் பேசுவது என்பது மிக எளிதாக இருந்தது. தற்போது ஸ்டாலின் சார் மிக நல்ல முறையில் ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். நண்பர்கள் மட்டத்தில் பேசும்போது அதே கருத்தைத்தான் கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் உதயநிதிக்கு அடுத்த நாளே வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து தெரிவித்தேன். என்ன இருந்தாலும் முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரின் உதவியாளரிடம் அனுமதி கேட்டேன். கலைஞரை சந்திக்க வேண்டும் என்றால் ஒருமுறை அனுமதி கேட்டால், சில நாட்களிலேயே நம்முடைய தொலைபேசிக்கு கூப்பிட்டு இந்த நாளில் வர வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் ஸ்டாலினை பார்க்க அனுமதி கேட்டு 6 மாதம் ஆகிறது. இதுவரை கிடைக்கவில்லை.


அரசியல் தலைவருடன் நிறைய பழகியிருக்கிறீர்கள், உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா? தீவிர அரசியலுக்கு வருவீர்களா, வாய்ப்பிருக்கிறதா?

இந்த வயதில் நான் ஏன் இனி அரசியலுக்கு வரப் போகிறேன். அந்த மாதிரியான அரசியல் ஆசை தற்போது வரை இல்லை. நீங்கள் கூறியது போல் எம்ஜிஆரை எதிர்த்தே கலைஞருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தேன். ஒருமுறை கலைஞரை எம்ஜிஆர் ஆட்சியில் கைது செய்தபோது, அதைக் கண்டித்து 'நீதிக்கு தண்டனை' என்ற பெயரில் கலைஞர் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருப்பது போன்று ஒருபக்க அளவில் செய்தித்தாளில் விளம்பரம் அளித்தேன். அப்போதே நான் யாருக்கும் பயப்படவில்லை. அந்த நேரத்தில் நான் இயக்கியிருந்த ‘நீதிக்கு தண்டனை’ படம் வெளியாகியிருந்தது. படம் நல்ல முறையில் போனதை அடுத்து, நான் காஷ்மீருக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றேன். திடீரென காஷ்மீர் போகிற வழியில் டெல்லியில் தங்கிருந்தபோது சண்முகநாதனிடம் இருந்து ஃபோன் வருகிறது. “எங்கயா இருக்க,” என்றார். நான் “டெல்லியில் இருக்கேன்” என்றேன். “இங்கே பத்தி எரியுது, டெல்லியில இருக்கியா! கலைஞர் பார்க்கனும்னு சொல்றார், உடனே வா” என்றார். நான் வருவதற்குள் என் படத்தை தடை செய்ய மாநில அரசு முயன்றதும், அதற்குள் கலைஞர் கேவியட் மனு தாக்கல் செய்திருந்ததும் எனக்குத் தெரிந்தது. எனவே அப்போதே எல்லா அரசியலையும் நான் பார்த்திருக்கிறேன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT