ADVERTISEMENT

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் பற்றி இந்து என்.ராம் பரபரப்பு பேச்சு!

04:44 PM Mar 06, 2020 | Anonymous (not verified)

சொந்த நாட்டு மக்களை அகதிகளாக்கும் மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து நாடே கொந்தளிக்கிறது. தொடர்ந்து போராட்டங்கள் நடக்கின்றன. மத்திய அரசு செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் இந்தக் கொடிய சட்ட திட்டங்களை எதிர்த்தும், சகோதரத்துவத்தை வலியுறுத்தியும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் தமிழக ஒற்றுமை மேடையின் சார்பில் குடியுரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், "பொதுவுடைமை, தேசியம், திராவிடம் போன்ற பல்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்களே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறோம். தங்களது அரசு தோல்வி அடைந்துவிட்டதால், அதை மறைக்க புதுப்புது சட்டங்களைக் கொண்டுவந்து வேடிக்கை பார்க்கிறது மோடி அரசு. இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழக அரசு ஆதரித்துப் பேசுகிறது. இதனால், பாதிப்பில்லை என்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், என்.பி.ஆர். தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதே அவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது'' என்றார்.

ADVERTISEMENT



"குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுத்தபோது, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எனக்கொரு ரகசிய கடிதத்தைக் கொடுத்தார். அதைப் பிரித்துப் படிக்காமலேயே தீர்மானத்தை நிறைவேற்றினேன். ஆட்சியே போனாலும் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். புதுச்சேரியில் இஸ்லாமியர் ஒருவர் முருகனுக்குக் கோவில் கட்டுகிறார். இதுதான் நம் மக்கள். நமக்கு மதங்களைப் பற்றி பாடம் எடுக்க இவர்கள் யார்?'' என்றார் ஆவேசமாக.

மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச்சு எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்தது. "சி.ஏ.ஏ. சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவுக்கு எதிரானது. தடுப்பு முகாம்கள் இல்லையென மத்திய அரசு சொல்வது முற்றிலும் பொய். அசாமில் தடுப்பு முகாம்கள் இருக்கின்றன. கர்நாடகத்தில் கட்டப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களிலும் இவற்றைக் கட்டியெழுப்ப மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதுகிறது மத்திய அரசு'' என்றார். சி.ஏ.ஏ. -என்.ஆர்.சி. -என்.பி.ஆர். குறித்த இந்து என்.ராமின் குரல் தொடர்ந்து ஒலித்துவருகிறது.

சட்டப் பாதுகாப்பு மன்றம் சார்பில், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்தல், அதில் இருக்கும் சவால்கள் மற்றும் கடமைகள் தொடர்பான விவாதம் சென்னையில் நடைபெற்றது. அதில் என்.ராம் பேசும்போது, "தேசிய மக்கள்தொகைப் பதிவேடு எனப்படும் என்.பி.ஆரை மத்திய அரசு அறிவித்திருக்கும் வடிவத்திலேயே கொண்டுவந்தால், அது மத்திய- மாநில அரசுகளுக்கிடையே மோதலை உண்டாக்கும்.

ADVERTISEMENT


பல மாநிலங்கள் என்.பி.ஆருக்கு எதிராக கிளர்ந்தெழும் வாய்ப்பு இருக்கிறது. காரணம், இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாக இருக்கிறது. ஏனெனில், மத்திய அரசே எல்லாவற்றிற்கும் உயர்ந்தது கிடையாது. அரசியலமைப்புச் சட்டம் அதற்குத் தனித்துவமான சில வாய்ப்புகளைக் கொடுத்தாலும், அது மாநில அரசுகளின் இறையாண்மைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. இதுபோன்ற சட்ட திட்டங்களைக் கொண்டு வரும்போது, இத்தனை பெரிய கிளர்ச்சி நாடு முழுவதும் உருவாகும் என்று மத்திய அரசு எதிர்பார்த்திருக்கவில்லை.

தேசிய குடிமக்கள் பதிவேட்டையும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான முன்வடிவம்தான் தேசிய மக்கள்தொகை பதிவேடு. இரண்டும் அடிப்படையில் பின்னிப் பிணைந்தவை. அசாம் மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு, மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்த மோசமான திட்டத்தை 1989-ல் இருந்து தனது அஜெண்டாவாகக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. இப்படியொரு வேண்டுகோளும் பா.ஜ.க.வில் இருந்து மட்டுமே வந்தது. மேலும், 1989, 1991, 1998, 1999, 2004 ஆகிய தேர்தல்களின்போது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கைகளிலும் இதைக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில், மிக கவனமாக "நாங்கள் வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், ஊடுருவியவர்கள் விவகாரத்தில் கவனம் செலுத்துவோம்' என்று மட்டுமே குறிப்பிட்டனர். 2019 தேர்தல் சமயத்தில் "சி.ஏ.ஏ. சட்டத்தைக் கொண்டு வருவதற்கான திட்டங்கள் இருக்கின்றன. அதேபோல், மற்ற மாநிலங்களிலும் என். ஆர்.சி.யை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனையில் உள்ளோம்' என்று தெரிவித்தனர்.

என்.ஆர்.சி. குறித்து 2014-ல் இருந்து நாங்கள் விவாதிக்கவில்லை என்று பிரதமர் குறிப்பிடுகிறார். ஆனால், அதில் உண்மை இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல்களும், குடியரசுத் தலைவரின் உரையுமே என்.ஆர்.சி.யை நாடு முழுவதும் கொண்டு வருவதற்கான திட்டத்தை வகுத்து வைத்திருப்பதை உறுதிசெய்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்கள் இந்த மோசமான சட்ட திட்டங் களால் யாருக்கும் பாதிப்பில்லை என்கிறார்கள். அவர் கள் தயவுசெய்து, இவற்றைப் பற்றி முழுமையாகவும், ஆழமாகவும் படித்து, அதில் உள்ள பாதகங்களை புரிந்துகொள்ள வேண்டும்'' என்று வலியுறுத்திப் பேசி னார். இந்தக் கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொகுப்பு: -ச.ப.மதிவாணன் படங்கள்: ஸ்டாலின்

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT