ADVERTISEMENT

கோகுல்ராஜ் கொலை வழக்கு! நெருங்கி வரும் தீர்ப்பு!

01:13 PM Dec 05, 2020 | rajavel

ADVERTISEMENT

திருச்செங்கோடு என்றாலே ஆண்டவன் அர்த்தநாரீஸ்வரர் நினைவுக்கு வருவார். இதற்கடுத்து நினைவுக்கு வருவது இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தான்.

ADVERTISEMENT

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் சமூக கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தின் சுவாதியும் கல்லூரிக் காதலர்களாக வண்ணமயமான எண்ணங்களுடன் வானில் சிறகடித்துப் பறந்தனர். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் இந்த பூமியில் புன்னகையுடன் வாழ முடிவு செய்திருந்தனர். சாதியில் பாகுபாடு உள்ள இவர்கள் முடிவு செய்தால், அதை சாதீய ஆணவம் அவ்வளவு எளிதில் அனுமதித்துவிடுமா?

2015-ஆம் ஆண்டு ஜூன்-23-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாகக் கிடந்த கோகுல்ராஜின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.

சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலை யில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். (கோர்ட் விசாரணைக்கு வரும் போது யுவராஜ் கோஷ்டி பண்ணிய அலப்பரையை தொடர்ந்து எழுதியுள்ளோம்) சாதி ஆணவப் படுகொலையான இதை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்தது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்ட்.30-ஆம் தேதி விசாரணையும் ஆரம்ப மாகியது. அரசு வக்கீலாக சேலத்தைச் சேர்ந்த கருணாநிதியும் யுவராஜ் தரப்பின் வக்கீலாக மதுரை ஜி.கே. என்ற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜுவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமான சாட்சி, கோகுல்ராஜின் காதலியான சுவாதி.

இவரும் கோகுல்ராஜும் திருச்செங்கோடு கோவில் மலையடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்த போதுதான், யுவராஜ் மற்றும் அவரது ஆட்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ். வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் இதை சாட்சியாக சொன்ன சுவாதி, வாழ்க்கைப் போக்கை நினைத்தாரோ என்னவோ, திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கின் போக்கையே மாற்றின.

அரசு வழக்கறிஞரான கருணாநிதியின் போக்குதான் இதற்குக் காரணம் என மனம் வெதும்பிய கோகுல்ராஜின் தாய் சித்ரா, அரசு தரப்பு வழக்கறிஞராக, சீனியர் வழக்கறிஞர் ப.பா.மோகனை நியமிக்க வேண்டும் என அப்போதைய நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம், சந்தியூர் வக்கீல் பார்த்திபன் மூலமாக மனு கொடுத்தார். அந்த மனு கிடப்பில் போடப்பட்டதால், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சித்ரா.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கருணாநிதியை விடுவித்து விட்டு, அரசு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமித்து உத்தர விட்டது. இதை தமிழக உள்துறைச் செயலாளரும் அரசாணை மூலம் உறுதிப்படுத்தினார். இந்த உத்தரவு வந்த போது நாமக்கல் நீதிமன்றத் தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.

2019 மே.05-ஆம் தேதி முதல் இந்த வழக்கு, மதுரை எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இப்போது திடீர் திருப்பமாக அரசு தரப்புக்கு வலுவான சாட்சிகள் கிடைத்துள்ளன.

வழக்கின் இப்போதைய நிலை குறித்து அரசு வழக்கறிஞர் ப.பா.மோகனிடம் கேட்டோம். "தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன்படி செல்போன் உரையாடல், சிசிடிவி பதிவுகள் இவற்றை ஒரு வழக்கில் ஆதாரங்களாக சேர்க்கும்போது ஆவண சாட்சியமாக குறியீடு செய்ய வேண்டும். ஆனால் போலீசோ, திருச்செங்கோடு மலையில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவை மெட்டீரியல் ஆப்ஜெக்ட் என்று குறிப்பிட்டுள்ளனர். இதை அரசு தரப்பு கவனிக்காமல் விட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதை சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், கோகுல்ராஜ் யாரென்றே தெரியாது என முதலில் சொன்ன சிசிடிவி கேமரா மதன்குமார், கடந்த நவ.27-ஆம் தேதி நடந்த விசாரணையில் உண்மையைச் சொல்லிவிட்டார். அதுவும் கோவில் உதவி ஆணையர் சூரிய நாராயண னின் சாட்சியத்திற்குப் பிறகு. இதனை இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக கருதுகிறோம்'' என்றார்.

"இப்போதுதான் இந்த வழக்கு விசாரணையில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது'' என்கிறார் வக்கீல் பார்த்திபன்.

டிச.02-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது கோகுல்ராஜ் கொலை வழக்கு. கூடிய விரைவில் தீர்ப்பை எதிர்பார்க்கலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT