ADVERTISEMENT

நேதாஜியின் காந்திமதி 'பாய்'.!!

02:23 PM Aug 04, 2018 | nagendran

ADVERTISEMENT

ADVERTISEMENT

பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களையோ, காப்பி பேஸ்ட் செய்த கருத்துக்களையோ பதிவிடுவன் தன்னை "போராளி" என பொதுவெளியில் பகிரங்கப்படுத்திக் கொள்ளும் இக்காலத்தில், அன்றே தன்னுடைய 12 வயதில் நேதாஜியின் "ஐ.என்.ஏ-வில்" இணைந்து இந்திய சுதந்திரத்திற்காக பாடுப்பட்ட காந்திமதிபாயின் வாழ்க்கை அலாதியானது.

" அந்தக் காலத்தில் சொல்லவே வேண்டாம். பெண்கள் வெளியில் தலைக்காட்ட முடியாது.! சட்டுப்புடுன்னு திருமணத்தை முடித்து வைத்துவிடுவார்கள். எது செய்தாலும் அதற்கு தடை இருக்கும். ஆனால் நான் கொடுத்து வைத்தவள். எனது அம்மா இராமுகண்ணம்மாள், அப்பா முத்துராமலிங்கத்தேவர் என்னுடைய சுதந்திரத்தினைப் பறிக்கவில்லை. சொந்த ஊர் இராமநாதபுரம் வட்டம், கமுதி அருகே உள்ள அபிராமம் எனாலும் பிழைப்பிற்காக அப்பொழுது பர்மா நாட்டில் குடியிருந்தோம். அங்குள்ள பள்ளிகளில் தான் எனது படிப்பே..!

12 வயதிற்கும் இந்திய சுதந்திரத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திரப் போஸின் ஐ.என்.ஏ. படையணிக்கு ஆட்கள் தேவை என்றார்கள். என்னுடைய பெற்றோர் சம்மதித்தின் பேரிலேயே நேதாஜியின் "பாலசேனையில்" என்னை இணைத்துக்கொண்டேன். பாலசேனையில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள், சிறுவர்கள் இருந்தோம். எங்களின் ஒரே நோநக்கம் இந்தியா சுதந்திரம் அடையவேண்டும் என்பது மட்டுமே.!! நிதி திரட்டுவதற்காக பாலசேனை-யில் உள்ள நாங்கள் பல கலைநிகழ்ச்சிகள் நடத்தினோம். அதில் வரும் நிதியை படையணிக்கு பயன்படுத்தினார்கள்.

அந்த நாடகங்களில் நான் முருகன் வேடம் தரிப்பேன். நான் ஒரு பெண்ணாக இருந்தாலும் எனக்கு துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டது. நான் மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்குமே அப்பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர்." என உற்சாகம் துள்ளலுடன் மலரும் நினைவுகளை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார் அபிராமத்தில் வசிக்கும் ஐ.என்.ஏ.படையணியை காந்திமதி பாய்..

இந்திய சுதந்திரப்போராட்ட வீராங்கனையாக காந்திமதி பாய்க்கு, போருக்கு பின்னர் அபிராமம் அருகிலுள்ள மேலப்பணைக்குளத்தை சேர்ந்த ராமசாமி தேவருக்கும் திருமணம் முடிந்திருக்கின்றது. 6 ஆண்பிள்ளைகள், 5 பெண்பிள்ளைகள். கடைசி மகனின் பெயர் நேதாஜியாம். தன்னுடைய பேரப்பிள்ளைகளுக்கு சுதந்திரப் போராட்டங்களை பற்றியும், அங்கு நடந்த பல நிகழ்வுகளைப் பற்றியும் கூறிவருவது தான் காந்திமதி பாயின் பொழுது போக்கே.!

அது என்ன காந்திமதி "பாய்".?

" பாலசேனையில் சிறுவரான இளைஞர்கள், இளம்பெண்கள் என பலர் இருந்தாலும் ஆண், பெண் என்கின்ற பேதமே அங்கு கிடையாது. நேதாஜியை சாதாரணமாக பார்க்கவும், பேசவும் எங்களுக்கு வாய்ப்பு கிட்டியது. எங்களுக்கு அவர் உணவு பரிமாறுவார். அந்த நேரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பார். அப்பொழுது என்னுடைய துறு துறு நடவடிக்கைகளைப் பார்த்த அவர் என்னை “பாய்” என்றே அழைப்பார். “Boy, you are not a girl; your activates are like boy’s, Gandhimathi Boy”-என்பார்.! அதனால்தான் என்னுடைய பெயர் பின்னாளில் காந்திமதிபாய் என மாறிற்று. நேதாஜியிடம் கிடைத்த இந்த அங்கீகாரத்தை எனக்கு கிடைத்த பெரிய விருதாகவே நான் கருதுகிறேன்." என காந்திமதி "பாய்க்கு" விளக்கம் தந்தவர், “நாம் அடிமையாக இருக்கக்கூடாது,!! சுதந்திர நாட்டில் சுதந்திரமாக இருப்போம்” ஜெய்ஹிந்த்!!" எனக் கூறி விடைப்பெற்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT