ADVERTISEMENT

ஏன் இதனை அரசு செய்யவில்லை? ‘கஜா’வால் பாதித்த நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கேள்வி! – (சிறப்புப் பேட்டி)

11:21 PM Nov 22, 2018 | rajavel


ADVERTISEMENT

ADVERTISEMENT




ஜா புயல் தாக்கும் என்ற எச்சரிக்கை வந்தவுடன் தனது தொகுதி மக்களுக்கு நவம்பர் 15ஆம் தேதி வாட்ஸ் அப் மூலம் உதவி எண்களையும், எம்எல்ஏ அலுவலகம் திறந்தே இருக்கிறது, முகாம்களில் தங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்றும், இந்த புயலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க அனைவரும் இறைவனிடம் பிராத்திப்போம் என்று ஆடியோ வெளியிட்டு பரப்பினார் நாகை எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தொண்டர்களின் உதவியோடு மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். மக்களின் நிலைமை எப்படி இருக்கிறது, ஆளும் அரசின் செயல்பாடு திருப்பி அளிக்கிறதா? உள்ளிட்ட கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.


ஒரு இளம்பெண் விதவையானால் எப்படி கொடுமையாக இருக்கும், அதேபோல் இருக்கிறது எங்கள் பகுதிகள். யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. எல்லோரும் கண்ணீர் விடுகிறார்கள். மரத்தை பார்க்க பார்க்க அழுகை வருகிறது. ஒருவரையொருவர் பார்க்கும்போது அழுகை வருகிறது. எங்கள் பகுதி மக்கள் மரங்களின் பிரியர்கள். பசுமை விரும்பிகள். இனி இந்த மரங்களை வைத்து கிளப்புவதற்கு 15 வருடங்கள் ஆகும். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரிழப்பு. மிகப்பெரிய வேதனையில் மூழ்கியிருக்கிறோம்.

கஜா புயல் 6 மாவட்டங்களை சீரழித்திருக்கிறது. இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. 6 மாவட்டங்களை ஒரே நேரத்தில் தாக்கும் என்பது புதியதாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு வாரமாக முன்னேற்பாடுகளை செய்த காரணத்தினால் ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். உயிர்ச்சேதம் குறைந்திருக்கிறது. மக்கள் ஆயிரக்கணக்கில் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

இதனை நான் மட்டும் அல்ல, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்கள்.

புயலுக்கு முன்பு எடுத்த அந்த தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப்போல, புயல் பாதிக்கப்பட்ட அடுத்த நாள் முன்னேற்பாடுகளை செய்வதில் சின்ன தயக்கமும், சுனக்கமும் இந்த அரசுக்கு ஏற்பட்டிருந்தது உண்மைதான்.

ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து நிவாரணப் பணிகள் முயற்சிகள் நடைப்பெற்றன. ஆனால் இந்த முயற்சிகள் சனிக்கிழமையே போர்க்கால அடிப்படையில் தொடங்கியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் மக்கள் இந்த அளவுக்கு கொந்தளித்திருக்க மாட்டார்கள்.

நாகை மாவட்டம், நாகூர் பட்டினச்சேரியில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் வரை பெரிய அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கடலோர மீனவர்களுக்கு படகுகள் சேதம். விவசாயிகளுக்கு தென்னை, பனை, மா, வாழை, பனப்பயிற்கள் அனைத்தும் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதமாகியுள்ளன. வரலாறு காணாத இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடுமையான புயல் என்பதால் சாலைகளில் மரங்கள் சாய்ந்து கிடக்கிறது. ஒரு லட்சத்திற்கும் மேலான மின்கம்பங்கள் விழுந்து கிடக்கிறது. அதனை அப்புறப்படுத்துவதில் பல இடங்களில் பிரச்சனை இருக்கிறது.

அரசு உணவு விநியோகத்தையும், குடிநீர் விநியோகத்தையும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி, ராணுவ விமானங்களை பயன்படுத்தி இந்த மக்களின் பசியையும், பட்டிணியையும் போக்கியிருக்க முடியும்.


அல்லது தேசிய பேரிடர் என்று மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து, நெருக்கடியை கொடுத்து ராணுவத்தை வரவழைத்து போர்க்கால அடிப்படையில் சில பணிகளை தொடங்கியிருக்க முடியும். ஆனால் இவர்கள் ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை.

ஆயினும் திங்கள்கிழமையில் இருந்து முழு வீச்சில் என்னுடைய நாகை தொகுதியில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய தொகுதிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேதாரண்யம் தொகுதிக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதேபோல் அமைச்சர் அன்பழகன், கீழ்வேளூர் தொகுதிக்கு அமைச்சர் பெஞ்சமின் போன்றவர்களை அரசு அனுப்பி திங்கள்கிழமையில் இருந்து பணிகள் நடக்கிறது.

இந்தப் பணிகள் சனிக்கிழமையே தொடங்கியிருந்தால் மக்கள் இந்த அளவுக்கு கொந்தளித்திருக்க மாட்டார்கள். மக்களின் கோபம் நியாயமானது. மக்களுக்கு பசிக்கிறது. பிள்ளைகள், குழந்தைகள் அழுகிறது, மக்கள் என்ன செய்வார்கள். போராடத்தான் செய்வார்கள். ரோட்டில் உட்காருவதைவிட வேறுவழி அவர்களுக்கு தெரியாது.


ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாக்கெட்டுக்கள் வழங்கியிருந்தால் மக்கள் ஓரளவு அமைதி காத்திருப்பார்கள். அதனை செய்யாமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.


சாலை மறியல் நடந்ததால் பல இடங்களுக்கு நிவாரணப் பொருட்கள் போய் சேருவதில் பிரச்சனை ஏற்பட்டது. பல இடங்களில் மக்கள் கோபப்பட்டு மறியல் செய்ததால், தொண்டு நிறுவனங்கள் சில பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

நாகை தொகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் போனீர்களா?

ஏறத்தாழ 80 சதவீத இடங்களுக்கு நான் சென்றுள்ளேன். மீதமுள்ள பகுதிகளுக்கு அதிகாரிகளை தொடர்புகொண்டு அந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையானவற்றை செய்யச் சொல்லியிருக்கிறேன்.

மக்களை சந்திப்பதில் சிரமம் இருக்கிறதா?

எந்த சிரமமும் இல்லை. நான் போகும் இடங்களில் மக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவிக்கிறார்கள். எங்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வழங்கக்கூடிய நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொள்கிறார்கள்.

மக்கள் கதறுகிறார்கள். அழுகிறார்கள். பசியில் பட்டிணியில் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். கரெண்ட் இல்லை, மரங்கள் விழுந்து கிடக்கிறது, குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது என்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் என்று சொல்லும்போது அமைதி அடைகிறார்கள்.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு தெரியாது. எனக்கும், எனது தொகுதி மக்களுக்குமான உறவு சுமூகமாக உள்ளது. நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கிறது.

புயல் பாதித்து ஐந்து நாட்கள் கழித்துதான் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு முதல் அமைச்சர் ஹெலிகாப்டரில் வந்தார். வானிலையை காரணம் காட்டி நாகை, திருவாரூக்கு அவர் வரவில்லை. முதல் அமைச்சராக இந்த பங்களிப்பு போதுமா?


உண்மையில் சொல்லப்போனால் அதில் எனக்கு வருத்தம் இருக்கிறது. வானிலை சரியில்லை என்று சொன்னால் அவர் சென்னையில் இருந்தே தரைவழியிலேயே வந்திருக்க வேண்டும். திருச்சியில் இருந்தாவது தரைவழியில் வந்திருக்க வேண்டும்.

அப்படி வந்திருந்தால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்திருப்பார்கள். மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். மக்கள் முதல் அமைச்சரிடம் இருந்து சில அறிவிப்புகளை எதிர்பார்த்திருந்தார்கள். அவர் வராமல் போனது என்னைப்போன்றவர்களுக்கும், மக்களுக்கும் மிகப்பெரிய வருத்தம்தான்.

உங்க கட்சி சார்பாக முகாம் அமைக்கப்பட்டுள்ளதா?

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நாகப்பட்டிணம், வேதாரண்யம், திருப்பூண்டி, பாமணி, அதிராம்பட்டிணம், பேராவூரணி ஆகிய இடங்களில் நிவாரண முகாம்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் குடிநீர் பாக்கெட்டுக்கள், பிஸ்கட் பாக்கெட்டுக்கள், மெழுகுவர்த்திகள், கொசு வர்த்திகள், நாப்கின் போன்றவற்றை கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இதனை பார்த்துவிட்டு நிறைய மக்கள் எங்களுக்கு போன் செய்து வாழ்த்து சொல்கிறார்கள். நிறைய மக்கள் உதவிப் பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள். அவற்றையெல்லாம் எங்களது நிவாரண முகாம்களுக்கு பிரித்து அனுப்புகிறோம்.

பல பகுதிகளில் இருந்து மக்கள் எங்களை தொடர்புகொண்டு, ''எங்கள் பகுதிக்கு வாங்க, எங்கள் பாதிப்பு குறித்தும், எங்களது குறைகளை குறித்தும் அரசுக்கு எடுத்து சொல்லுங்கள்'' என்கிறார்கள்.



நாகை பகுதியில் ஏராளமான மக்கள் தவிக்கிறார்கள். இவர்களைவிட்டுவிட்டு அங்குபோகக்கூடிய சூழலும், மனமும் இல்லை. நேரமும் இல்லை. அப்படியிருந்தும், ஒரு நாள் ஒதுக்கி, எனது தொகுதிக்கு அப்பாற்ப்பட்ட இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து, அது குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளேன்.


அந்த மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார்கள். எனது தொகுதி மக்களை கவனிக்க வேண்டியிருப்பதால் அங்கு செல்ல முடியவில்லை. ஆனால் எனது கட்சியினர் அங்கு சென்று முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் இதனை ஒரு தேசிய பேரிடராக அறிவித்து, ராணுவத்தை கொண்டுவந்து இறக்க வேண்டும். அப்படி செய்தால் சுலபமாக மக்களின் குறைகளை தீர்க்க வழி ஏற்பட்டிருக்கும். அப்படி ஏன் செய்யவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. இப்போதாவது மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை மத்திய அரசு தனது பங்களிப்பு என்ன என்பதை அறிவிக்காதது கண்டிக்கத்தக்கது. கவர்னரும் வந்து பார்வையிட்டார். அவர் பார்வையிட்ட பிறகும் கஜா புயல் குறித்து ஏன் மத்திய அரசு எதையும் அறிவிக்கவில்லை?. அதுதான் எனது கேள்வி.

தென்னை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசோ தென்னைக்கு 600 ரூபாய் இழப்பீடு என்றும், அதனை அப்புறப்படுத்துவதற்கு ரூபாய் 500 என்றும் அறிவித்துள்ளது. இதுபோன்று மற்ற இழப்பீடுகளும் நிவாரணத் தொகைகளை அறிவித்துள்ளது. இதுபற்றி...

தென்னை உள்பட விவசாய பயிற்களுக்கு மாநில அரசு அறிவித்திருக்கக்கூடிய நிவாரணத் தொகைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுபோதாது. எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு.


நிவாரணத் தொகையை அறிவித்ததில் மக்களுக்கு உடன்பாடு இல்லை, அதிகரித்து கொடுங்கள், மக்கள் மிகவும் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள், இதனை முதல் அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT