gaja eb staff

Advertisment

நாகப்பட்டிணம் ஊருக்குள் நுழைந்ததும் ஒரு திருமண மண்டபம் கண்ணில் பட்டது. மிகவும் பரபரப்பாக இருந்தது. லாரிகளிலும், வேன்களிலும் ஆட்கள் வந்து இறங்கிக் கொண்டு இருந்தார்கள். அது கல்யாணத்துக்கு வந்தவர்கள் கூட்டம் அல்ல. கூர்ந்து கவனித்தபோது தான் தெரிந்தது, அவர்கள் தமிழ்நாடு மின்வாரியப் பணியாளர்கள்.

gaja eb staff

இது நாகப்பட்டிணத்தில் மாத்திரம் அல்ல. அருகில் இருந்த காரைக்கால் உள்ளிட்ட கஜா புயலால் பாதிக்கப்படாத நகரங்களிலும் இதே காட்சி தான். அதே போல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியிலும் பல இடங்களில் மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக தங்கி இருந்தார்கள். அந்த அளவிற்கு தமிழகம் முழுதும் இருந்து மின்வாரிய ஊழியர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் வந்து குவிந்திருந்தார்கள்.

Advertisment

gaja eb staff

குவிந்திருந்தது மாத்திரமல்ல, அளப்பரிய பணியை செய்தார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள். நேரம், காலம் பார்க்காமல், எந்தவித வசதிகளுமின்றி பணி செய்தார்கள். தமிழ்நாடு அரசின் துறைகளில், புயல் பாதித்த பகுதியில் எல்லோராலும் பாரட்டப்படும் அளவிற்கு பணியாற்றியவர்கள் மின்வாரிய பணியாளர்கள் தான்.

gaja eb staff

எந்த ஊருக்குள் நுழைந்தாலும் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தமிழக அரசின் துறை மின்வாரியம் தான். அந்த அளவிற்கு பாதிக்கப்பட்ட துறையும் மின்வாரியம் தான்.

gaja eb staff

சிறு நகரங்கள், முக்கிய சாலைகளில் உள்ள கிராமங்கள் தான் இன்றைய தேதிக்கும் மின்சாரம் பெற்றுள்ளது. அதுவும் தமிழகம் முழுதிலுமிருந்து பணியாளர்கள் வந்து பணியாற்றியதால். உள் கிராமங்கள் உட்பட எல்லா இடங்களுக்கும் மின்சாரம் கிடைக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம். இதுவே இப்படி என்றால், வயல்வெளிகள் வழியே புதுக் கம்பங்கள் அமைத்து, விவசாயத்திற்கு மின்சாரம் எப்போது கிடைக்கும் என்பது கேள்விக் குறி.

gaja eb staff

ஒரு கட்டத்திற்கு மேல் மற்ற மாவட்டங்களில் இருந்து வந்து பணிபுரிபவர்கள் ஊர் திரும்ப வேண்டிய சூழல் வரலாம். அதற்கு பிறகு உள்ளூரில் இருக்கும் பணியாளர்களைக் கொண்டு தான் சீரமைப்பு பணிகளை மின்வாரியம் செய்யும் சூழல் ஏற்படும். அது மிகப் பெரிய நெருககடியை ஏற்படுத்தி விடும்.

gaja eb staff

எனவே வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கி மின்வெட்டை தவிர்ப்பது போல், தனியார் ஊழியர்கள் மூலம் கஜா பாதித்த பகுதியில் பணி மேற்க் கொள்ள வேண்டும். அப்போது தான், அந்தப் பகுதிகளில் மின்சாரம் கிடைத்து, பாதித்த விவசாயிகள் மறுவாழ்வு பெற முடியும்.

gaja eb staff

எது எப்படியாகினும், புயலால் பாதித்த பகுதியை சேர்ந்த மக்கள் மின்வாரிய ஊழியர்களை பாராட்டினார்கள். எல்லோராலும் மனமார பாராட்டுகின்ற அளவிற்கு அவர்கள் பணி இருந்ததும் உண்மை.

இதில் கொடுமை என்னவென்றால் இதற்கான பாராட்டை பெற மின்துறை அமைச்சர் தங்கமணியும், தமிழக அரசும் துடிப்பது தான்.

gaja eb staff

கஜா புயல் பாதிப்புக்கு பிறகு, இன்றைய தேதி வரை நிவாரணம் கிடைக்கவில்லை என்று தமிழக அரசை எதிர்த்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் என்று தினம்தினம் போராடி வருகிறார்கள். இது தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என்பதற்கு சான்று.

இன்னும் வலுவான சான்று வேண்டுமென்றால், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சொந்த தொகுதியில் விரட்டப்பட்டு சுவர் ஏறிக் குதித்து தப்பித்த சம்பவம் தான்.

gaja os manian

எனவே மின்துறை பணிகளுக்கான முழு பாராட்டும், அந்தத் துறையின் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்குமே சேர வேண்டியது.

தந்தை இல்லா குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்பாக பணியாற்றுவது போல, மின்வாரிய ஊழியர்கள் பொறுப்பாக சீரமைப்பு பணியை செய்துள்ளனர்.

gaja eb staff

மின் துறையை போலவே, விவசாயத் துறை நீண்டகால திட்டத்தோடு இந்தப் பகுதியில் பணியாற்ற வேண்டும். தென்னை போன்ற நீண்ட கால பயிர்களை இழந்தவர்களுக்கு, அடுத்த கட்டம் வாழ்க்கையை நகர்த்த அரசு தான் உதவிகளை செய்ய வேண்டும்.

வீடுகளை இழந்தவர்களுக்கு, உள்ளாட்சித் துறை முழு வீச்சில் செயல்பட்டு வீடுகளை கட்டித்தர வேண்டும். பணம் அளித்தால் கூட அவர்களால் கட்டுமானப் பொருட்களை சேகரிக்க முடியாது. அதனால் அரசு தான் இதை செய்ய வேண்டும்.

gaja eb staff

தென்னை, மா மரங்கள் மட்டுமின்றி, எல்லா மரங்களும் விழுந்திருக்கின்றன. இது எதிர்காலத்தில், சுற்றுசூழலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை கருத்தில் கொண்டு, வனத்துறை மூலம் இந்த மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசு நீண்ட கால திட்டம் தீட்டி, மத்திய அரசின் நிவாரண நிதியை உடனே பெற வேண்டும்.

பேரிடர் பாதிப்பு மீட்பு நடவடிக்கைகள் என்பது அரசின் மற்ற பணிகள் போல் அல்லாமல் கூடுதல் கவனம் செலுத்தி செய்ய வேண்டிய பணி என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

அப்போது தான், கஜா புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

S. S. Sivasankar