ADVERTISEMENT

போராடும் நரிக்குறவர் இன மக்கள்! விழிப்புணர்வு உண்டாக்கும் தலைவர் காரை சுப்பிரமணியன்

03:42 PM Jun 19, 2018 | Anonymous (not verified)

மனிதன் காடுகளில் வாழ்ந்தபோது விலங்குகளை பறவைகளை வேட்டையாட தன் கைகளை பயன்படுத்தினான். பிறகு கற்களை எடுத்து வீசினான். காட்டு மரக்கிளைகளை பயன்படுத்தினான். இப்படிப்பட்ட வம்சாவழி மனிதர்கள் நாகரீக உலகத்தில் பிரவேசித்துவிட்டனர். பெரும்பாலானவர்கள் இதிலே நரிக்குறவர்களாக வாழ்க்கையை ஓட்டினர். இந்த இனம் இப்போது தான் லேசான விழிப்புணர்வு பெற்று வருகிறது.

கவண் மூலம் குறிபார்த்து கல்லை ஏவி பறவைகளை வேட்டையாடிய இவர்களே குறிபார்த்து சுடும் துப்பாக்கி கண்டு பிடிக்க ஆதாரமானவர்கள். சமீப காலம்வரை திருமணம் போன்ற சுபகாரிய மண்டபங்களில் வெளியே காத்திருந்து அங்கு கிடைப்பதை சேகரித்து சாப்பிட்டனர். ஊர் ஊராக குழுக்களாக சென்று வேட்டையாடுவது ஊசி, பாசி, மணிமாலைகள், நரிக்கொம்பு போன்றவற்றை விற்று பிழைப்பு நடத்தினார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


ஆங்காங்கே தற்காலிக டெண்ட் குடிசைபோட்டு வாழ்ந்தனர். அடிக்கடி புலம் பெயர்ந்தபடியே வாழ்ந்த இவர்கள். இப்போது பல ஊர்களில் குடும்பமாக தங்கி வாழ்ந்தாலும் கூட பெரிய அளவில் மாற்றமில்லாமல் வாழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கு வெளிச்சமாக ஒருவர் புறப்பட்டுள்ளார் அவர் காரை சுப்பிரமணியன். படிப்பறிவு இல்லாத சுப்பிரமணி - மஞ்சுளா தம்பதிகள் தங்களின் 4 பெண்குழந்தைகளையும் பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளார்கள். ஒரு மகன். அவர் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். தன் பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா தான் பிறந்த சமுதாயம் விழிப்புணர்வு பெற வேண்டாமா? பல்வேறு படித்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் ஆலோசனைப்படி 1996ல் கல்வி அறிவு இல்லாத நரிக்குற பிள்ளைகள், நாடோடி இனப்பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று ஊர் ஊராக சென்று விழிப்புணர்வு உண்டாக்கினார்.


1950 களில் காமராஜர் ஆட்சியின்போது ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்தது பெரம்பலூர் பகுதி. திருச்சி டவுனில் சுற்றித்திரிந்த நரிக்குறவர்களின் வாழ்க்கை நிலையை கண்டார். அப்போதைய ஆட்சியர் மலையப்பன் வெறும் அனுதாபப்பட்டால் மட்டும் போதுமா? அவர்களை அழைத்து பேசினார்.

அவர்களுக்கு பெரம்பலூர் அருகேயுள்ள காரை ஊராட்சி பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் தங்கி வாழ இடம் ஒதுக்கி அதற்கு பட்டா கொடுத்தார். அங்கு குடிசை போட்டு தங்கியபடியே ஊர் ஊராக சென்று பிழைப்பு நடத்திய நரிக்குறவ மக்கள் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு வாழ வழிகாட்டிய ஆட்சியர் மலையப்பன் பெயரிலேயே மலையப்பநகர் என்று பெயர் வைத்தனர். நரிக்குறவ மக்களுக்கு தமிழகத்தில் முதல் முதலாக பூமியை சொத்தாக வழங்கியர் ஆட்சியர் மலையப்பன் என்கிறார்கள் இங்கு வாழும் மக்கள்.

அங்கே பிறந்தவர்தான் சுப்பிரமணியன். தான், தன் குடும்பம் என்று சுயநலத்தோடு வாழாமல் தமிழகம் முழுவதும் சென்று தன் இனமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சுப்பிரமணியன் முன்ணுதாரணமாக தனது ஊரிலேயே தனது தந்தை ராமலிங்கம் பெயரில் கல்வி அறக்கட்டளை துவக்க அரசின் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் மூலம் அதிகாரிகள் துணையோடு ஒரு பள்ளியை உருவாக்கினார். இதில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உண்டு உறைவிடப் பள்ளியாக தரம் உயர்த்தினார். இதில் சேர்ந்து படிக்க திருப்பூர், சென்னை, வேப்பூர், மயிலாடுதுறை, திருச்சி, என பல ஊர்களுக்கு சென்று தன் இனமக்களிடம் பேசி முதலில் 30, 40 என பிள்ளைகள் கொண்டுவந்து சேர்த்தவர் இப்போது 130 பிள்ளைகள் படிக்கிறார்கள். இங்கு படித்த பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பல வெளியூர் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கும் உதவி செய்து வருகிறார் சுப்பிரமணி. இவரது உதவியினால் 25 மாணவ, மாணவிகள் கல்லூரி முடித்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கல்விப்பணியில் தொடர்கிறார்கள். இப்படி 200க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு உதவி வருகிறார்.

இது மட்டுமல்லாமல் பள்ளி பிள்ளைகளுக்கு படிப்பு மட்டுமல்லாமல், விளையாட்டு போட்டிகளிலும், பாட்டு, நடனம், என பலவிதமான பயிற்சி கொடுத்து வருகிறார். பள்ளி மூலம் இது மட்டுமா? மக்கள் பயனடைய வங்கிகள் மூலம் கடன் வசதி பெற்று தந்ததோடு திருநெல்வேலி வள்ளியூரில் 40 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, நல வாரியம் மூலம் பெரம்பலூர் தஞ்சை, நாகை, அரியலூர், திருநெல்வேலி என பல மாவட்ட மக்களுக்கு 7500 மானிய உதவித்தொகை கிடைக்க செய்துள்ளளார்.

நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும் தன் இனம் முன்னேறவில்லை. முன்னேற வழிகாட்ட சரியான ஆட்கள் இல்லையே என்று வேதனை தெரிவிக்கும் சுப்பிரமணி, மிகவும் பிறப்பட்டோர் பட்டியலில் உள்ள தங்களை (ST) மலைவாழ், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்ககோரி மக்களை திரட்டி பல போராட்டங்கள், ஊர்வலங்கள் என நடத்தியதோடு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போதும் இப்போதுள்ள பிஜேபி ஆட்சியிலும் பல அமைச்சர்களை எல்லாம் சந்தித்து மணு கொடுத்தார். எஸ்டி பட்டியலில் சேர்க்க சட்டமியற்றகோரி இதற்காக டெல்லிக்கு தன் மக்களோடு சென்று போராட்டம் நடத்தியுள்ளார்.

இவரது கடும் முயற்சியினால் இப்போதைய பிஜேபி அரசின் மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் பாராநளமன்ற கூட்டத் தொடரில் சட்டத்தை நிறைவேற்றிக்கோரி சமீபத்தில் மத்திய பழங்குடி நலத்துறை மந்திரியை சந்தித்துள்ளார். பாராளுமன்ற விவகார மந்திரி அந்தகுமாரை சந்தித்துள்ள தனது சகாக்களோடு சுப்பிரமணி இப்படி மக்கள் முன்னேற போராடும் சுப்பிரமணி அனைத்து நரிக்குற பிள்ளைகளும் 5 வயதுக்கு மேல் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற விழுப்புணர்வோடு 12 முதல் 16 வயதுக்குப்பட்ட தங்கள் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்கும் பழக்கத்தை அடியோடு மாற்ற சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பெண்களுக்கு 18, ஆணுக்கு 21 வயது என்பதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். என்பதில் உறுதியாக உள்ளவர். அதைதன் இன மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பேரணி மற்றும் கூட்டங்கள் மூலம் ஏற்படுத்தியுள்ளார்.



கல்வி அறிவு அறவே இல்லாத மக்கள் எங்கள் மக்கள். நாடோடிகளாக வாழ்ந்த நாங்கள் ஒரே இடத்தில் தங்கி கவுரத்தோடு வாழ வேண்டும். பிச்சை எடுக்கக்கூடாது. உழைத்து வாழ வேண்டும். எல்லா மனிதர்களுக்கும் உள்ளதுபோலதானே என் இன மக்களுக்கும் இரண்டு கை, கால், கண்கள் என இறைவன் படைத்துள்ளான். அவர்களைப்போல நாம் ஏன் வாழக்கூடாது நமக்கும் அறிவு, ஆற்றல், திறமை எல்லாம் உள்ளது. அதை எல்லாம் வெளியே கொண்டு வர படிப்பறிவு இருந்தால்தான் முடியும். படிப்பு அதையடுத்து அரசின் இட ஒதிக்கீடு ஆகியவை மிக முக்கியம். மேலும் அரசு எங்கள் இன மக்களுக்கு என தனி நிதி ஒதுக்கீடு செய்து வாழ்க்கையில் முன்னேற உதவிட வேண்டும். என்கிறார் சுப்பிரமணி.

சிறுவயதில் பள்ளியில் படிக்கவைத்து என் அப்பா காய்கறி, மரங்கள் ஊர்ப் பெயர்களை எழுத சொல்லுவார் நான் தப்புதப்பாக எழுதுவேன். அதை பார்த்து வேதனைப்படுவார். அப்பாவின் எண்ணத்தை புரிந்து கொண்டு பள்ளிப்படிப்பை புரிந்து கொண்டு முழு மூச்சாக படித்தேன். பிறகு கல்லூரி படிப்பு மூலம் பி.எஸ்.சி, பி.எட் படித்துள்ளேன். எங்கள் பள்ளியில் நானே ஆசிரியையாக சேர்ந்து எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து வருகிறேன். மற்ற பிள்ளைகளுக்கு அவர்கள் வம்சாவழியில் படிப்பு வாசனை இருக்கும். எங்கள் பிள்ளைகளை கல்லை செதுக்குவது போல் செதுக்குகிறோம். களி மண்ணை உருவம் செய்வதுபோல செய்கிறோம். புரிந்துகொண்டு படிக்கிறார்கள். ஆர்வமாக உள்ளனர். மற்ற பிள்ளைகளை போல படித்து முன்னேற வேண்டும் என்ற துடிப்பு அவர்களிடம் உள்ளது. சிறந்த கல்வியாளர்களாக திறமை சாலிகளை உருவாக்குவோம் என்கிறார் சமர்தா (சுப்பிரமணி மகள்.) இவரது கணவர் சரத்குமார் எம்.பி.ஏ. படித்துள்ளர். இவர் பள்ளியின் சூப்பிரண்டாக பணி செய்து கொண்டு பிள்ளைகள் படிப்புக்கும் உதவிசெய்து வருகிறார்.

எங்கள் இன பிள்ளைகளை பல ஊர்களின் இருந்து பள்ளிக்கு அழைத்துவர மிக கஷ்டமாக இருக்கும் வரமாட்டார்கள். படிப்பை கண்டு பயம். பெற்றோர்கள் உதவியுடன் கை கால்களை பிடித்து தூக்கி வந்தோள்ளோம். கத்தி கதறியபடியே வர மறுத்து அடம் பிடித்த பிள்ளைகள் கூட இங்கே வந்த பிறகு நன்றாக படிக்கிறார்கள். சந்தோஷமாக உள்ளனர். எட்டாம் வகுப்புவரை மட்டுமே உள்ள எங்கள் பள்ளியை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி வரை உயர்த்த அரசு முன் வர வேண்டும். அதேபோல் எங்கள் விடுதியில் தங்கிகொண்டு வெளியூர் பள்ளிகளுக்கு சென்று உயர் கல்வி படிக்க பல மாவட்ட பிள்ளைகள் ஆர்வமாக உள்ளனர். அதற்கு அரசும் தன்னார்வ அமைப்புகளும் உதவிட வேண்டும் என்கிறார் சரத்குமார்.

மிகமிக அடித்தட்டு மக்களாக வாழும் நரிக்குறவை மக்களின் வாழ்வு மேம்பட பாடுபடும் தமிழ்நாடு நரிக்குறவ இன மக்களின் கூட்டமைப்பு தலைவர் காரை சுப்பிரமணியை பத்திரிகை, டி.வி., மீடியாக்கள், நேர்காணல் நடத்தலாமே அதன்மூலம் அவர்களுக்கு நன்மைகள் கிடைக்க செய்யலாமே செய்யுமா?

பெரம்பலூரில் இருந்து இந்த ஊருக்கு பஸ் வசதி இல்லை எப்போதோ ஒரு மினி பஸ் மட்டுமே தலை காட்டுகிறது. அதுவும் சில நாட்கள் வருவது இல்லை. எனவே அந்த பஸ் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்கிறார்கள் இந்த மக்கள்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT