ADVERTISEMENT

"கண் துடைப்புக்காக நடந்த கருத்து கேட்பு கூட்டம்..! கொந்தளிக்கும் தேவேந்திர குல வேளாளர்கள்..!"

05:37 PM Oct 16, 2019 | Anonymous (not verified)

பள்ளர், குடும்பர், வாதிரியார், தேவேந்திர குலத்தான், காலடி, பண்ணாடி, மூப்பன் என்றழைக்கப்படும் 7 சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்பது, இந்த சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

ADVERTISEMENT


நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் புதிய தமிழகம் கட்சியை கூட்டணியில் சேர்க்க திட்டமிட்ட எடப்பாடி பழனிசாமி, "தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணை வெளியிட ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டார். இக்குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும், அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்” என்று பிப்ரவரி 27-ந்தேதி அறிவிப்பும் அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

அதன்பிறகு ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையிலான குழு ஒருமுறை கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காகதால், தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.

7 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடித்ததால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய கிருஷ்ணசாமி, நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்றும் அறிவித்துவிட்டார். இதேபோல், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனும் கையை விரித்துவிட்டார்.

ஹன்ஸ்ராஜ் வர்மா குழு கண்துடைப்புக்காகவா?

இதையடுத்து, அக்டோபர் 16-ந்தேதி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையிலான குழு 2-வது முறையாக கருத்து கேட்கிறது. எனவே, மேற்படி 7 சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த குழுவை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கலாம் என கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.

அதன்படி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோரும், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினரும் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

ADVERTISEMENT


இன்றைய கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற சிலரிடம் பேசினோம். "எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்தே நாங்கள் வேளாண்மை தொழில் செய்து வருகிறோம். பள்ளமான நிலத்தில் வேலை செய்ததால் பள்ளர் என்றும், வேளாண்மை தொழில் செய்ததால் வேளாளர் என்றும் அழைக்கப்பட்டோம். ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட சிறு பிழையால் நாங்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டோம். அதில் இருந்து மீட்டு எங்களது அடையாளத்தை எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்கிறோம். இதில் அரசாங்கம் மவுனம் சாதிப்பது நல்லது அல்ல" என்றார் கரூர் மாவட்டம் காந்திகிராமத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பரணி.

அவரே தொடர்ந்து, "சங்கத்தமிழ் இலக்கியங்களும் போற்றிப்புகழ்பாடும் சேர சோழ பாண்டிய அரச பரம்பரையினராகிய மள்ளர் குலத்தவர்களே. மள்ளர் என்றால் உயர்குலத்தவர் என பொருள்படும். அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும், வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர் என்று திவாகர நிகண்டும், திருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்று பிங்கல நிகண்டும் இயம்புகின்றன. உழவர் என்பதற்கு தொல்காப்பியம் வேளாளர் எனப்பொருள் கூறுகின்றது.

இப்பேர்பட்ட பெருமை கொண்ட எங்களை அவன்.....அந்த.... சாதிக்காரன் என ஏளனமாக பார்க்கும் வகையில் தான் இருக்கிறது. இதில் இருந்து மீள வேண்டும். எங்களது அடையாளத்தை மீட்க வேண்டும். என்காலத்தில் அது நடக்காவிட்டாலும், என் பிள்ளைகள் காலத்தில் நடந்தாவது மன நிறைவு தான்" என்றார் நம்பிக்கையுடன்.

இந்த சமூக மக்கள் வைக்கும் கோரிக்கைகளின் ஒன்று 7 சாதிகளை ஒருங்கிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்பது. இது மாநில அரசு செய்ய வேண்டியது. மற்றொன்று தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் வெளியேற்றிட வேண்டும் என்பது. இது மத்திய அரசு செய்ய வேண்டியது.

மாநில அரசு மவுனம் சாதிப்பது ஏன்?

"எடப்பாடி பழனிசாமி நினைத்தால் இந்த நிமிடமே தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றிட ஜி.ஓ போட்டுவிட முடியும். ஆனால், செய்ய மாட்டார்" என நம்மிடம் தெரிவித்தார் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கணேஷ்.

அவரே தொடர்ந்து பேசும்போது, "கள்ளர், மறவர், வலையர், செட்டிநாடு வலையர், வேட்டுவ கவுண்டர் உள்ளிட்ட 68 சாதிகளுக்கு 1979 பிற்படுத்தப்பட்ட பழங்குடிகள் (டி.என்.ட்டி) என்று சான்றிதழ் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு சீர்மரபினர் பட்டியலில் அதாவது டி.என்.சி பட்டியலுக்குள் இவர்கள் வந்ததால், மத்திய, மாநில அரசுகளின் கிடைக்கவில்லை.


அவர்கள் மறுபடியும் எங்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ரா தலைமையில் ஒரு குழு ஜனவரியில் அமைக்கப்பட்டது. அந்த குழு திருச்சி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது. மார்ச் மாதத்தில் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், எங்களது கோரிக்கை தொடர்பாக குழு அமைத்ததோடு சரி. இப்போது கூட இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தியதும் கண்துடைப்புக்காகத் தான். 68 சாதிகளை ஒருங்கிணைத்து பட்டியலுக்குள் கொண்டு வந்த அரசாங்கத்திற்கு, இந்த 7 சாதிகளை ஒருங்கிணைக்க முடியாதா?இவர்களது கோரிக்கையை ஏற்றால் முக்குலத்தோர் சமூகத்தின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற அச்சம் அதிமுகவுக்கு மட்டுமல்ல. திமுகவுக்கும் இருக்கிறது.

மே மாதம் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தபோது விளாத்திகுளம், பரமக்குடி, ஒட்டப்பிடாரம், சாத்தூரில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும்போது எங்க அப்பா கருணாநிதி தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட 2011-ல் நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் குழு அமைத்தார். ஆனால், ஆட்சி முடிந்ததால் நிறைவேற்ற முடியவில்லை. ஆட்சி மாற்றம் வந்தபிறகு நாங்கள் கண்டிப்பாக உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்றார்.

அதே ஸ்டாலின், இப்போது நாங்குநேரி பிரச்சாரத்தின்போது இதுபற்றி வாய் திறக்கவே இல்லை. விக்ரவாண்டி தொகுதியை குறிவைத்து, திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தருவோம் என அறிக்கை விட்ட ஸ்டாலினுக்கு நாங்குநேரி தொகுதியில் எங்க சமூக ஓட்டுக்கள் வேண்டாம் என்று நினைக்கிறாரா?" என்று வினா எழுப்பினார்.

மறந்திட்டீங்களா முதல்வரே?

மேலும் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 14 பேர் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். அவர்களில் 10 பேர் அதிமுகவினர். அவர்கள் பதவி விலகுகிறோம் என்று நெருக்கடி கொடுத்தாலே எடப்பாடி பழனிசாமி பணிந்துவிடுவார். ஆனால், அதற்கு அந்த 10 எம்எல்ஏக்கள் தயார் இல்லை. இனி இருக்கிற ஒன்றரை வருஷத்தை இப்படியே ஓட்டிவிடுவோம் என்கிற நினைப்பு அவர்களுக்கு.!

விக்ரவாண்டியிலும், நாங்குநேரியில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, "நாங்கள் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை தான் சொல்வோம். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியும் தந்திருக்கிறோம்" என்று பேசி வருகிறார். தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையையும் நிறைவேற்றுவோம் என ஏப்ரல் மாசம் சொன்னதை மறந்துவிடாதீர்கள் முதல்வரே என்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT