ADVERTISEMENT

"ரவுடியை பிடிச்சிருக்கீங்க பார்த்து இருங்கன்னு சொல்றாங்க... ஆனா நம்ம வேலையே அதுதானே"!! - தில் போலீஸின் தூள் பேட்டி!

03:43 PM Sep 22, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ஒரு காட்சி தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது. காவலர் ஒருவர் வேகமாக ஓடிவந்து சாலை வளைவில் விழுந்துவிடுவார், இருந்தும் நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்டு ஒருவரைத் துரத்திக்கொண்டு ஓடுவார். திருவண்ணாமலையில் திருடப்பட்ட காரை பட்டுக்கோட்டையில் துரத்திப்பிடித்த அந்தக் காவலர் பெயர்தான் பிரசாத். தமிழ்நாடே கொண்டாடிய அவரின் துணிச்சலைப் பாராட்டாதவர்கள் யாரும் இல்லை. அவரிடம் இதுதொடர்பாக நாம் பேசினோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

ADVERTISEMENT


நீங்கள் செய்த செயலுக்காக தமிழ்நாடே உங்களைக் கொண்டாடுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ரொம்ப பெருமையாக இருக்கிறது. காவல்துறையில் சேர்ந்ததற்கான நோக்கம் நிறைவேறியிருக்கிறது. எல்லாரும் பாராட்டுவதைக் கேட்கும்போது பெருமையா இருக்கு. டிஜிபி சார் மூன்றுமுறை ஃபோன் செய்து பாராட்டினார். சந்தோஷமாக இருக்கு.

எப்படி அந்த திருடப்பட்ட காரை அடையாளம் கண்டுபிடித்தீர்கள், குறுகிய காலத்துக்குள் வண்டி எண் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்தது எப்படி? அன்றைக்கு என்ன நடந்தது?

காவல் கண்காணிப்பாளர் மேடம் அவர்கள் இந்த மாதிரி திருடு போன சம்பவம் பற்றி கூறுகிறார்கள், TN 07 CL 8454 எண் கொண்ட கார் திருவண்ணாமலையில் இருந்து திருடப்பட்டுள்ளது. நமது மாவட்டத்திற்குள் வந்தால் அதை தடுத்து நிறுத்திப் பிடித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். பிறகு டிஎஸ்பி சாரும் அனைத்து சப் ஸ்டேஷன்களுக்கும் இதைப் பற்றி தெரிவித்தார். நாங்களும் அலுவலகத்தில் இதைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். அப்போது என்னை ஒரு வேலையாக வெளியே அனுப்பினார்கள். அந்த நேரத்தில் இந்தக் கார் என்னுடைய கண்ணில் பட்டது. வண்டி எண்ணைப் பார்த்ததும் இது திருடப்பட்ட கார் என்பதை உறுதி செய்துகொண்டேன். நான் அந்தக் காரை நிறுத்த முயன்றபோது அவர்கள் மீறி சென்றார்கள். உடனே காரை வேறு பக்கம் திருப்பி ஓட்ட முற்பட்டார்கள். உடனே நானும் அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடினேன். அப்போதே டிஎஸ்பி சாருக்கு தகவல் தெரிவித்துக்கொண்டே செல்லும்போது சாலை வளைவில் விழுந்துவிடுகிறேன். பிறகு எழுந்து ஓடி காரை பிடித்துவிட்டேன்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு உங்களை டிஜிபி பாராட்டியுள்ளார், எஸ்பி, ஐஜி என அனைவரும் பாராட்டியுள்ளனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

விவரிக்க வார்த்தைகளே இல்லை சார். இந்த சம்பவம் கேள்விப்பட்ட உடனே டிஜிபி சார் என்னை ஃபோனில் கூப்பிட்டு பாராட்டி, 25 ஆயிரம் பரிசு வழங்கியிருக்கிறேன் என்றார். அதைப் போல எங்க மேடம் (தஞ்சை காவல் கண்காணிப்பாளர்) கூப்பிட்டு பாராட்டி பரிசு வழங்கினார்கள். எங்கள் டிஎஸ்பி சாரும் பாராட்டினார். என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் பாராட்டினார்கள்.

இந்த சம்பவத்தைப் பத்தி உங்கள் ஊரில் என்ன சொல்கிறார்கள்?

நிறைய பேரு ஃபோன் போட்டு பேசுவாங்க. நேர்லையும் சொல்வாங்க, ரவுடிய பிடிச்சிருக்கீங்க, பார்த்து இருங்கன்னு. அம்மா கூட, ஊருக்குள்ள பேசிக்கிறாங்க, பார்த்து இரு சொன்னாங்க. நம்ம வேலையே ரவுடிகளைப் பிடிப்பதுதானே, அதற்காகத்தானே பணியாற்றுகிறோம்.

வீரதீர செயலுக்கான விருதுக்கு உங்கள் பெயரை காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

ரொம்ப பெருமையாக இருக்கிறது. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மிக உயரிய வருது. கிடைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT