ADVERTISEMENT

வீட்டில் தூங்கினால் கூட 'மெமோ'வா? பெரியார் பல்கலை பேராசிரியர் புலம்பல்!

12:13 AM Oct 05, 2019 | santhoshb@nakk…

வீட்டிலும், ஓடும் காரிலும் தூங்கியதற்கெல்லாம் கூடவா விளக்கம் கேட்டு மொமோ அளிப்பது? என்று பெரியார் பல்கலை பதிவாளரின் அடிப்படையற்ற நடவடிக்கையால் பேராசிரியர் ஒருவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

ADVERTISEMENT


சேலத்தை அடுத்த சித்தனூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (53). பெரியார் பல்கலையில் 14 ஆண்டுகளாக பொருளியல் துறை உதவி பேராசிரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 21.8.2019ம் தேதியன்று, காலை 10.10 மணியளவில், பாடம் நடத்தாமல் வகுப்பறையிலேயே தூங்கியதாக மாணவர்கள் சிலர் புகார் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT


மாணவர்களின் புகாரை சுட்டிகாட்டியுள்ள பல்கலை பதிவாளர் தங்கவேல், பேராசிரியர் வைத்தியநாதனுக்கு விளக்கம் கேட்டு குற்றச்சாட்டு குறிப்பாணை (மெமோ) ஒன்றை அக். 3ம் தேதி அளித்துள்ளார். அக். 11ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படியும் தெரிவித்துள்ளார்.


அந்த குறிப்பாணையில், 'பல்கலை சாசன விதிகளுக்கு முரணாக பணி நேரத்தில், அதுவும் வகுப்பு நடத்திடும் நேரத்திலேயே தூங்கி, கடமையில் இருந்து தவறியுள்ளீர்கள். இதனால், ஏன் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது?,' என்றும் அந்த குறிப்பாணையில் கேட்கப்பட்டுள்ளது.


இந்த குற்றச்சாட்டு குறிப்பாணை குறித்து நாம் பேராசிரியர் வைத்தியநாதனிடம் விசாரித்தோம்.


''குறிப்பாணையில் சொல்லப்பட்டுள்ள நாளில் நான் விடுப்பில் இருந்தேன். அன்றைய தினம் எனக்கு உடல்நலம் சரியில்லாததால், பெங்களூருவில் உள்ள நாராயணா ஹிருதாயலயா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றிருந்தேன். சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சென்றபோது, உடல் களைப்பால் ஓடும் காரிலேயே தூங்கினேன். மருத்துவ பரிசோதனை முடிந்து வீடு திரும்பியதும், என் வீட்டிலும் தூங்கினேன்.


விடுப்பில் உள்ள ஓர் உதவி பேராசிரியர் வீட்டிலோ, ஓடும் காரிலோ தூங்குவது எல்லாம் குற்றமாகுமா? இதற்கெல்லாமா விளக்கம் கேட்டு மெமோ கொடுப்பார்கள்? இப்படியொரு விந்தையான செயலை உலகில் எங்கும் காண முடியாது. பல்கலை பதிவாளரின் நடவடிக்கை என்னை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. என் மீது புகார் வந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அந்த புகார் நகலைக் கேட்டு பதிவாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்,'' என்றார் வைத்தியநாதன்.


போலி பணி அனுபவ சான்றிதழ் புகாரில் சிக்கியுள்ள தமிழ்த்துறை பேராசிரியர் பெரியசாமி, உரிய கல்வித்தகுதியின்றி பணியாற்றி வரும் மேட்டூர் உறுப்புக்கல்லூரி முதல்வர் மருதமுத்து, பெரியார் பல்கலை மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் சூர்யகுமார் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகள் இருக்க, இதுவரை அவர்கள் மீது பெயரளவில்கூட விளக்கம் கோராமல் இருக்கும் பல்கலை, வைத்தியநாதன் மீது மட்டும் காழ்ப்புணர்வுடன் செயல்படுவதாக கூறுகிறார்கள் பல்கலையின் உள்விவகாரங்களை அறிந்த சிலர்.


இது தொடர்பாக சில பேராசிரியர்களிடம் பேசினோம்.


''பெரியார் பல்கலையில் தற்போது டீன் ஆக உள்ள கிருஷ்ணகுமார், போலி பில் விவகாரத்தில் ஒருமுறை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார் வைத்தியநான். அப்போதுதான் முதன்முதலாக பல்கலை நிர்வாகத்திற்கு எதிராக செயல்படுவதாக வைத்தியநாதன் மீது, நிர்வாகம் ஒரு புகாரை கூறியது. அதன்பிறகு சுவாமிநாதன் என்பவர் துணைவேந்தராக இருந்தபோது, விதிகளை மீறி 22 உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முயற்சிகள் நடந்தன. அதைத் தட்டிக்கேட்டார்.


இந்நிலையில், பல்கலை ஊழல் குறித்து முன்பு ஒரு நாளிதழில் செய்தி வந்தது. அந்த செய்தியை வைத்தியநாதன்தான் கூறியதாக உள்நோக்கத்துடன் அவர் மீது ஒருநபர் விசாரணைக்குழுவை அமைத்தார், அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன். பல்கலையில் நடக்கும் ஊழலை கண்டுகொள்ளாத, அதேநேரம் தகுதியற்ற பேராசிரியர்களாக இருந்தாலும்கூட அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாய்வதில்லை. ஊழல் முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு வைத்தியநாதன் இடைஞ்சலாக இருப்பதால், அவரை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடும் திட்டத்துடன் பல்கலை நிர்வாகம் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இப்போது அளித்துள்ள மெமோவில்கூட துளியும் லாஜிக் இல்லை,'' என்கிறார்கள் பேராசிரியர்கள்.


'மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்' என்பதை மெய்யாக்கி உள்ளது பெரியார் பல்கலை.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT