ADVERTISEMENT

இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிறார் இ.பி.எஸ்.! ஜூலை 11- ல் அதிர்ச்சி வைத்தியம் யாருக்கு?

09:58 AM Jul 05, 2022 | santhoshb@nakk…


ADVERTISEMENT

ADVERTISEMENT

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமைக்கான குடுமிப்பிடி சண்டை உச்சமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்க அவருடைய ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர். வரும் ஜூலை 11- ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக ர.ர.க்கள் கூறுகின்றனர்.

ஜெ.,மறைவுக்குப் பிறகு, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்று கட்சியை வழி நடத்தி வருகின்றனர். இனியும் இரட்டைத் தலைமை எனும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்தால், கட்சியை முன் நகர்த்திச் செல்வதில் தொய்வு ஏற்படும் என்பதை உணர்ந்த முக்கிய நிர்வாகிகள், ஒற்றைத் தலைமைக்கான முழக்கத்தை திடீரென்று எழுப்பினர். எடப்பாடி பழனிசாமியின் கூடாரத்தில் இருந்து தான் இந்த முழக்கம் திட்டமிட்டு கிளப்பி விடப்பட்டது.

ஒற்றைத் தலைமைக்கான முழக்கம், கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, பெரியகுளத்தாரை ரொம்பவே ஆட்டம் காணச் செய்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி மாவட்டச் செயலாளர்களிலும் பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால், அவர்தான் ஒற்றைத் தலைமைக்கான ஒரே சாய்ஸ் என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்பட பலரும் இபிஎஸ்ஸை ஆதரிப்பதோடு, ஓபிஎஸ்ஸை வெளிப்படையாகவே தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த பரபரப்புக்கு இடையே, கடந்த ஜூன் 23- ஆம் தேதி, சென்னையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், ஏற்கனவே நிறைவேற்றுவதற்காக முடிவு செய்து வைக்கப்பட்டிருந்த 23 தீர்மானங்களையும் ஒரே வரியில் நிராகரித்த எடப்பாடி தரப்பினர், புதிய மற்றும் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தும், அடுத்த பொதுக்குழுவை ஜூலை 11- ஆம் தேதி கூட்டப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதனால் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோர் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினர்.

இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர், ஜூலை 11- ஆம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், இபிஎஸ், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, தமிழ்மகன் உசேன் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, திங்கள்கிழமை (ஜூலை 4), நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''வரும் ஜூலை 11- ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை கோரி, தனி நீதிபதியிடம்தான் செல்ல வேண்டும். உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டு உள்ளதால், நாங்கள் எந்த உத்தரவையும் இப்போது பிறப்பிக்க முடியாது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரும் ஜூலை 7- ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்,'' என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர். ஒருபுறம் வழக்கு, மேல்முறையீடு என ஓ.பி.எஸ். தரப்பு முட்டுக்கடைகளை போட முயற்சித்தாலும், இதைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இ.பி.எஸ். தரப்பு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், ஜூலை 11- ல் பொதுக்குழுவை நடத்த விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய பொருண்மை விவரங்களை 2432 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதமாக கொடுத்துள்ளனர். இதன் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக இலைக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். ''பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள உறுப்பினர்கள், தங்களுக்கு உரிய அழைப்பிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். இவற்றில் எதுவொன்று இல்லாவிட்டாலும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது.

கரோனா பரவல் அச்சம் உள்ளதால், அதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படும். முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டத்தில் 16 பொருண்மைகள் குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச்செயலாளர் பொறுப்பு குறித்து விவாதிக்கப்படும்.

முக்கியமாக, அ.தி.மு.க.வை முன்னெடுத்துச் செல்ல, இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்தும் பேசப்பட உள்ளது. இதே கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளரை நியமித்து விடுவோம். இபிஎஸ்தான் அந்தப் பொறுப்புக்குத் தகுதியானவர். பொதுச்செயலாளர் தேர்தல் குறித்தும் முடிவெடுக்கப்படும். பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் போட இருக்கிறோம்.

இவையெல்லாம் கட்சி சார்ந்த சங்கதிகள். எனினும், திமுக அரசை கண்டித்தும் சில தீர்மானங்களை வைத்திருக்கிறோம். குறிப்பாக, அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்தது, விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும்,'' என்கிறார்கள் ர.ர.க்கள்.

இது ஒருபுறம் இருக்க, கரோனா பரவலைக் காரணம் காட்டி, பொதுக்குழுவுக்கு ஆளுந்தரப்பில் இருந்து முட்டுக்கட்டைகள் வந்தால் என்ன செய்வது என்பதால், அதற்கும் மாற்றுத் திட்டத்தை வைத்திருக்கிறார்கள் இபிஎஸ் தரப்பினர்.

ஒரே இடத்தில் 3 ஆயிரம் பேர் கூடுவதற்கு அரசு தடை விதிக்கும்பட்சத்தில், அந்தந்த மாவட்டத்திலேயே பொதுக்குழு கூட்டத்தை நடத்திக்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். அதற்கும் முட்டுக்கட்டை வந்தால், வீடியோ கான்பரன்ஸ் மூலமும் பொதுக்குழுவை நடத்திக்கொள்ளவும் தீர்மானித்து இருக்கிறார்கள்.

அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தது செல்லாது என ஓ.பி.எஸ். தரப்பு புது குண்டை போட்டதால், எதற்கு தேவையில்லாத சர்ச்சை என்று இ.பி.எஸ். தரப்பு கருதியதோ என்னவோ, பொதுக்குழுவிற்கான அழைப்புக் கடிதத்தை அவைத்தலைவர் பெயரில் அனுப்பாமல், 'அதிமுக தலைமைக் கழகம்' என்ற பெயரில் மட்டும் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆகமொத்தத்தில், ஜூலை 11- ல், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆவதும், அன்று ஓ.பி.எஸ்.ஸூக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கவும் தயாராகி வருகிறது எடப்பாடி அன்டு கோ.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT