ADVERTISEMENT

குழப்பவாதி பிரதமரும் கரோனா அச்சுறுத்தலும்...

01:01 PM Dec 23, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்து நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் போது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தவர் போரிஸ் ஜான்சன். இதைவைத்துதான் அவரால் இங்கிலாந்து பிரதமராக முடிந்தது. நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர், வெளியுறவு செயலர் என அரசியலில் போரிஸ் ஜான்சன் பதவிவகித்த அனைத்திலும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. தொடக்கத்திலிருந்து குழப்பவாதி என்று அரசியல் வல்லுநர்களால் விமர்சிக்கப்பட்ட போரிஸ், பிரதமரான பின்னும்கூட குழப்பத்துடனேயே மக்களுக்கான முடிவுகளை எடுப்பதாக அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. அந்த குழப்பத்தின் விளைவுதான், லண்டனில் மீண்டும் போடப்பட்டுள்ள நான்காம் கட்ட லாக்டவுன் என்றும் கூட எடுத்துக்கொள்ளலாம்.

இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தென்னாப்பிரிக்கா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால் பதற்றத்திலுள்ள மற்ற உலகநாடுகள் இங்கிலாந்திலிருந்து தங்கள் நாட்டிற்கு வருபவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சில நாடுகள் இங்கிலாந்துக்கு விமான போக்குவரத்து சேவையைத் தடை செய்துள்ளது. புதிய வகை கரோனா உருவானதைத் தவிர, அது இவ்வளவு வேகமாகப் பரவுவதற்கு முக்கிய காரணமாக போரிஸ் ஜான்சன் மற்றும் அவருடைய அரசு நிர்வாகத்தின் குழப்பமான கரோனா தடுப்பு நடவடிக்கையையே பலரும் கைகாட்டுகின்றனர்.

இதுவரை அப்படி என்னமாதிரி குழப்பமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் போரிஸ் ஜான்சன்? கரோனா பரவத் தொடங்கியபோது முதலில் ஐரோப்பா கண்டத்தில்தான் தீவிரமாகப் பரவியது. பலர் கொத்து கொத்தாக கரோனாவால் பாதிக்கப்பட்டு மடிந்தனர். ஒவ்வொரு நாட்டு அரசியல் தலைவர்களும் என்ன செய்யப்போகிறோம் என்று புரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டு திக்குமுக்காடிப் போனார்கள். ஆனால், போரிஸ் ஜான்சனோ சரியான நடவடிக்கைகளை எடுப்பதாகக்கூறி, தனது குழப்பமான கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அப்போதே தொடங்கியிருந்தார். இங்கிலாந்து நாட்டில் கரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருந்தபோது லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. ஆனால், தீவிரம் குறையாதபோதும் ஒருசில மாதங்களிலேயே பொருளாதாரத்தை காரணம் காட்டி லாக்டவுனை எடுத்தது இங்கிலாந்து அரசு. இதன் பலனாக மீண்டும் இங்கிலாந்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அடிக்க தொடங்கியது.

அறிவியல் ஆலோசகர்கள் இரண்டாம் லாக்டவுனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று செப்டம்பர் மாதமே போரிஸ் ஜான்சன் அரசுக்கு வலியுறுத்தினார்கள். ஆனால், பல காரணங்களைச் சொல்லி அதை நடைமுறைப்படுத்தாமல் மக்களுக்கு குருட்டு நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருந்தார் போரிஸ் ஜான்சன். எதிர்க்கட்சி தலைவர் இரண்டாம் லாக்டவுன் அமல்படுத்துங்கள் என்று கேட்டதற்கு, ‘சந்தர்ப்பவாதம் என்பது எதிர்க்கட்சிகளின் அரசியல் விளையாட்டு’ என்று அரசியலாடினார் போரிஸ். ஒரு கட்டத்தில், கரோனா பாதிப்பு நிலவரம் அதிகரித்து, பெரும் விமர்சனத்திற்கு ஆளானதால் போரிஸ் ஜான்சன் அக்டோபர் இறுதியில் இங்கிலாந்து நாடு முழுவதும் சர்க்யூட் பிரேக்கர் லாக்டவுன் (பகுதி வாரியாக மாறுபட்ட விதிமுறைகளைக் கொண்டது) முறையை அமல்படுத்தினார்.

மார்ச் மாதம், உலகம் முழுக்க கரோனா தொற்று தீவிரமடைந்த வேளையில் உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையும் மீறி பொது இடங்களில் அதிகமானோருக்கு எடுக்கப்படும் கரோனா மொத்த பரிசோதனையை நிறுத்திவைத்து, மருத்துவமனையில் மட்டுமே பரிசோதனை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதனால் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ள முடியாத ஆதரவற்றோர், முதியோர் போன்ற பலர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர். மே மாதம், கரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், யார் மூலம் தொற்று பரவுகிறது என்பதை ட்ரேஸ் செய்யவும் இங்கிலாந்து அரசு 22 பில்லியன் யூரோக்களை செலவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் அரசின் நடவடிக்கை மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. ஒரு வளர்ந்த நாடு என்று சொல்லப்படும் இங்கிலாந்து, பிற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டிய சூழலில் போரிஸ் ஜான்சனுடைய நடவடிக்கையின் மூலம் பெரும் சரிவின் விளிம்பில் தொங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மக்கள் விதிமுறைகளை கடைக்கப்பிடிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் இருந்தாலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் சரியான நேரத்தில் சரியான விதிமுறைகளை அமல்படுத்துவதிலும் அரசு எந்த அளவிற்கு உறுதியாக இருந்தது என்பது கேள்விக்குறிதான்.

உலக சுகாதார அமைப்பு தொடங்கி நம் ஊர் கிராம பஞ்சாயத்து வரை, ‘இது கரோனா காலம்... முகக்கவசம் அவசியம்...’ என தீபாவளி சமயத்தில் டி நகரை அலறவிடும் போலீஸ் போல அறிவுரை செய்து வரும் நிலையில் இங்கிலாந்தில் கரோனாவால் போடப்பட்ட முதலாம் லாக்டவுன் விடுவிக்கப்பட்டபோது மக்கள் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என்று அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் கழித்து மீண்டும் முகக்கவசம் அவசியமாக அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இப்போது பலருக்கும், ‘ஏன் போரிஸ் ஜான்சனை குழப்பவாதி’ என விமர்சிக்கிறார்கள் என்று புரிந்திருக்கும். அதேபோல, கிறிஸ்துமஸ் குறித்து அவர் அண்மையில் ஏற்படுத்திய குழப்பம் போரிஸ் ஜான்சனை நம்பியவர்களுக்குக் கூட அவநம்பிக்கையைக் கொடுத்திருக்கும். “நான் தெளிவாக இருக்கிறேன், கிறிஸ்துமஸ் பண்டிகையை ரத்து செய்யமாட்டோம். வெளிப்படையாகச் சொல்கிறேன், இந்த நாட்டு மக்களுடைய எண்ணத்தை மீறி, ஒரு மனிதமற்ற செயலை செய்யமுடியவில்லை” என மக்களுக்குக் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட நம்பிக்கை கொடுத்துவிட்டு, ஓரிரண்டு நாட்களிலேயே, ‘கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான உங்கள் திட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று கூறி லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து பகுதியில் மீண்டும் லாக்டவுனை அறிவித்துள்ளார் போரிஸ் ஜான்சன். தடையை மீறி வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று ஆரம்பமான சூழலில், “கரோனா வைரஸை நாம் வீழ்த்துவோம் என்பதில் நான் நம்பிக்கையாக இருக்கிறேன். அடுத்த 12 வாரங்களில் இந்த அலையை நிறுத்துவோம்” என்று பேச்சாளர் போலப் பேசினார் போரிஸ் ஜான்சன். ஆனால், அவர் பேசியதற்கும் அவருடைய செயலுக்கும் இருந்த முரண்பாடுகள் கவனிக்கவேண்டியவை ஆகின்றன. இதுதான் அவருக்குக் குழப்பவாதி என்றும் விமர்சனத்தை பெற்று தருகிறது. பிரெக்ஸிட்டில் தொடங்கி பொருளாதாரம், கரோனா வரை பிரதமர் போரிஸின் குழப்பமான முடிவுகள் துக்ளக் தர்பாரை ஒத்ததாகவே பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டு மக்களின் பிரதிநிதியாக இருப்பவர்களின் முடிவு எத்தகைய விளைவுகளை அம்மக்களுக்கு ஏற்படுத்தக்கூடியது என்பதற்கு தற்போதைய இங்கிலாந்தும் ஒரு உதாரணம். இன்னும் பலதுறைகளிலும் போரிஸ் நடவடிக்கைகள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், இவ்விமர்சனத்தை மறைப்பதற்காக சில முடிவுகளை எடுக்கிறாரே தவிர மக்களின் துயரைப் போக்க ஒரு முடிவையும் எடுப்பதில்லை என்றும் அதற்கொரு விமர்சனம் எழுகிறது இவர் மீது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT