ADVERTISEMENT

பாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…

02:42 PM Oct 09, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

2013ல் மோடியை பெரிய ஹீரோவாக நிரூபிக்க உதவியவை ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள். அந்தத் தேர்தல்களில் மோடியின் பிரச்சாரம்தான் பாஜகவுக்கு வெற்றியை தேடித் தந்தது என்று பில்டப் செய்தார்கள். 2014 மக்களவை தேர்தலில் மோடி பிரதமராவதற்கு இந்த பில்டப் மிகவும் உதவியது. இதோ, 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கான வாய்ப்பை உறுதிசெய்ய அதேதேர்தல்கள் உதவப்போவதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

ADVERTISEMENT

அந்த மாநிலத் தேர்தல்களுடன் மிசோரம், தெலங்கானா மாநிலங்களிலும் பேரவைக்கு தேர்தல்கள் நடைபெறப்போகின்றன. இந்தத் தேர்தல்களை நடத்துவதா அல்லது மக்களவைக்கும் சேர்த்தே தேர்தல் நடத்துவதா என்று மோடி யோசிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அனைத்து முனைகளிலும் மோடி அரசு அடைந்துள்ள தோல்வியும், மக்கள் மத்தியில் மோடிக்கு எதிராக உருவாகியுள்ள எதிர்ப்பும் மக்களவைத் தேர்தலை தள்ளிப்போடச் செய்தது.

2012 ஆம் ஆண்டிலிருந்து மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி கார்பரேட் நிறுவனங்களின் நிதியுதவியுடன் டிஜிடல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதை போட்டோஷாப் பிரச்சாரம் என்று இப்போது சொல்கிறார்கள். உலகின் அத்தனை பெரிய கட்டுமானங்களையும் குஜராத்தில் இருப்பதாக இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது. பாஜகவின் பிரச்சாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறியடிக்க தவறிவிட்டன.

2013 ஆம் ஆண்டு மோடியை முன்னிறுத்திய சமயத்தில், பல மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றன. கர்நாடகா தேர்தல் மோடிக்கு முதல் சவாலாக அமைந்தது. ஆனால், அதில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதன்பிறகுதான் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த நான்கு மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் பாஜக ஆட்சிதான் நடைபெற்றது. ராஜஸ்தானிலும் மிஜோரம் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசு இருந்தது. அந்தத் தேர்தலில் மோடி பறந்து பறந்து பிரச்சாரம் செய்வதற்காக அதானியும் அம்பானியும் விமானங்களை கொடுத்தார்கள். தேர்தல் முடிவு வந்தபோது, மத்தியப்பிரதேச மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 44.88 சதவீதமும், காங்கிரஸ் 36.38 சதவீதமும் வாக்குகளை பெற்றிருந்தன. சத்தீஸ்கரிலும் பாஜக மூன்றாவது முறையாக வெற்றிபெற்றது. பாஜக 54.44 சதவீதம் வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி 43.33 சதவீதம் வாக்குகளையும் பெற்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. பாஜக கைப்பற்றியது. அங்கு பாஜக 45.17 சதவீதமும், காங்கிரஸ் கட்சி 33.07 சதவீதமும் வாக்குகளைப் பெற்றன. மிஜோரம் மாநிலத்தை காங்கிரஸ் மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. ஆக, இந்தத் தேர்தல்களில் ராஜஸ்தான் மட்டுமே பாஜகவுக்கு லாபம். அதிலும் அங்கு இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கமாக இருந்தது. ஆனால், மோடியின் பிரச்சாரத்தால்தான் மூன்று மாநிலங்களையும் பாஜக கைப்பற்றியது போன்ற ஒரு தோற்றத்தை மீடியாக்கள் வழியாக உருவாக்கினார்கள்.

இப்போது அதே நான்கு மாநிலங்களுடன், முன்கூட்டியே கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிஜோரம் எப்போதுமே காங்கிரஸ் கட்சிதான் ஜெயிக்கும். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் காங்கிரஸும் தெலுங்கு தேசமும், தெலங்கானா போராட்டக்குழுவும் கூட்டணி அமைத்திருக்கின்றன. இதை சந்திரசேகர் ராவ் கடுமையாக தாக்கியுள்ளார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இப்போது காங்கிரஸுக்கு சாதகமாக மாறி இருக்கின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் முழு மெஜாரிட்டியுடன் வெற்றிபெறும் என்றும், மத்தியப்பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் ஆட்சி அமைக்கத் தேவையான பலத்துடன் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றும் முதல்கட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான மனநிலை தீவிரமடைந்து வருவதை அந்த மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. பெட்ரோல் விலை உயர்வு, கியாஸ் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விவசாயிகளுக்கு அல்வா கொடுத்தது, அவர்கள் மீதான தொடர் தாக்குதல், தலித்துகள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்று இந்த மாநிலங்களில் அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இப்போது வெளியாகி இருக்கும் கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் காங்கிரஸுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும், மத்தியப்பிரதேசத்தில் மாதவராவ் சிந்தியாவும் காங்கிரஸ் கோஷ்டி மனப்பான்மையை முடிவுக்கு கொண்டுவந்து, அங்கு கட்சியைப் பலப்படுத்தி இருக்கிறார்கள். காங்கிரஸின் எதிர்காலம் மட்டுமின்றி, தங்களுடைய அரசியல் எதிர்காலம் குறித்தும் அந்தக் கட்சியின் முன்னணி தலைவர்கள் உணர்ந்து ஒற்றுமையாக இயங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய அஜித் ஜோகியால் அந்தக் கட்சிக்கு பின்னடைவு இருக்கும் என்று பாஜக எதிர்பார்த்தது. அங்கு அஜித் ஜோகியின் கட்சியுடன் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்துள்ளனர். ஆனால் இந்தக் கூட்டணி காங்கிரஸ் வெற்றியை பாதிக்காது என்று கருத்துக் கணிப்பு கூறியிருப்பதால், பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT