ADVERTISEMENT

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார் - பெங்களூர் புகழேந்தி தடாலடி!

10:46 PM Aug 26, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

கடந்த சில நாட்களாக அதிமுக தலைமையை அசைத்து பார்த்து வருகிறது கொடநாடு கொலை வழக்கு. தன்னை இந்த வழக்கில் சேர்க்க முயற்சி நடப்பதாக, சபாநாயர் அனுமதி தராத நிலையிலும் பேரவையில் இதுதொடர்பாக பேசினார் எடப்பாடி பழனிசாமி. அடுத்தடுத்த நாளில் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி பேரவையில் விவாதிக்கலாம் என்று சபாநாயகரிடம் மனு அளித்த நிலையில், நீதிமன்றத்தில் உள்ள வழக்கை பற்றி பேரவையில் விவாதமா? என்று அதிமுக தலைவர்கள் எதிர்த்தார்கள். நீங்கள் தானே முதலில் பேசினீர்கள் என்று எதிர் தரப்பு கேட்டால், அதற்கு அதிமுக தரப்பு அமைதியாகி விடுகிறார்கள். அரசியல்வாதிகள் மீது வழக்குகள் வருவது இயல்பான ஒன்றுதானே! எதற்காக எடப்பாடி உள்ளிட்டவர்கள் பதறுகிறார்கள், அதில் என்ன சூட்சம் உள்ளது என்பது குறித்து அதிமுகவின் முன்னாள் பொறுப்பாளார் பெங்களூர் புகழேந்தியிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம் நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,


முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது முதலில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது, பிறகு புகாருக்குள்ளான அமைச்சர்கள் மீது ரெய்டு நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கொடநாடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?


ஒரு கொலை நடந்து முடிந்துள்ளது. அதில் முன்னாள் முதல்வரின் பெரும் அடிபடுகிறது என்ற சூழ்நிலையில், மக்கள் இந்த விவகாரத்தில் என்ன நடைபெற்றது, அதில் ஏன் இவர் பெயர் அடிபடுகிறது என்ற கோணத்தில் சிந்திப்பார்கள். இவரை நல்லவர் என்று நினைத்தோமே, கடைசியில் கதை ஏன் இவ்வாறு செல்கிறது என்று அவர்களுக்கு தோணும். சாதாரண மனிதர்கள் அனைவருக்கும் இந்த எண்ணங்கள் வருவது இயற்கையான ஒன்றுதான். இவர் ஏன் பயப்படுகிறார், நான் இல்லை, இல்லை என்று இவர் ஏன் கத்துகிறார் என்ற எண்ணமே, அவரின் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட காரணமாக இருக்கிறது.


எதையும் தந்திக்க தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறாமல், என் பெயரை சேர்க்க முயல்கிறார்கள், இது அரசியல் பழிவாங்கும் முயற்சி என்று கூறுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ADVERTISEMENT


அரசு அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும், முதல்வராக இருந்தவர்கள், இருக்கிறவர்களுக்கு அது மிக முக்கிய ஒன்றாகும். இன்றைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தக்க பாதுகாப்பு கொடுத்து வருகிறது. ஆனால் இவர்கள் அம்மா, அம்மா என்று வார்த்தைக்கு வார்த்தை அழைக்கிறார்கள். ஆனால், அவர்களின் வீட்டிற்கு என்ன பாதுகாப்பு கொடுத்தார்கள். அம்மா வாழ்ந்த இடம் என்று இவர்கள் கூறுகிறார்கள், ஆனால் ஒரு காவலர்கள் கூட அங்கே இல்லை. அங்கிருந்த அனைத்து காவலர்களையும் இவர்கள் அப்புறப்படுத்தியுள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் அங்கே போலிஸ் என்று ஒருவர் கூட இல்லை. ராம் பகதூர் என்ற ஒருவர் மட்டுமே இருந்தார். அவரையும் கொலை செய்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி முதலில் காவலர்கள் எல்லாம் விலக்கப்பட என்ன காரணம் என்று சொல்ல வேண்டும்.


அவர் சொல்ல வில்லை என்றால் அவரின் மௌத் பீஸாக ஒருவரை வைத்துள்ளாரே ஜெயக்குமார், அவர் சொல்ல வேண்டியது தானே! மின் மிகை மாநிலம் என்று சொல்லிவந்த நிலையில், அங்கே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. ஜெனரேட்டர் அங்கே இருக்கிறது. இருந்தும் இத்துணை அட்டுழியங்களும் அங்கே நடந்துள்ளது. ஆனால் யாரும் அங்கே சென்று என்ன நடந்தது என்று பார்க்கவில்லை. இதுவரை எடப்பாடி அங்கே சென்று பார்த்துள்ளாரா? இல்லை, அந்த பகுதியை சேர்ந்த அமைச்சர் வேலுமணி அங்கே சென்றுள்ளாரா? ஒருவரும் அங்கே செல்லவில்லை. அம்மா வாழ்ந்த வீட்டில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள கூட இவர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் மீது அனைவருக்கும் சந்தேகம் வருவது இயற்கை தானே?


இவர்கள் கரடி கதை சொல்கிறார்கள், இந்த கதையை எல்லாம் யாரும் நம்ப மாட்டார்கள். கரடி பொம்மையையும், கடிகாரத்தையும் திருட, கொள்ளையர்கள் கொலை செய்துவிட்டு உள்ளே வந்திருப்பார்களா? இதை யாரும் ஏற்றுக்கொள்வார்களா? திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் இந்த கொலை வழக்கு பற்றி விசாரிப்பதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள். ஆனாலும், தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக விரைவாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை இதுதொடர்பாக தீர்மானம் ஒன்றை கொண்டு வரப்போகிறார் என்றால் உடனே அடித்துப்பிடித்து அறிக்கை வெளியிடுகிறார்கள். இவர்களுக்கு எதற்காக இவ்வளவு பயம்? நீங்கள் கூறுவது போல எதையும் தந்திக்க தயார் என்று சொல்ல வேண்டியதுதானே? எதற்காக எம்எல்ஏக்களை தரையில் அமர வைத்து கத்தவிட வேண்டும். ஆனால் ஒன்று, கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி மாட்டியதில் அண்ணன் பன்னீர்செல்வம் மகிழ்ச்சியாக இருக்கிறார்.


நீதிமன்றத்தில் கொடநாடு விஷயம் தொடர்பாக வழக்கு இருக்கும் போது அதைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளாரே?


நீட் விவகாரம், 7 பேர் விடுதலையில் தாமதம், சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு இருக்கிறது. அப்படி இருக்கையில், இதை கிளறியது யார்? முதல்வர் ஸ்டாலினா இதை பற்றி பேசினார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அனுமதி இல்லாமல் இதை பெற்றி பேசியதே எடப்பாடி பழனிசாமி தான். சபாநாயகர் பேச கூடாது என அனுமதி மறுத்த போதிலும், விடாப்பிடியாக கொடநாடு தொடர்பாக பேசியவர் அவர்தான். ஆகையால் கொடநாடு விவகாரம் இந்த அளவிற்கு போனதற்கு எடப்பாடி பழனிசாமிதான் முழுமுதல் காரணம். ஆனால் இந்த விவகாரத்தில் எடப்பாடி, ஜெயகுமார் உள்ளிட்டவர்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். கொடநாடு விவகாரத்தில் பேரவையில் போராட்டம் நடத்த தெரிந்த இவர்களுக்கு, பொதுப் பிரச்சனைகளில் இதுவரை இப்படி போராட்டம் நடத்தினார்களா? இவர்கள் யாருக்காக செயல்படுகிறார்கள் என்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தன் நலனை தாண்டி இவர்கள் யாரும் சிந்திப்பதேயில்லை. இந்த விஷயத்தில் அது அப்பட்டமாக தெரிய வந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT