ADVERTISEMENT

உண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா?

02:04 PM Dec 03, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

“இந்த மசோதாவால் விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைக்கும் என்று, ஒரு விவசாயியாக நான் உணர்ந்திருக்கிறேன். கிராமப்புறங்களில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் உருவாகி, வேலை வாய்ப்புகள் பெருகும்” என்று கடந்த செப்டமர் மாதம் புதிய வேளாண் சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தபோது முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

மேலும், “எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதைப் போல் அல்லாமல், இச்சட்டங்களில் உழவர் சந்தைத் திட்டத்திற்கும், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் வழிவகை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், உணவுப் பொருட்களை நிறுவனங்கள் பதுக்குவதைத் தடுப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்வதற்காகவும், இருப்பில் வைப்பதற்காகவும், விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டில் தொடரும் என்பதால், விவசாயிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்யும்போது குறைந்தபட்ச ஆதார விலை தொடரும், ஆனால் தனியார் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதார விலை இருக்கிறதா இல்லையா என்பது வேளாண் சட்டத்தில் குறிப்பிடவில்லை. இந்த சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி குறிப்பிட வேண்டும் என்றுதான் தற்போது டெல்லியில் விவசாயிகள் எட்டு நாட்களாக போராடி வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவித்தது, நீண்ட நாட்களாக துர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்த பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார, குடிமராமத்து திட்டத்தை அறிவித்தது, போன்ற திட்டங்கள் விவசாயிகளின் மத்தியில் முதல்வருக்கு ஒரு நல்லப் பெயரையும் வாங்கி தந்தது. இதனை தொடர்ந்து கடந்த எட்டு மாதங்களில் முதல்வர், தான் ஒரு விவசாயி என்பதை செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் மற்றும் தொண்டர்களின் மனதில் பதிய வைத்துவந்தார். தஞ்சை நீடாமங்கலம் அருகே வயலில் பயிரிட காத்திருந்த விவசாயிகளை சந்திக்க சென்றபோது, மாட்டு வண்டியில் சென்றது. வேட்டியை மடித்துக்கட்டி நாத்து நட்டது போன்றவை உண்மையிலேயே நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். இதே முதல்வர்தான் பல ஏக்கர் விவசாய நிலங்களை அழித்துவிட்டு, சேலம் டூ சென்னை எட்டு வழிச்சாலை அமைக்க வேண்டும் என உறுதியாக இருந்து, விவசாயிகளின் எதிர்ப்பால் அந்த கனவு திட்டத்தை கைவிட்டார். அதேபோல நியூட்ரினோ திட்டம், மீத்தேன் திட்டங்களில் முதலில் முதல்வரின் நிலைப்பாடு வேறாக இருந்ததையும் சற்று பின்னோக்கி பார்த்தோம் என்றால் தெரியும்.

தற்போது கூட பல விவசாய சங்கங்கள், விவசாயிகள் எதிர்க்கும் புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார். ஆளும் பாஜகவின் கூட்டணியில் இருப்பதனால் அதை ஆதரித்திருக்கிறாரா என்றால், தான் ஒரு விவசாயியாக உண்மையை உணர்ந்துதான் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறேன் என்று அப்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார். மத்திய அரசோ விவசாயிகளுக்கு சுதந்திரம் பெற்று தந்துவிட்டதாக தொடக்கத்திலிருந்து கூறி வருகிறது. `ஒரே நாடு ஒரே சந்தை’ என்கிற முறையில் இந்தியாவில் எந்த மூலையில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அந்தப் பொருளுக்கு எந்த இடத்தில் அதிகமான விலை கிடைக்கிறதோ, அங்கு போய் அந்தப் பொருளை விற்கலாம் என்று மத்திய அரசு, பிரதமர், சில வலதுசாரி அமைப்புகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்திய விவசாயிகளில் 86 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள். அதாவது ஐந்து ஏக்கருக்குள் விவசாயம் செய்பவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பதற்கு, அவர்கள் வசிக்கும் தாலுகாவைத் தாண்டி வெளியே வர மாட்டார்கள். ஏற்கனவே கடன் வாங்கி விவசாயம் செய்யும் ஒரு விவசாயி, மேற்கொண்டு வியாபாரம் செய்ய செலவு செய்து அவருக்கு ஏற்ற தொகை எங்கு கொடுக்கப்படுகிறதோ அங்கு செல்வாரா? அது வியாபாரிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும்தான் சாதகமாக இருக்கும் எனும் விவசாயிகள் `ஒரே நாடு ஒரே சந்தை’ என்பது ஒரு வெற்று முழக்கம் என்றே கூறுகின்றனர்.

பிரதமர் மோடியும் கூட, எதிர்கட்சியினர் இந்த புதிய வேளாண் சட்டத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என்றார். ஆனால், அவருடைய கூட்டணியில் பல ஆண்டுகளாக இருந்த அகாலி தளம் கட்சி இந்த சட்டம் இயற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியிலிருந்து விலகியது குறித்து பிரதமர் வாய் திறக்கவில்லை. தன்னை விவசாயி என்று ஏறும் ஒவ்வொரு மேடையிலும் சொல்லிக்கொள்ளும் தமிழக முதல்வரோ, மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்து மௌனம் சாதித்து வருகிறார். டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் 'டெல்லி சலோ' போராட்டத்திற்கு செல்ல இருந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படாமல் போலீஸ் உதவியுடன் வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். எட்டு நாட்களாக அங்கு டெல்லி முழுவதும் சூழ்ந்திருக்கும் வட இந்திய விவசாயிகள் குறித்து முதல்வர் எதுவும் வாய் திறக்கவில்லை.

தனியார் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வங்கித்துறை, விமான போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் அரசாங்கத்தின் கைகள் மெல்ல கட்டப்பட்டு, இத்துறைகள் முழுவதுமே இன்று முழுமையாக தனியாரின் ஆதிக்கத்திற்கும் சென்றுள்ளது. இதேநிலை விவசாயத்துறைக்கும் எதிர்காலத்தில் ஏற்படும்போது, இன்று பொதுத்துறை வங்கிகளுக்கும், ஏர் இந்தியா நிறுவனத்திற்கும், என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை விவசாயிகளுக்கும் ஏற்படாது என்பது நிச்சயமல்ல.

இவ்வளவு ஏன், பாஜகவின் தாய் இயக்கம் ராஷ்த்ரிய சுயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ்-இன் கீழ் செயல்படும் விவசாய சங்கமான பாரத் கிஸான் சங், புதிய வேளாண் சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி குறிப்பிடவில்லை என தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து, இதற்காக ஒரு புது சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. அப்படி இருக்கையில் இந்த சட்டத்திற்கு ஒரு விவசாயியாக உணர்ந்து ஆதரவு தெரிவித்திருக்கும் பழனிசாமி எந்தப் பிரச்சனையும் வராது என்று ஆணித்தரமாக சொல்கிறார், உண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா? எனும் கேள்வியும் எழாமல் இல்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT