ADVERTISEMENT

தமிழர்களின் வரலாற்றை புரட்டிப் போடும் ‘ஏகன் ஆதன் கோட்டம்’ தூண் கல்வெட்டு..!

03:39 PM Jul 06, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு, வாழ்வியல், வணிகம் என தோண்ட, தோண்ட கிடைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது மதுரையில் மற்றொரு மிகச்சிறந்த சான்று கிடைத்துள்ளது. சுமார் 2300 ஆண்டுகள் பழமையான தூண் கல்வெட்டு எம்பது முதன்முதலில் கிடைத்துள்ளது. இந்த அபூர்வ கல்வெட்டை ஆய்வு செய்த ஆய்வாளர் ஆனந்தன் கூறும்போது... “சங்கம் வளர்த்த மதுரையில் தமிழ்நட்டின் மற்ற பகுதிகளில் கிடைக்கப் பெறுவதுபோல எண்ணிலடங்கா வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பதில்லை. ஆனால் கிடைக்கப் பெறும் அத்தனை சான்றுகளும் வரலாற்றைப் புரட்டிப் போடுவதாகவே அமந்துவிடும். சமீபத்திய கண்டுபிடிப்புகளான கீழடி அகழாய்வுகூட சங்க காலத்தை மேலும் 600 ஆண்டுகளுக்கு பின்னோக்கிக் கொண்டுப்போவதாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

அந்த வகையில் மதுரை கிண்ணிமங்கலத்தில் கிடைத்திருக்கும் தமிழிக் கல்வெட்டு இதுவரை இருந்து வந்த வரலாற்று சமயத் தரவுகளை மறு ஆய்வு செய்ய வைக்கும். மதுரைக்கு மேற்கில் சுமார் 20 கிமீ தொலைவில் செக்காணூரணி-திருமங்கலம் சாலையில், கிண்ணிமங்கலம் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஏகநாதன் குருகுலம், ஏகனாதன் பள்ளிப்படை என்று வழங்கப்பட்டு 67 தலைமுறை குருபரம்பரைக் கோட்டமாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்களுக்கு கல்வி, கலை, மருத்துவம், வானவியல், ரசவாதம், போர்ப்பயிற்சி, ராஜதந்திரங்கள், ராஜயோகம் என 16 விதமான கலைகளைக் வழிவழியாக போதித்த, 66 குருமார்களையும் இதே இடத்தில் சமாதியாக்கி வந்திருக்கின்றனர்.

இப்போது இருக்கும் திரு. அருளானந்த சுவாமிகள் 67 ஆவது குருவாக உள்ளார். குருகுலத்தில் பேரனுக்கு தாத்தா என்ற வகையில் வழி வழியாக குருவாக ஏற்றுவந்த மரபு இன்று வரை தொடர்ந்து வருகிறது. பள்ளிப்படைக்கு பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட லிங்கக் கோவில் ஏகநாதர் என்ற பெயருடன் விளங்குகிறது. நண்பர்கள் திரு. இரா. இராஜவேல் மற்றும் நண்பர் திரு. காந்திராஜனுடன் இணைந்து சமீபத்தில் மதுரை மேற்கு வட்டாரத்தில் மேற்கொண்ட தேடுதலில் திரு. அருளாந்த சாமிகளை சந்திக்க நேர்ந்தது. அவர் சொன்ன தகவல் மூலமும் அங்கு கருப்புசிவப்பு பானை ஓடுகள், எழுதுபொருட்கள், இசைக் கருவிகள், நாணயங்கள், ஆபரணங்கள், எலும்புகள் என எல்லாமே அங்கே பல்வேறு காலகட்டங்களில் கட்டிட அபிவிருத்திக்காக தோண்டும்போது வெளிப்பட்டவை.

அதில் ஒரு ஓட்டில் தமிழி எழுத்து ”ந” என்ற ஒற்றை எழுத்து இருப்பது போன்ற சந்தேகம் வரவே இது தமிழி எழுத்தாக இருக்கலாம். இது போன்ற எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டு ஏதேனும் இருக்கிறதா என்றால், ஆம் கிணற்று வாய்க்காலில் ஒரு கல்லில் இருக்கிறது. அதில் குருநாதர் பற்றிய செய்தி இருக்கிறது என்றார். அடுத்த நாள் அதே கல்லினைத் தேடிக் கண்டுபிடித்து வைத்திருந்தார். 26 செ.மீ அகலமும் 56 செ.மீ உயரமும், நான்முகத்துப் பாதமும், எண்பட்டைத் கம்புப்பகுதியும் கொண்ட கொண்ட தூண் துண்டு அது. எண்பட்டை ஆரம்பிக்கும் இடத்தில் மூன்று முகமுத்திலும் முதல் வரியில் “ஏகன் ஆதன்” எனவும் இரண்டாவது வரியாக “கோட்டம்” எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தமிழி கல்வெட்டுகள் எல்லாம் பாறைகளிலும், கற்படுக்கைகளிலும், கற்படுக்கைக்கு உண்டான புருவ வெட்டுக்களிலும், நடுகற்களிலும், பானை ஓடுகளிலுமிருந்தே கிடைத்திருக்கின்றன. ஆனால் கல் தூணில் தமிழி கல்வெட்டு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை.

எழுத்து வடிவத்தைக் கொண்டு கிமு. மூன்றாம் நூற்றாண்டாகக் கணிக்க வாய்ப்புண்டு. இம்மடம் சேரநாட்டிலிருந்து மதுரை மாநகரை இணைக்கும் பெரும் வணிகப் பாதையில் அமைந்துள்ளதும், மதுரை நகருக்குள் நுழையும் முன் இருக்கக் கூடிய முக்கிய மடமாகவும், வைத்திய சாலையாகவும் இந்த குருகுல மடம் இருந்ததினால் இங்கே மேற்கத்திய வணிகர்கள் வந்து தங்கிச் செல்வது வழக்கமாக இருந்ததாகவும் நம்மிடம் செய்தி பகிர்ந்தார் தற்போதைய குரு. பள்ளிப்படைக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க பெரும் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த அடுப்பிற்கு வைத்திருந்த கல்லில், மற்றொரு கல்வெட்டு இருப்பதையும் காட்டினார். ஒரு அடி நீள அகலம் கொண்ட கருங்கல்லின் முகப்புப் பகுதியில் “இறையிலியாக ஏகநாதன் பள்ளிப்படை மண்டளி யீந்தார்” என்ற வாசகம் ஐந்து வரிகளாகப் பொறிக்கப்பட்டுள்ளது. நன்காவது வரி முடிவில் பாண்டியர் சின்னமான இரட்டை மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியில் கிண்ண வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் முந்தைய தமிழிக் கல்வெட்டில் ‘ஏகன் ஆதன்’ என வழங்கிய பெயர் ஆயிரம் ஆண்டுகள் கடந்து ஏகநாதன் என்று ஒற்றைப் பெயராக மருவியும், கோட்டம் என்பது பள்ளிப்படையாகவும் மாற்றம் பெற்றிருக்கிறது. மீன் சின்னம் சிறப்பு என்றால், கிண்ணம் பொறிக்கப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு. இந்த மடத்தின் பெயரே கிண்ணிமங்கலம் குருகுல மடம். வைத்திய சேவையை பிரதானமாகச் செய்ததால் மருந்து கொடுக்கும் கிண்ணத்தினையே அடையாள இலட்சினையாகக் கொண்ட குருகுலம். இது இருக்கும் ஊர் இதன் பெயராலேயே கிண்ணிமங்கலம் என்றாயிற்று. இதுவரை வாய்வழியாக சொல்லிவந்த இரண்டாயிரம் ஆண்டுகால குருபரம்பரைக்கு சான்று சேர்க்கும் வகையில் இன்று தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரம் கிடைத்துள்ளது மிகச் சிறப்பு. இவர்கள் எந்த சமய வழக்கத்தையும் சார்ந்திராமல் சங்க காலம் தொட்டே பயின்று வரும் நெறிமுறைகளைக் கடைபிடித்து வருகிறார்கள். குருகுல வளாகத்திற்குள் இருக்கும் பள்ளிப்படையை கோவில் என்றோ லிங்கத்தை சிவன் என்றோ குறிப்பிடுவதில்லை.

முன்னோர்களை சமாதி ஆக்கும்போது லிங்கம் வைத்து பள்ளிப்படை ஆக்குவதும் அவர்களை அந்த உருவிலேயே வணங்கி வருவதும் மரபு அதனை இன்றும் தொடர்கிறார்கள். சங்க காலத்தில் எவ்வாறு குருகுலம் செயல்பட்டு மக்களுக்கு கல்வி, கலை மற்றும் தொழில் நுணுக்கங்களை, போர்த் தந்திரங்களைச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள், மக்களில் நோய்நொடிகளை எவ்வாறு குணப்படுத்தி இருப்பார்கள் என்பதற்கு கண்கூடான சான்றாக இது திகழ்கிறது. ஈராயிரம் ஆண்டுகளாக சிறப்புடன் திகழ்ந்து வந்த இந்தக் குருகுலத்திற்கு கும்பினியார் ஆக்கிரமித்த காலத்தில் தடை விதித்து இதன் செயல்பாடுகளை முடக்கி வைத்திருக்கிறார்கள். போர்ப்பயிற்சி கொடுத்து வந்தது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

இந்த குருகுலம் குறித்து ஆங்கிலேய அதிகாரிகள் அப்போது இருந்து வந்த குருவின் பெயரால் “பஞ்சாட்சர குருகுல சத்திர மடம்” என்ற பெயரில் 40 பக்க ஆவணம் தயாரித்து இப்போதும் சென்னை ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கல்வெட்டுச் சாசனங்கள், அடையாளங்கள் என ஏராளமாக அங்கே புதைந்து கிடந்தாலும், இதன் பாரம்பரியம் வழி வழியாகக் கடத்தப்பட்டு இன்றுவரை தொடர்வது சிறப்பு" என்கிறார்.

இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் முனைவர் பட்ட ஆய்வாளர் வே.ராஜகுரு ஆகியோர் கூறியதாவது, “தமிழர் வாழ்வியல் வரலாற்றில் இந்த தமிழிக் கல்வெட்டு புதிய பரிமாணத்தை தரவல்லது. பல்வேறு பண்பாட்டு முடிச்சுகளை அவிழ்த்திருக்கிறது. இந்த கல்வெட்டு வாசிக்கப்படுவதற்கு முன்னதாகவே இந்த கல்வெட்டில் ஏகநாதன் கோட்டம் என்ற செய்தி பொறிப்பு உள்ளது என 67 ஆவது சித்த மடத்தலைவர் அருளானந்தம் கூறிய செய்தி, கல்வெட்டிலும் அப்படியே பொறிக்கப்பட்டிருந்தது, கல்வெட்டை வெளிப்படுத்திய தொல்லியல் ஆர்வலர்களுக்கு இது வியப்பை தந்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கல்வெட்டில் ‘ஏகன் ஆதன் கோட்டம்’ என எழுதப்பட்டுள்ளது குறித்து கல்வெட்டின் எழுத்துருக்களை வாசிக்கத்தெரியாத மடத்தின் சித்தர் எப்படி கூற முடியும் என்ற கேள்விக்கு, அதற்கு அந்த சித்தரின் பதில் ‘இங்குள்ள ஒவ்வொரு பொருட்களையும் பற்றிய தகவல் எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது’ என்பதுதான். எனில் 16 வகையான கலைகள் கற்றுத்தரப்படுவதுபோல சுமார் இராண்டாயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் உள்ள செய்தி வரை செவிவழி கற்பித்தலாக சித்தர் வழி மரபுக்கு கடத்தப்பட்டிருப்பதை உணர முடிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக இயங்கும் மருத்துவ சாலை, கல்விச்சாலை, சித்தர் மரபு, போர்க்கலை பயிற்சி மையம் இதுவே என எண்ணும்போது பிரமிப்பாக உள்ளது.

உலகலாவிய பண்பாட்டு மரபைப் பொறுத்தவரையில், முன்னோர்களை வழிபடும் முறைதான் முந்தி நிற்கிறது, அதே அடிப்படையில் தமிழகத்திலும் மூத்தோர் வழிபாட்டு முறைதான் பின்னாளில் கோயில் கட்டுமானத்திற்கான அடிப்படை என்பதை விளக்குகிற விதத்தில், தமிழர் வரலாற்றில் கல்வெட்டு சான்றுடன் கூடிய ஒரு தொடர் சந்ததியாக இங்கு வசிப்பவர்களையும் அவர்களின் முன்னோர்களையும் நாம் கருதலாம். இந்திய அளவில் பல வழிபாட்டு தலைமுறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயங்கி வருவதாக கூறி வந்தாலும் அவற்றை தொல்லியல் ரீதியில் உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 2000 ஆண்டுகளுக்கு மேம்பட்ட ஒரு சந்ததி தொடர்பினைக் கொண்டது ஏகநாதன் சித்தர் மடம். கல்வெட்டு சான்றின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரே சித்தர் மரபாக உள்ளது.

தமிழிக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்தூண் தமிழர் மரபுப்படி அடிப்பகுதி நான்கு பக்கங்களும், அதன் மேற்புறத்தில் எட்டுப்பட்டைகளையும் கொண்ட லிங்க வழிபாட்டு முறையின் முன்னோடியான கந்து (கல்தூண்) ஆகும். கோட்டம் என்ற சொல்லுக்கு, அரசன் வீடாகிய அரண்மனை, தெய்வ வீடாகிய திருக்கோவில், துறவியர் தங்கும் மடம் ஆகிய பொருளுமுண்டு. கோட்டம் என்ற சொல்லுக்கு கோவில் என்ற பொருளுடன் புறநானூறு 299 ஆம் பாடலில் முருகன் கோட்டம் பற்றி குறிப்பிடப்படுகிறது. மணிமேகலையில், ‘சுடு மண்ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும்' (மணிமே.6:54 - 59) என்கிறது .இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களின் கட்டுமானங்கள் கீழடியில் தொடர்ச்சியாக கிடைத்து வருவதோடு அதிலே ஆதன் என்ற பெயர் தொடர்ச்சியாக பயின்று வருவதன் மூலம் மதுரையை ஒட்டிய பகுதிகளில் குறிப்பிட்ட பகுதி மக்களின் தலைவர் ஆதன் என்று அழைக்கப்பட்டிருப்பது இக்கல்வெட்டு சான்றின் மூலம் உறுதியாகிறது.

அதுமட்டுமின்றி இந்த கல்வெட்டில் சொல்லப்பட்ட 'ஏகன் ஆதன் கோட்டம்' என்ற சொல்லாடல் பின்னாளில் 'ஏகநாதன் பள்ளிப்படை' என்றும் தொடர்ச்சியாக ஏகநாதர் திருக்கோவில் என்றும் மாறியிருப்பதையும் கருத்திற்கொண்டு ஆதன் என்ற சொல்லாடலே தமிழ் இலக்கணப் பிணைப்பு விதியின்படி, ஏகன் ஆதன் என்பது ‘ஏகனாதன்’ என்றாகி பின்னாளில் ஏகநாதன் என்றானது, என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இதே அடிப்படையில் தமிழகத்தில் அமைந்திருக்கும் இன்னும் பிற கோவில்களின் பெயர்களை ஒப்புமை செய்யும்போது அதில் பழங்கால தமிழ் சொற்களின் முன்னொட்டும் ஆதன் என்ற பின்னொட்டுடன் இணைந்து (னாதன்) நாதன் என்ற சொல்லாக திரிபடைந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

‘சொக்கன் ஆதன்’ என்ற மதுரையை ஆண்ட மன்னனின் பெயர்தான் ‘சொக்கநாதன்’ என ஆகியிருக்கிறது என்றும், ‘நாகன் ஆதன்’ என்ற பெயர் ‘நாகநாதன்’ என்றும், ‘கயிலாய ஆதன்’, ‘கயிலாயநாதன், ‘ராமன் ஆதன்’ ‘ராமநாதன்’ என்றும் இந்த கல்வெட்டை அடிப்படையாகக்கொண்டு கோயில்களின் நாதன் என்ற சொல்லாடல் ஆதன் என்ற சொல்லிலிருந்து பிறந்தது என நிறுவ முடியும். எனவே தமிழ்மொழி வரலாற்றில் தமிழ் சொற்கள் எவ்வாறு பிற மொழிகளில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டுவிட்டன என்பதற்கான சான்றாக இந்த கல்வெட்டு அமைந்திருப்பது தமிழ்மொழி வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது. மேலும் ஆதன் என்ற சொல் குழுவின் தலைமை பொறுப்பிலுள்ளோரை குறிக்கும் சொல்லாக உள்ளது. இந்த வழக்கம் சேரர்களிடையேயும் , பாண்டியர்களிடையேயும் உள்ளது.

உதாரணமாக ‘சேரல் ஆதன்’ ‘சேரலாதன்’ என்றும், ‘வாழி ஆதன்’ ‘வாழியாதன்’ என்றும், ஆதன் உங்கன் ஆதனுங்கன் என்றும் வழங்கி வந்துள்ளதை சான்றாக கொள்ளலாம். இப்படியாக இந்திய மொழியியல் வரலாற்றில் இது குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடிப்பதோடு, மனித வர்க்கவியல் ஆய்விலும் ஒரு சிறந்த பண்பாட்டு தொடர்ச்சி கொண்ட குருகுல நிறுவனத்தின் சித்தர் வழி கல்வி கற்கும் முறைக்கும் புதிய சான்றுகளை தரும் என்பதில் ஐயமில்லை என்கின்றனர். இதுபோன்ற சான்றுகள் தமிழர்களின் வரலாற்றை இன்னும் பழமையை நோக்கி இழுத்துச் செல்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT