ADVERTISEMENT

குடிகாரர்களை திருத்தும் வீரபத்திர அய்யனார்!!!

12:10 PM Aug 20, 2019 | rajavel

ADVERTISEMENT

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. ஆனால் அரசாங்கமே அந்த கேட்டை செய்வதால் மனிதர்கள் நிரந்தர குடிகாரர்களாக மாறி விடுவதால் லட்சக் கணக்கான குடும்பங்கள் சீரழிகின்றன. இது ஒருபக்கம். குடியினால் குடல் வெந்து நோய்களுக்கு ஆளாகி குடும்பத்தலைவர்கள் இறந்துபோவதால் விதவையான பெண்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே போகிறது. பல கிராமங்கள் விதவைகள் மட்டுமே வாழும் கிராமங்களாக மாறி வருகின்றன. அதோடு புத்தகப் பைகளுடன் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சிலர் போதைக்கு ஆளாகி சீரழிகிறார்கள். மாணவிகளும் ஆங்காங்கே சிலர் இந்த விஷயத்தில் மாட்டிக்கொள்கின்றனர். கோவில் திருவிழா குடும்பவிசேஷங்கள் என எல்லா நிகழ்ச்சிகளிலும் மது விருந்துதான் களைகட்டிவருகிறது.

ADVERTISEMENT



நண்பர்கள், மாமன், மச்சான் என்ற உறவுகள் கூட கூடிகுடிக்கிறார்கள். இப்படி மதுவுக்கு அடிமையாகி நோய்வாய்பட்டு இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். உதாரணமாக நோய் வாய்ப்பட்டு இறப்பது, வயோதிகத்தால் இறப்பது, குடும்பப் பிரச்சினை என இவைகளால் இறப்பவர்களை விட மிக அதிக அளவில் மதுவினால் இறக்கிறார்கள். இதை உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.


மேலும் 2016ல் எய்ட்சால் 1.8 சதவீதம் பேர்களும் சாலை விபத்தில் 2.5 சதவீதம் பேர்களும், கலவரத்தினால் 0.8 சதவீதம் பேர்களும் இறக்கிறார்கள். ஆனால் மதுவினால் மட்டும் 5.3 சதவீதம் பேர்கள் இறக்கிறார்கள். மேலும் 2016ல் உலக அளவில் மதுவினால் 30 லட்சம் பேர்களும் இறந்துள்ளனர் என புள்ளிவிபரம் தெரிவிக்கின்றன.‘


மதுக்கடை மூலம் அரசுக்கு ஆண்டு வருமானம் சராசரியாக 27 ஆயிரம் கோடி ரூபாய். 2008-09 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி வருவாய், 2016-17ல் 16 ஆயிரம் கோடி வருவாய், 2018ல் 28 ஆயிரம் கோடி என வருவாய் அதிகரித்தப்படியே உள்ளது. இதன் மூலம் குடிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே உள்ளன. தமிழகத்தில் 2.5 கோடி பேர் மதுப்பிரியர்கள். இதில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் அடுத்து 30 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகம் என்கிறது புள்ளிவிபரம் ஒன்று.

மதுவால் குடும்ப சீரழிவும், பள்ளி கல்லூரி பிள்ளைகளின் படிப்பும் பாழாகி வருகிறது. பல திறமைகள் உள்ள மனிதர்கள், மதுவினால் அழிந்துபோவதால் மனித வளம் உழைப்பு பாழாகிறது. இப்படி மது அரக்கணின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் தமிழக மக்களை காப்பாற்ற பல நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைகொடுத்தும் போராடி வருகிறார்கள். மது இல்லா தமிழகத்தை உருவாக்க மதுவுக்கு எதிராக பலர் பல இயக்கங்களை உருவாக்கி ஒரு பக்கம் போராடி வரும் நிலையில், தெய்வமும் தன் பங்கிற்க்காக போராடி வருகிறது.


ஆம். தீராத மது போதைக்கு அடிமையானவர்களை மீட்டு வருகிறார் கொஞ்சிகுப்பம் அய்யனார், வீரபத்திரன் ஆகிய தெய்வங்கள். கொஞ்சிக்குப்பம் கிராமத்தில் அய்யனார், விநாயகர், மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இதில் பூரணி பொற்க்கலையோடு அய்யனார் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். ஊருக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையோரம் இக்கோயிலில் உள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆலய பூசாரி ஒருவர், குடிபோதைக்கு அடிமையான ஒருவருக்கு அய்யனாரின் அனுமதியோடு வீரபத்திரசாமி முன்பு அமரவைத்து, இனி குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய சொல்லி, சாமி முன்பு உள்ள சிகப்புநிற கயிரை அவரது வலது கையில் கட்டிவிட்டார். அப்போது முதல் அந்த மனிதர் குடிப்பதையே மறந்துபோனாராம். இந்த செய்தி மக்கள் மத்தியில் பரவியது. அப்போது முதல் கொஞ்சிகுப்பம் அய்யனார், வீரபத்திரன் சாமிகள் புகழ் பரவ ஆரம்பித்தது.


இது பற்றி கோயில் பரம்பரை அறங்காவலர் பெரியவர் செல்வராசுவிடம் கேட்டோம். ஒரு காலத்தில் கொஞ்சிமரங்கள் சூழ்ந்த வனக்காடாக இருந்துள்ளது இப்பகுதி. அந்த காட்டை திருத்தி எங்கள் முன்னோர்கள் இங்கு குடி வந்தார்கள். அதனால் ஊருக்கு கொஞ்சிகுப்பம் என்ற பெயர் உருவாகியுள்ளது. காலப்போக்கில் எனது தந்தை அழகப்படையாச்சி இக்கோயிலையும் இங்குள்ள விநாயகர், அய்யனார், வீரபத்திரன் மற்றும் பரிவார தெய்வங்களாக துர்க்கை, மாரியம்மன், முருகன் ஆகிய தெய்வங்களை உருவாக்கினார். அதை ஊர் மக்கள் வழிபட்டனர், காலப்போக்கில் வெளியூரில் இருந்தும் வந்து வழிபட ஆரம்பித்தனர். அறநிலையதுறையின் பராமரிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருந்தும் பரம்பரை தர்மகர்த்தாவாக எங்கள் குடும்பத்தினர் இருந்து வந்தனர். இப்போது நான் இருந்து வருகிறேன். இங்கு வரும் பக்தர்களுக்கு தினசரி மதியம் அன்னதானமும் வழங்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்துவழிபட்டு செல்கிறார்கள் என்கிறார் பெரியவர் செல்வராசு பெருமையடன்.



கோயில் பூசாரி பார்த்தசாரதி நம்மிடம், இக்கோயில் தெய்வங்கள் மிகுந்த சக்தி மிக்கவை. அய்யனாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் கேட்பது கிடைக்கும். நினைத்தது நடக்கம். மதுபோதைக்கு அடிமையாகி மீண்டு வர முடியாதவர்கள், அதில் இருந்து மீண்டுவர இங்குள்ள அய்யனாரின் முன்பு வணங்கி பின்பு 50 ரூபாய் பணம் கட்டி ரசீது வாங்கி சென்று வீரபத்திரசாமிக்கு அர்ச்சனை செய்து வணங்கிய பின்பு அவர் முன்னாடி உட்கார வேண்டும். அப்போது மது பிரியர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். ஆகாயம், பூமாதேவி, வீரபத்திரசாமி சாட்சியாகவும் என்னை பெற்ற தாய், தந்தை மீது சத்தியம் செய்கிறேன். இனிமேல் எப்போதும் குடிக்கமாட்டேன் என்று மூன்று முறை உறுதிமொழி எடுத்து சத்தியம் செய்வார்கள். அதன் பிறகு அவர்கள் கையில் வீரபத்திரசாமியன் சிகப்பு கயிறு கட்டப்படும். இப்படி கட்டிய பிறகு பெரும்பாலும் யாரும் குடிக்கமாட்டார்கள். அதையும் மீறி குடிப்பவர்கள் உடல்நிலை பாதிக்கப்படும். சில ஆயிரம் முதல் பல லட்சம் வரை செலவு செய்ய நேரிடுகிறது. இதை அனுபவபூர்வமாக பார்த்தவர்கள், அனுபவித்தவர்கள் மீண்டும் குடிப்பதில்லை.

சாமி கயிறு கட்டிய பிறகு மீண்டும் மீண்டும் குடிப்பவர்கள் மரணத்தை சந்திக்கிறார்கள். எனவே இங்கு வந்து கயிறு கட்டிய பிறகு மதுவை மறந்து நல்ல முறையில் வாழ்கிறார்கள். இப்படி பல ஆயிரம் பேர்கள் பயன் பெற்றுள்ளனர். அந்த குடும்பங்கள் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கின்றன. இதன் பலனை அறிந்தவர்கள் மற்றவர்களிடம் சொல்ல தினசரி சுமார் 200 பேர்களுக்கு மேல் கயிறு கட்ட இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.



காலை முதல் மாலை வரை எல்லா நாட்களிலுமே கோயில் திறந்திருக்கும். மேலும் மது பழக்கத்தை தடுப்பதோடு இங்குள்ள தெய்வங்களை வந்து வணங்குகிறவர்களில் திருமண தடை, குழந்தைப்பேறு, திருடுபோன பொருட்களை கண்டுபிடித்து தருவது என அனைத்து குறைகளையும் நிவர்த்தி ஆகின்றன.
உதாரணமாக அன்னவல்லி கிராமத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தையே இல்லை. இங்குவந்து வேண்டுதல் செய்த பிறகு குழந்தை பிறந்துள்ளது. நெய்வேலி டவுன்சிப் பகுதியை சேர்ந்த என்எல்சி ஊழியர் வீட்டில் 45 பவுன் திருடுபோனது. இங்கு வந்த பிறகு சில நாட்களுக்குள் அந்த நகைகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. பல்வேறு ஆண், பெண்களுக்கு திருமணதடை நீங்கி திருமணம் நடந்துள்ளது. எனவே எங்கள் கொஞ்ச்சிகுப்பம் அய்யனார், வீரபத்திரன்சாமிகளின் பெருமைகள் தமிழக அளவில் பரவியுள்ளது என்பதற்க்கு உதாரணம் தினசரி சென்னை உட்பட பல மாவட்ட மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்துவழிபட்டு செல்வதே சாட்சி என்கிறார் பூசாரி பார்த்தசாரதி.

அமைவிடம்:- மதுவுக்கு அடிமையானவர்கள் மீட்கும் அய்யனார் வீரன் ஆலயம் விக்கிரவாண்டி. தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டிக்கு தெற்கே 11 கிலோ மீட்டரிலும், வடலூருக்கு வடக்கே 13 கிலோ மீட்டரிலும் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது இந்த கோயில். மதுவினால் உடல்நிலை பாதிப்பதோடு இறப்பதும் குடும்பங்கள் சீரழிவதும் பல குற்றங்கள் நடப்பதும் மதுவினால் தான் மனிதனால் மாற்ற முடியாத அந்த பழக்கத்தை தெய்வம் மாற்றுகிறது என்று மெய்சிலிர்போடு பேசுகிறார்கள் மக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT