ADVERTISEMENT

"இந்தி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி; ஆனால் தமிழ் அப்படியா.."?- மருத்துவர் ஷாலினி காட்டம்!

11:26 AM Sep 10, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட்டில் ப்ரிண்ட் செய்து பிரபலங்கள் அணிந்து வந்தது அந்த வாக்கியத்துக்கு மேலும் வலு சேர்த்தது. லட்சக்கணக்கான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரை அதிர வைத்தன. சினிமா பிரபலங்கள் ஆரம்பித்து பாமரன் வரையில் டீ சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் இது சரியான முறைதானா, இந்த எதிர்ப்பு மத்திய அரசின் காதுகளில் விழுமா போன்ற பல்வேறு கேள்விகளை நாம் மருத்துவர் ஷாலினியிடம் முன்வைத்தோம்.நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

ADVERTISEMENT

கடந்த சில நாட்களுக்கு முன்பு 'இந்தி தெரியாது போடா' என்று ட்விட்டரில் இளைஞர் ட்ரெண்ட் செய்தனர். பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதை நீங்களும் கவனித்திருப்பீர்கள். இதை தமிழின் மீது இருக்கின்ற பாசம் அல்லது இந்தி திணிப்பின் மீது இருக்கின்ற வெறுப்பு என்று பார்க்க வேண்டுமா இல்லை, இது ஒரு பேஷன் என்ற அளவில் பார்க்க வேண்டுமா?

அந்த காலத்தில் இருந்தே தமிழகத்தில் மொழி திணிப்பில் ஒரு வழக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது அப்பர், மாணிக்க வாசகர் காலம் தொட்டே இருந்து வருகின்றது. அந்த வகையில் இதைதான் படிக்க வேண்டும், எழுத வேண்டும், பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தும்போது அதனை ஆதிகாலம் முதலே அனைவரும் எதிர்த்தே வந்துள்ளனர். அந்த திணிப்பு உணர்வுக்கு எதிரான மனநிலை தமிழக மக்களுக்கு எப்போதுமே இருந்திருக்கின்றது. நாம் சும்மா இருக்குகின்ற போது நம்மை சீண்டுகிறார்கள் என்றால் நாம் இன்னும் எழுச்சியோடு அதற்கான எதிர்வினைகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். தற்போது நடந்துகொண்டிருப்பது கூட அந்த எண்ணத்தின் வெளிப்பாடாகத்தான் நான் பார்க்கிறேன். 10, 20 தலைமுறைக்கு முன்பு வட இந்தியாவில் வாழ்த்தவர்களில் பலர் தமிழ் பேசினார்கள். அவர்களுக்கு எல்லாம் தற்போது எந்த உணர்வும் ஏற்படவில்லை. ஏனென்றால் அவர்கள் கலாச்சாரத்தோடு தொடர்பில்லை. நாம் தொடர்ச்சியாக அந்த தொடர்பில் இருந்து கொண்டிருக்கின்றோம். அதனால் நமக்கு திணிப்பு என்றதுமே கோபம் வருகின்றது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனப்பான்மையும் தமிழகத்தில் இருந்து வருகின்றதே?

நீங்கள் சொல்லும் இந்த கலாச்சாரம் எப்போது வரும் என்றால் நாங்கள் நன்றாக செழிப்பாக இருக்கிறோம், நீங்கள் யாரும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது, நாங்கள் சாப்பிட்டுவிட்டோம், நீங்களும் கொஞ்சம் சாப்படுங்கள் என்று சொல்ல தோணும். ஆனால் அந்த சூழ்நிலையை நாம் இதுவரை அடையவில்லை. அதற்கான போதுமான தடைகளை அடிக்கடி அவர்கள் வேண்டுமென்றே உருவாக்குகிறார்கள். இந்த 3500 வருட தமிழக வரலாறு ஒரு சாதாரண மாணவனுக்கு கூட தெரியும் என்பதால் எங்களிடமா நீங்கள் வந்து வாலாட்டுகிறீர்கள் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும். இந்தி மிக குறுகிய காலத்திற்கு முன்பு உருவாகிய மொழி. பாரசிகம் தான் இங்கே அதிக ஆண்டுகள் பேசப்பட்டு வந்த மொழியாக நமக்கு தெரிகின்றது. ஏனென்றால் அவர்கள் இங்கு வந்து ஆட்சி செய்தார்கள். அதன் காரணமாக பெரும்பாலானவர்கள் அந்த மொழியினை கற்றுக்கொண்டனர். தற்போது அந்த உருது மொழியுடன் சமஸ்கிருதத்தை மிக்ஸ் செய்து இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று சொல்கிறார்கள். இந்தியே ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட மொழி, அதுவும் பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய மொழி. அதற்கு வயது 200 என்ற அளவில் தான் இருக்கிறது. எனவே யார்கிட்ட உங்க ஆட்டத்தை காட்டுகிறீர்கள் என்று நாம் கேட்கிறோம்.

நாம் அவர்களின் திணிப்பை கூட பெரிய அளவில் சீரியசாக எடுத்துக்கொண்டதாக நினைக்கவில்லை. ஒரு சிறுவனிடம் விளையாடும் பெரியவர்களை போலவே நாம் எடுத்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு அது எப்போது புரியும் என்று தெரியவில்லை. அந்த எண்ணம் அவர்களுக்கு வராத காரணத்தால்தான் தற்போது டீ சர்ட் வரை இந்த விஷயம் போய் நிற்கிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுடன் இதை ஒப்பிடும்போது, கோடிக்கணக்கான மக்கள் இந்த டீ சர்ட்டை போட்டு எதிர்ப்பை தெரிவிக்கின்ற போது அதனால் வரும் எதிர்வினைகள் அதிகம். பல இடங்களில் அதன் தாக்கம் எதிரொலிக்கும். இந்த கால இளைஞர்கள் இதனை கையில் எடுத்துள்ளார்கள் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். ஒன்றோடொன்று பொருத்தி பார்க்க வேண்டாம். அந்தெந்த கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப போராட்ட வழிமுறைகள் மாறுபடுகின்றது. இந்த கணினி யுகத்தில் இந்த மாதிரியான எதிர்ப்புணர்வு வெளிகாட்டப்படுகின்றது என்ற அளவில்தான் இதனை பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT