Skip to main content

டிக் டாக்- ஒரு மாதிரியான மனநோய்... - டாக்டர் ஷாலினி

 

இந்த நூற்றாண்டின் சமூக வலைதளங்களின் வளர்ச்சி பல புரட்சிகளை நிகழ்த்திக்காட்டியுள்ளது. கருத்து சுதந்திரத்தையும் விவாதங்களுக்கான சூழலையும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலகையே கையில் வைத்திருக்கும் முனைப்புடன் இளைஞர் பட்டாளம் முன்னேறும் நிலையில் அப்பாதையில் பல புதைகுழிகள் இருப்பதும் நிதர்சன உண்மையே. கைபேசி செயலிகள் வங்கி கணக்கு முதல் வாசல் தேடி வரும் உணவுகள் வரை வசதிகளை வாரி  வழங்கினாலும்,  மறுபுறம் கேலிக்கை தொடர்பான பல செயலிகளான டிக் டாக், மியூசிக்கலி போன்றவற்றால் கலாச்சார சீரழிவுகளும், பாலியல் குற்றங்களும் அரங்கேறுவதை தொடர்ந்து பார்க்க முடிகிறது. இதற்கான காரணம் என்ன? விளையாட்டு வீடியோக்கள் விபரீதத்தில் முடிவது ஏன்? இது குறித்து பிரபல மனநல மருத்துவர் டாக்டர்.ஷாலினி அவர்களிடம் பேசிய போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்...

 

tic tok

 

டிக் டாக், மியூசிக்கலி விடியோஸ் மூலம் தொடர்புகள் ஏற்பட்டு பல பிரச்சனைகள் நடப்பதை பார்க்கிறோம். அதே நேரம் இதன் மூலம் பிரபலமாகி பயன் பெற்றவரும் உள்ளனர். இது சரியா தவறா ? உங்களின் கருத்து என்ன ?
 

இதற்கு விளக்கம் சொல்வதற்கு முன்பு மனநலம் பற்றியும் பேசவேண்டியுள்ளது. எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்றபோதும் சிலருக்கு தன் மீது எல்லோரின் கவனமும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதை ஆளுமை கோளாறு எனலாம். இந்த மாதிரியான மனநோய் உள்ளவர்கள் தன்னை பிறரிடம் இருந்து சிறந்தவனாக காட்டிக்கொள்வார்கள். அனைத்தையும்விட நான் பெரியவன் என்ற எண்ணத்தில் அதே போல் பாவனைகளை பின்பற்றுவார்கள். இதுபோன்ற மனிதர்கள் எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறார்கள்.  சமூக வலைத்தளங்கள் இல்லாத காலத்திலும் சில பெண்கள் கை நிறைய வளையல் அணிவதும், இறக்கமான பிளவுஸ் போட்டுக்கொள்வதுமாக இருப்பார்கள். இது போன்ற மனநிலை உள்ளவர்களிடம் டிக் டாக் போன்ற செயலி கிடைக்கும் போது அதை மிக அதிகமாக பயன்படுத்துகிறார்கள். நிறைய வீடியோ எடுப்பது, அடிக்கடி செல்ஃபி எடுத்து அப்லோடு செய்வது, என இதற்கு அடிமையாகிறார்கள். மனநோய் இல்லாத நபர்களும் இவர்களது வீடியோ பார்க்கும் போது இதற்கு இவ்வளவு லைக் வந்திருக்கிறது, நாம் இன்னும் கவர்ச்சியாக வீடியோ எடுத்தால் நிறைய லைக் வாங்கலாம் என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்படுகிற வாய்ப்பு இருக்கிறது.

 

நீங்கள் சொல்கிற மனநிலை நமது கிராம புறங்களிலும் இருக்கும் என நினைக்கிறீர்களா? குழந்தைகள் கூட இதை செய்கிறார்களே ?
 

நோய்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. கிராமம், நகரம், ஏழை, பணக்காரன் என்றெல்லாம் நோய்க்கு தெரியாது.  சென்னையில் நூறில் நான்கு பேருக்கு இந்த நோய் இருக்கிறதென்றால் எல்லாஊர்களிலும் அதே நிலைதான்.  தன்னை எல்லோரும் விரும்ப வேண்டும், ஆஹா ஓஹோ  என சொல்ல வேண்டும், என்றெல்லாம் நினைப்பவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நிறைய பேர் இந்த வீடியோவை பார்ப்பார்கள் இது எங்கும் பரவும் என்று தெரிந்தே  இதுபோல வீடியோ எடுக்கபடுகிறது. இது இயல்பானதும், ஆரோக்கியமானதும் அல்ல. எனவேதான் இதை மனநோய் என்று சொல்கிறோம்.  அதுபோக குழந்தைகளுக்கு இது என்னவென்றே தெரியாது. அந்த வீட்டில் இருப்பவர்களில் யாருக்காவது இந்த மனபிறழ்வு இருக்கலாம். அவர் குழந்தையை வீடியோ எடுக்கும்போது குழந்தை அதையே பின்பற்றுகிறது. இது ஒரு மனபிறழ்வு தான் ஒழிய சாதாரண மனிதர்கள் இதை செய்துகொண்டிருக்க மாட்டார்கள்.

     

டான்ஸ், டப்பிங், பாட்டு பாடுவது இதெல்லாம் டிக் டாக்கில் அப்லோடு செய்வது திறமையை வெளிப்படுத்தும் ஒரு விஷயம் இல்லையா ? இதை நோய் என்று எப்படி சொல்லுவது.?
 

இப்போது நிறைய ‘ரியாலிட்டி ஷோக்கள்’திறமையை தேட போகிறோம், டேலண்ட் ஹண்ட், சிறந்த குரல் தேடல் என்பது போல விளம்பரம் செய்கின்றன. அந்த கதையை எல்லோரும் நம்பி இவ்வாறு செய்கிறார்கள்.  உண்மையில் பாட்டு பாடுவது, நடனம் ஆடுவதெல்லாம் எல்லோருக்கும் இயல்பானது. ஒரு சூழலில் அதை வெளிப்படுத்தும் போது அப்போதைக்கு அவர் சிறந்தவர். அடுத்த வருடமே வேறொருவர் சிறந்தவர் ஆவதில்லையா. அதனால், யாரையும் சிறந்தவர் என சொல்வதற்கில்லை . ஆனால் இளைஞர்கள், எல்லோரும் செய்கிறார்களே, எனவே நானும் செய்கிறேன் என்றுதான் டிக் டாக்கில் வீடியோ எடுக்கிறார்கள். இவ்வாறு செய்வது பெரிய ஆபத்து.

 

இதை விரும்பி பார்க்கிறவர்களில்கூட  பெரிய குறிக்கோள் உள்ளவர்கள், பொறுப்புள்ளவர்கள் யாரும் இல்லை. பொழுது போகாமல் ஏதாவது செய்யவேண்டும் என்றுதான் பார்க்கிறார்கள். மேலும், வீடியோ எடுப்பதே தவறு எனும்போது பார்ப்பது இரண்டாவது தவறுதானே. நிறைய இளைஞர்களுக்கும் பெண்களுக்கும்  இது ஆபத்து, அநாகரிகம், ஆபாசமனது, என்றெல்லாம்கூட தெரிவதில்லை. நான் ஏதோ பாட்டு பாடினேன், டான்ஸ் ஆடினேன், நான் அழகாயிருக்கிறேன் அதனால் வீடியோ எடுக்கிறேன், அதை மற்றவர் பாராட்டுவதில் என்ன தவறு, என்று கேட்கும் பெண்களை நான் பார்த்திருக்கிறேன்.  நாம் அழகா இருப்பதை வெளிப்படுவதில் என்ன அவசியம்.  தன் அழகை காட்டி பாராட்டு பெறநினைப்பது எல்லா ஜீவராசிகளுக்கும் இயல்பான உணர்வுதான். ஆனால்  இதையே ஒரு முதன்மை குறிக்கோலாய் வைப்பது தவறு.

 

எந்த தொழில்நுட்ப வளர்ச்சியானலும் நன்மையும் தீய்மையும் இருக்கும். அதுபோல டிக் டாக் செயலியில் நன்மை இருக்க வாய்ப்பில்லையா?
 

அப்படி எதுவும் இதுவரையில் நடந்ததாக தெரியவில்லை. மேலும், நீங்கள் கூறுவது போல் புரட்சியெல்லாம் தினமும் நடைபெறாது. பத்து வருடத்திற்கு ஒரு முறை யாரேனும் அதை சரியாக பயன்படுத்தி சமூக மாற்றம் வந்தால் அதை பாராட்டலாம்.  அனால் இப்போதோ அவ்வாறு நடக்கவில்லை.  இப்போது இதை பயன் படுத்துகிறவர்கள் பொழுதுப்போக்காகத்தான் பயன்படுத்துகிறார்கள். இதில் ஆபத்தானது என்னவென்றால்.  யார் கவர்ச்சியாக உடை அணிந்திருகிறாரோ அவர்களை குறிவைத்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவதும் நடக்கிறது.

 

இதெல்லாம் தெரிந்துதான் இந்த பெண்கள் செய்கிறார்களா அல்லது தெரியாமல்போய் மாட்டிக் கொள்கிறார்களா என்ற சந்தேகமும் வருகிறது. தெரியாமல் நடக்கிறது எனில் அவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நம்முடையது.

 

இது மாதிரியான பாலியல் குற்றங்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கு, என்பதை உணர்த்திவிட்டால் டிக் டாக்  பயன்பாடு குறைவது சாத்தியமா?
 

இப்டி நடக்கிறது என்ற விழிப்புணர்ச்சி கொடுக்க வேண்டியது நமது கடமை. தெரிந்தெ செய்தால் அது அவரவர் சவுகரியம். சில பெண்களுக்கு பாலியல் தொழில் அவங்களுக்கே பிடிக்கலாம். இது பணம் சம்பாதிக்க எளிய வழி என கருதும் பெண்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ‘இப்படி நடக்கும்னே தெரியாது. என் தோழி செஞ்சாணு நானும் செஞ்ச. இப்ப இப்டிலாம் பிரச்னை வந்துடுச்சி’னு  சொல்கிற இளம் பெண்ணுக்கு நாம் என்ன பதில் சொல்லப்போகிறோம். இப்டி வெகுளி பொண்ணுக்கு ஆரம்பத்தில் எதுவும் தெரியாது. ஒரு உந்துசக்தியில் செய்து விடுவார்கள். இதன் சிக்கலை அந்த பெண் புரிந்துகொள்வதற்குள் அது பெரிய பாதிப்பாக மாறியிருக்கும்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்