ADVERTISEMENT

திராவிட அரசியலில் உள்ள தனிநபர் துதிபாடலை ஏற்றுக்கொள்கிறீர்களா..? - ராஜீவ் காந்தி பதில்!

12:39 PM Jan 30, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாற்று கட்சியில் இருந்து பிரதான கட்சியில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திமுக, மற்றும் அதிமுகவில் மாற்று கட்சியில் இருந்து வருபவர்களை இணைக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய அக்கட்சியின் முக்கியப் பிரமுகரான வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, தற்போது திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதுவரை விமர்சனம் செய்து வந்த கட்சியில் எவ்வாறு இணைந்தீர்கள்? அதற்கு காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

தற்போது நீங்கள் திமுகவில் இணைந்துள்ளீர்கள். இதன் காரணமாக எந்த மாதிரியான கேள்விகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கெடுத்தபோது கூட, தருமபுரி திமுக எம்.பியுடன் பேசும்போது ‘நீங்கள் தற்போது திராவிட மாயையில் சிக்கியுள்ளீர்கள். அதனால் திமுக செய்யும் தவறுகள் தெரியாது’ என்று பொருள்படும் படி பேசி இருந்தீர்கள். ஆனால் தற்போது அவர் அருகில் இருந்த நிலையில் நீங்கள் திமுகவில் இணைந்துள்ளீர்கள். இதை நாங்கள் எப்படி பார்ப்பது?

அது ஒரு நல்ல தொலைக்காட்சி விவாதமாக இன்றளவும் இருந்து வருகிறது எனக்கு. அந்த வாய்ப்பை புதிய தலைமுறை தொலைக்காட்சி எனக்கு வழங்கியது. அந்தக் கட்சியில் இருக்கும்போது அது எனக்கு சரியெனப்பட்டது. ஆனால் அதை தத்துவார்த்த நிலையில் நான் பார்க்கின்றபோது, அதில் நிறைய பிழைகள் இருக்கிறது என்பதை நான் அறிந்துகொண்டேன். திராவிடக் கட்சிகள் செய்த நல்லவற்றை இதன் மூலம் புறக்கணித்துச் செல்லக் கூடிய தன்மையே இருந்து வந்தது. அதை நான் உணர்ந்தேன். சற்று இதுகுறித்து எல்லாம் சிந்திக்கின்றபோது அமைப்பில் இருக்கிறபோதே என்மீது, இவன் திமுகவில் சேரப் போகின்றான் என்ற பொருள்படும்படி சிலர் செய்திகளை உருவாக்கினார்கள். திராவிட இயங்கங்கள் செய்த சாதனைகளை நான் பேசுவது என்பது சிலருக்கு படிக்காமல் போனது. நாங்கள் தற்போது கூட திமுகவில் இணைந்தது பற்றி சீமான் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் பின்புறம் திரும்பி சிரிக்கிறார். இந்தச் சிரிப்பு சில சமயம் மருந்தாக பயன்படுகிறது. சில நேரங்களில் அவமானமாகவும் உணர்கிறேன். சில பேசக் கூடா சொற்களைப் போல், அந்த செய்கை இருக்கிறது. அதை எல்லாம் கடந்து போக வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. நான் திராவிட மாயை என்று விமர்சனம் வைத்தது என்பது உண்மைதான். ஆனால் திராவிட இயக்கங்கள் செய்த நல்ல விஷயங்களை விமர்சித்தவன் கிடையாது.

தமிழகத்தில் திராவிடத்தை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய அமைப்பு இருக்கிறது. தேர்தல் அரசியலில் பங்குபெறாத திராவிட இயக்கங்கள் இருக்கிறது. அதில் எல்லாம் இணைய வேண்டும் என்று எண்ணாமல் நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதற்காக தேர்ந்தெடுத்தீர்கள், அதற்காக உங்களிடம் இருக்கும் காரணம் என்ன?

நான் நாம் தமிழர் கட்சிக்கு வருவதற்கு முன் பெரியாரிய இயக்கங்களில் தொடர்ந்து பயணித்துள்ளேன். படிக்கிற காலகட்டத்தில் இயக்க அரசியல்தான் சரி என்று நம்பி வேலை செய்தேன். பின்னாளில் அதைப் பற்றிய ஒரு புரிதல் கிடைத்தது. தேர்தல் அரசியல்தான் சரி, மக்கள் பணியாற்ற அதுதான் சரியான களம் என்பது புரிய ஆரம்பித்தது. வாக்கு அரசியல் மட்டும்தான் அந்த மக்கள் பணிகளை சரியாக முன்னெடுக்கும் என்ற புரிதலின் அடிப்படையில், நாம் அந்த அரசியலை செய்துகொண்டிருந்த நாம் தமிழர் கட்சியைத் தேர்ந்தெடுத்து இணைந்து பணியாற்றினோம். இயக்கங்கள் செய்ய முடியாத பலவற்றை கட்சிகள் மக்கள் ஆதரவோடு செய்து முடிக்கின்றன. நான் இயக்கங்களின் பணியைக் குறைந்து மதிப்பிடவில்லை. அந்த விவாத்திற்குள்ளும் போகவில்லை. இந்த ஏழு ஆண்டுகால பாஜக ஆட்சியும் இந்த முடிவை நான் எடுக்க மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. சமூக நீதி பேசப்பட்டு வந்த ஒரு இடத்தில் பொருளாதார இடஒதுக்கீடு கொண்டு வந்த ஒரு முறை, மத ரீதியான பார்வை, வெளிப்படையாக கட்சிகளை உடைத்தெறிகின்ற நோக்கம் முதலியவற்றை எல்லாம் கேள்வி கேட்க வேண்டும். அவர்களை அப்படியே விட்டுவிட முடியாது. நவீனத்துவமான சனாதான வேலைகளை, குறிப்பாக இந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக செய்து வருகிறது. அதை முளையிலேயே தடுக்க வேண்டும். அந்த வகையில், அந்தக் கொள்கைகளை அடியோடு எதிர்க்கும் வேலைகளை சிறப்பாக செய்து வருகின்ற திமுகவில் என்னை இணைத்துக்கொண்டுள்ளேன்.

நீங்கள் கருத்தியல் ரீதியாக, தர்க்க ரீதியாக பேசுகிறீர்கள், ஆனால் அப்படியான அரசியல் இங்கே இருக்கிறதா என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. இங்கே ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க என்று போஸ்டர் ஒட்டுகின்ற கலாச்சாரம் இருக்கிறதே, இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

இந்த மக்கள் எதுவாக இருக்கிறார்கள் என்றால், தான் நம்பும் தலைவனைக் கொண்டாட தயாராக இருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை புனிதப்படுத்த நான் விரும்பவில்லை. மக்களின் எண்ணங்களை ஏற்றுக்கொண்டு பயணிப்பதே ஒரு நல்ல அரசியலாக இருக்கும் என்பதை நான் நம்புகிறேன். தன் தலைவன் ஜனநாயகப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக ஒற்றை தலைமை வேண்டும் என்று விரும்புகிறான். அது மிக முக்கியம். அதுவே மக்களாட்சியை மேலும் வலுப்படுத்தும் என்று நினைக்கிறான். எனவே, தான் நேசிக்கின்ற ஒரு கட்சியை அவன் கொண்டாடும் விதம் வேறாக இருக்கலாம். ஆனால் நோக்கம் மக்கள் சார்ந்தே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். சமூகத்துக்கு குறுக்கீடு இல்லாத வரை கொண்டாட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT