Skip to main content

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் குழு நியமனம்: சீமான் அறிவிப்பு

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

 

வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு திமுக தனது பணிகளை தொடங்கிவிட்டது. இதேபோல் அதிமுக கூட்டணி வேட்பாளர் நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

 

naam tamilar seeman



இந்த நிலையில் தேர்தல் களப்பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் தலைமையில் தலைமை தேர்தல் குழு அமைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் குழுவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். 


 

தலைமை தேர்தல் குழு பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த தொகுதிப் பொறுப்பாளர்களையும், ஒதுக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களையும் உள்ளடக்கிய தேர்தல் பணிக்குழு அமைத்து உடனடியாக தேர்தல் களப்பணிகளைத் தொடங்கிட வேண்டும் என்றும், இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case related to VVPAT Judgment in the Supreme Court today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்குகிறது. 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.