ADVERTISEMENT

கலைஞருக்காக சிறை; உதயநிதிக்காக செலவு - முதல்வருக்கு கடைநிலை தொண்டன் வைத்த கோரிக்கை

03:24 PM Dec 17, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

தன்னரசு

ADVERTISEMENT

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பது அரசியல் களத்தில் குறிப்பாக எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும், பா.ஜ.க.வும் அதை விவாதப் பொருளாக மாற்றியுள்ளது. ‘மகனுக்கு முடிசூட்டும் விழா... உதயநிதி அமைச்சரானால் என்ன பாலாறும்... தேனாறுமா தமிழகத்தில் ஓடப் போகிறது...? அப்பட்டமான வாரிசு அரசியல்..’ என அ.தி.மு.க.எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என தி.மு.க.வின் ஒவ்வொரு மாவட்ட கழகமும் தீர்மானம் இயற்றியுள்ளது. அதேபோல் மூத்த நிர்வாகிகள் முதல் கடைநிலை தொண்டன் வரை அவர் அமைச்சர் ஆவதை வரவேற்பதைக் காண முடிந்தது.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததைக் கட்சி தொண்டர்கள் அவர்கள் வீட்டில் நடந்த ஒரு நல்ல நிகழ்வாகக் கொண்டாடியுள்ளனர். அமைச்சர் பதவி ஏற்ற அந்த 14 ந் தேதி ஈரோட்டில் ஒரு சவரத் தொழிலாளி தனது சலூன் கடைக்கு வந்த அனைவருக்கும் தனது சொந்த செலவில் இலவசமாக முடித்திருத்தம் மற்றும் சவரம் செய்து அசத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட நடுப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 58 வயதான தன்னரசு. இவரது மனைவி ஜோதிமணி, இவர்களுக்கு மோகனசுந்தரம், திருநாவுக்கரசு என்ற இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. தன்னரசு தி.மு.க.வின் தீவிர தொண்டர். சென்ற நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நடுப்பாளையம் என்ற அந்த கிராமத்தில் சலூன் கடை நடத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளதைக் கொண்டாடும் வகையில் அமைச்சர் பதவி ஏற்பு நாளில் தனது சலூன் கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக முடித்திருத்தம் மற்றும் சவரம் செய்வதாக முன்னதாகவே சுற்றுவட்டார கிராமங்கள் வரை அறிவிப்பு செய்திருந்தார் தன்னரசு.

இதுகுறித்து தன்னரசு கூறும்போது, “நான் 40 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் உள்ளேன். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரை குருவாக நேசிக்கிறேன். 1989ல் கலைஞர் ஆட்சியைக் கலைத்தபோது போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றுள்ளேன். சட்டமன்ற தேர்தலில் எனது இரு மகன்கள் மற்றும் இரண்டு மருமகள் என நான்கு பேருக்கும் மொடக்குறிச்சி தொகுதியில் சீட் கேட்டு பணம் கட்டினேன். போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து பணம் கட்டவில்லை. நேர்காணலில் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகத்தான் பணம் கட்டினேன். அதுபோல தளபதியை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது அதுவே எனக்கு போதும்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக அறிவிப்பு வந்தவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும் நாளில் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினேன். ஆனால் ஒரு சவரத் தொழிலாளியான என்னால் என்ன செய்ய முடியும்? எனது சலூன் கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக முடித்திருத்தம் மற்றும் சவரம் செய்ய முடிவு செய்தேன். அதற்காக மேலும் மூன்று சவரத் தொழிலாளர்களை அன்றைய தினம் பணியில் அமர்த்தி என்னோடு நான்கு பேர், காலை 6 மணி முதல் மாலை 6 வரை கடைக்கு வந்த அனைவருக்கும் கட்டிங், சேவிங் செய்தோம். நூற்றி இருபதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக செய்து கொடுத்துள்ளேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் ஒரு தி.மு.க. தொண்டனாக எனது இன்னொரு விருப்பம், முதல்வர் தளபதிக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். உதயநிதி அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்” என அளவில்லா மகிழ்ச்சியுடன் நம்மிடம் பேசினார் தன்னரசு.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT