ஆரம்பத்தில் ஒரு சம்பிரதாயமாகத்தான் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால், 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க அறிவித்த தேர்தல் அறிக்கை அந்த சம்பிரதாயத்தைப் புரட்டி போட்டது. தி.மு.க தலைவர் கலைஞர் அறிவித்த அந்த தேர்தல் அறிக்கை மிகப்பெரிய பேசு பொருளானது. குறிப்பாக அனைத்து குடும்பங்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பு பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. தி.மு.க.வின் இந்த தேர்தல் அறிக்கையை ஒரு கதாநாயகன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வர்ணித்தார். தி.மு.கவின் தேர்தல் அறிக்கையின் பக்கம் மக்களின் கவனத்தை திருப்ப இது ஒரு காரணமாக அமைந்தது.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வரலாற்றை மாற்றி எழுதியதோடு மட்டுமல்லாமல், அந்த தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியையும் தேடி தந்தது. மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் அனைத்து வீடுகளுக்கும் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. நாளடைவில் அது அமோக வரவேற்பு பெற்று, அதனை கலைஞர் டி.வி. என்றே மக்கள் அழைத்தனர். இந்த தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் அறிக்கைகள் முக்கிய பங்கு வகித்தன. மக்களை கவரும் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட அனைத்து கட்சிகளும் முக்கியத்துவம் கொடுத்தன. தேர்தல் அறிக்கைகள் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்ந்து கொண்டு அரசியல் கட்சிகளும் அதில் இடம் பெறும் உறுதி மொழிகளை மிகவும் கவனத்துடன் கையாள ஆரம்பித்தன.
இந்த தேர்தல் அறிக்கையில் பல அசாத்தியமான கலர்புல் வாக்குறுதிகளும், ஒன்றிய அரசால் மட்டுமே நிறைவேற்றக்கூடிய திட்டங்களும் இடம் பெற்று இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும், ரெயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் மீண்டும் உருவாக்கப்படும், அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும், பெட்ரோல் ரூபாய் 75 க்கும், டீசல் ரூபாய் 65 க்கும், சமையல் எரிவாயு ரூ. 500 க்கும் வழங்கப்படும் என தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது போதாது என்று தேசிய மீன்வளக் கொள்கை மறுபரிசீலனை செய்யப்படும், அனைத்து ஒன்றிய அரசுத் தேர்வுகளிலும் தமிழை விருப்ப மொழியாக ஏற்க வகை செய்யப்படும், கபடிப் போட்டியை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம் சமூக நீதியின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும், ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 361 நீக்கப்படும் என்று நீண்டு கொண்டே போகின்றன தி.மு.க.வின் வாக்குறுதிகள்.
மேலும், ஜி.எஸ்.டி வரி வசூல் முழுமையாக மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு மாநிலங்களுக்கான பங்களிப்பு போக மீதமுள்ள தொகை ஒன்றிய அரசுக்கு வழங்கப்படும், உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் கூறுகின்றன. இந்த வாக்குறுதிகள் 2021 சட்டமன்ற தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் மறு பிரதியே என்றும், இதன் மூலம் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க நிறைவேற்றவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இன்னும் ஒரு படி மேலே போய், ஏதோ ஸ்டாலின் பிரதமர் ஆகி விட்டது போல் எண்ணிக் கொண்டு தி.மு.க இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பா.சிதம்பரம் தலைமையிலான குழு மக்களவைத் தேர்தலுக்காக 5 தலைப்புகளில், 25 வாக்குறுதிகள் அளிக்கும் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை போலவே, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், ஏழை மகளிருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டால் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிற துவங்கியுள்ளது. இது மட்டுமின்றி, மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும், புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும், நீட் மற்றும் க்யூட் தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம், விவசாய இடு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், பாஜக இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்படும், புதிய ஜிஎஸ்டி 2.0 இயற்றப்படும், அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்படாது, நீட் தேர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் போன்ற அதிரடி அறிவிப்புகள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
வடக்குக்கும், தெற்குக்கும் ஒரே கொள்கைளை கடைபிடிக்க முடியாத மிகச் சிக்கலான சில விஷயங்களில் சிறப்பானதொரு தீர்வு, இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதிகாரங்களை மொத்தமாக ஒற்றைப் புள்ளியில் குவித்து வைக்கும் தனது பழைய வழக்கத்தை கைவிட்டு மக்கள் மன்றங்களான, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள், இது பழைய காங்கிரஸ் அல்ல என்பதை உறுதி செய்கின்றன. நாடு முழுவதும் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையில் மக்களின் மனங்களை புரிந்து கொண்டதன் அடையாளமாக இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளன.