ADVERTISEMENT

அழகிரியால் திமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை - மாவட்டச் செயலாளர்கள் பேட்டி! 

01:17 PM Aug 22, 2018 | rajavel

ADVERTISEMENT


அழகிரி பேரணி நடத்தும் அறிவிப்பால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாவட்டச் செயலாளர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் திமுகவில்தான் இருக்கிறார்கள் என்று மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி, திண்டுக்கல் கிழக்கு மாவட்டச்செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், தேனி மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

வரும் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடி தலைவரை தேர்வு செய்ய உள்ள நிலையில், செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் லட்சம் பேருடன் அமைதிப் பேரணி நடத்தப் போவதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு திமுகவில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று மூவரிடமும் நக்கீரன் இணையதளத்திற்காக வினா எழுப்பினோம்.

பி.மூர்த்தி கூறியது…

மதுரை வடக்கு, தெற்கு மாவட்டங்களை பொறுத்தவரை நூறு சதவீதம் திமுக தலைவர் கலைஞர், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொண்டுதான் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுகின்றனர். இந்த மாவட்டங்களில் யாராலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும், மாவட்டச் செயலாளர்களும் மு.க.ஸ்டாலின் பக்கம்தான் உள்ளனர்.


ஐ.பி.செந்தில்குமார் கூறியது…

அழகிரியை 2014ல் கட்சியை விட்டு நீக்கியதே தலைவர் கலைஞர்தான். நீக்கியது மட்டுமல்ல நீக்கியதற்கான காரணத்தையும் தொண்டர்களுக்கு எடுத்து சொல்லியிருக்கிறார். கலைஞர் எடுத்த முடிவுக்குத்தான் கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் கட்டுப்படுவார்கள். உண்மையான தொண்டர்கள் இவருக்குப்பின்னால் எப்படி இருப்பார்கள்.

தலைவர் இல்லாதநிலையில் தலைவர் சொன்னதாக இவர் சொல்வதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தன்னுடைய சுயலாபத்திற்காக திமுகவை தவறான பாதைக்கு கொண்டுபோகலாம் என்று நினைக்கிறார். ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கம் திமுக. கலைஞருக்கு பிறகு தொண்டர்கள் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். கலைஞரின் உண்மையான தொண்டர்கள் அனைவரும், மு.க.ஸ்டாலின் தலைமையைத்தான் ஏற்பார்கள்.

இவருக்கு பின்னால் ஆளும் அதிமுக இருக்கலாம், மத்திய பாஜக அரசு இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக இப்படி பேசலாம். திமுகவுக்கு எந்த மாதிரியான அழுத்தங்கள் இருந்தாலும், அவற்றை முறியடித்து வெற்றிப் பெறக் கூடிய ஆற்றல் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. எம்ஜிஆர், வைகோ ஏற்படுத்திய பிளவுகளையே சமாளித்தது திமுக. இவருடைய எதிர்ப்பு எங்களுக்கு கையில் உள்ள தூசி மாதிரி என்றார்.

கம்பம் ராமகிருஷ்ணன் கூறியது…

நேற்று மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தை நடத்தினோம். கலைஞர் காலத்தில் இருந்து இருக்கக்கூடிய மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு, ஒன்றிய கழக, நகர கழக செயலாளர்கள் என எல்லோரும் கலந்து கொண்டனர். வலிமையான இயக்கமான திமுகவை மு.க.ஸ்டாலின்தான் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம்.

மதவாதத்திற்கு எதிராக, மாநில சுயாட்சியை மீட்பதற்காக, இந்தி திணிப்புக்கு எதிராக, சமூக நீதியை வலியுறுத்தி கலைஞரைப்போல் ஸ்டாலினும் கொள்கை அளவில் உறுதியாக இருக்கிறார். ஆகையால் தேசிய அளவிலும் மிகப்பெரிய தலைவராக ஸ்டாலின் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.

திடீரென தேனியில் ஒரு கூட்டத்தை சிலர் கூட்டியுள்ளனர். தலைவர் கலைஞர் இருந்தபோதே ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள்தான் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் தேனி மாவட்டத்தில் துரும்பளவுகூட திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT