ADVERTISEMENT

ஸ்டாலின் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்... போட்டுத் தாக்கிய திண்டுக்கல் லியோனி!

12:28 PM Feb 12, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நடப்பு அரசியல் குறித்தும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பேசினார். அவரின் பேச்சு வருமாறு, "இன்றைக்கு தகுதியே இல்லாத பலபேர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்களுக்குத் தற்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. அன்றைக்குப் பார்க்கிறேன், நான்கு அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அமைச்சர் தங்கமணி, ஜெயக்குமார், சண்முகம், மதுசூதனன் ஆகிய நால்வரும் செய்தியாளர்களிடம் பேச திணருகிறார்கள். ‘நீ பேசு, நீ பேசு’ என்று ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். ‘அய்யா நீ பேசுங்க, அப்பா நீ பேசு’ என்று காமெடி செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன காரணம் இவர்கள் இப்படி செய்துக் கொண்டிருக்கிறார்கள். முந்திரிக் கொட்டை போல் பேசிக்கொண்டிருந்தாரே நம்முடைய ஜெயக்குமார், இப்போது ஏன் அடுத்தவரைப் பேச சொல்கிறார். நான்கு மைக்குகளைப் பார்த்தாலே பலமணி நேரம் பக்கம் பக்கமாக பேசும் ஜெயக்குமார், அடுத்தவர்களை தற்போது கைக்காட்ட என்ன காரணம். ஏன் அன்றைக்கு வார்த்தை வரவில்லை. கிடுகிடு என்று அவர்கள் அனைவருக்கும் நடுக்கம். வார்த்தை வராமல் அடுத்தவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது கூட சட்டத்துறை அமைச்சர் ஒரு மயக்கத்தில் பேசிவிட்டார். என்னப் பேசினார் தெரியுமா? ஊரை அடித்து உலையில் போட்ட சசிகலாவுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை என்பதை மிகத் தெளிவாகச் சொன்னார்.

உடனே பத்திரிக்கையாளர் அவர்களிடம், சசிகலா நீங்கள் சொல்வது போல ஊரை அடித்து உலையில் போட்டபோது அவர்கள் கூட ஜெயலலிதா தானே இருந்தார்கள் என்று எதிர் கேள்வி வைத்தார்கள். இந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்ல முடியாமல் அவர்கள் அனைவரும் துண்டை காணோம் துணிய காணோம் என்று தெறித்து ஓடுகிறார்கள். ஒருவரும் கேள்வியை எதிர்கொள்ளவே பயப்படுகிறார்கள், திணருகிறார்கள். இதெல்லாம் ஒரு பிழைப்பு? இவர்கெல்லாம் அமைச்சர்களாக நமக்கு சேவை செய்து வருகிறார்கள். தமிழகத்தின் காலக்கொடுமை அவர்கள் எல்லாம் அமைச்சர்களாக நமக்கு வாய்த்துள்ளார்கள். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் தொடர்ந்து கத்திக்கொண்டே இருக்கிறார். ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழகம் முழுவதும் தொடர்ந்து பிரச்சாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனி ஆளாக பேசிக்கொண்டிருக்கிறார். எங்களைப் பார்த்து துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியுமா என்று கேட்கிறார். குழாய் சண்டை போட துண்டு சீட்டு தேவையில்லை. பைத்தியக்காரன் ரோட்டில் பேசிக்கொண்டு போகிறானே, அவன் என்ன துண்டு சீட்டை வைத்துக்கொண்டா பேசுகிறான். குடிகாரர்களுக்குத் துண்டு சீட்டு தேவையில்லை. ஆனால் மக்களுக்கு சேவை செய்கிற ஒரு பேராசிரியர் துண்டு சீட்டு வைத்துக்கொண்டுதான் பேசுவார்.

திட்டமிடுதல் என்பது ஒரு தலைவனுக்கு மிக முக்கியமான பண்பு. அதைத்தான் தலைவர் தொடர்ந்து செய்து வருகிறார். மக்கள் பணியாற்ற நினைப்பவர்கள், அவர்களுக்குக் கூற நினைப்பதை சரியாகச் சொல்ல துண்டு சீட்டு வைத்துதான் பேசுவார்கள். நான் 35 ஆண்டுகாலமாக பட்டிமன்றம் பேசுகிறேன். துண்டு சீட்டு வைத்துக்கொண்டுதான் பேசுகிறேன். எதற்காக என்றால், சரியான முறையில் நாம் நினைப்பதை மக்களுக்குப் புரிய வைப்பதற்காகதான். அதை போலத்தான் தலைவரும் மக்களுக்குச் சரியான முறையில் கருத்துகள் சொல்ல வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டமிடலை செய்கிறார். இன்றைக்கு மெரினாவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கின்ற என் தலைவர் தலைஞர், கடைசி மேடை வரை குறிப்பெடுத்துக்கொண்டுதான் மக்கள் முன் உரையாற்றினார். ஏன் அவருக்குக் குறிப்பில்லாமல் பேசத் தெரியாதா? இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேட்கிறார், துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியுமா என்று. அவர் பேசுவதற்கு துண்டு சீட்டு எதுவும் தேவையில்லை. ஏனென்றால் இன்றைக்கு அவர் தரம் தாழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று முதல்வர் பேசுகிறார். இப்படி எல்லாம் ஒரு முதல்வர் பேசுவார்களா? இந்த வார்த்தை ஒருவருக்கு வருகிறது என்றால் அவருக்கு மேட்டர் தீர்ந்து போச்சு என்று அர்த்தம். அவரிடம் பேசுவதற்கு எதுவுமில்லை. அதனால்தான் இத்தகைய வார்த்தையைப் பயன்படுத்துகிறார்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT