ADVERTISEMENT

ஒரு தமிழரின் டைரிக் குறிப்பு! - உலகமெங்கும் பாதுகாக்கப்படும் பொக்கிஷம்

10:24 AM Mar 30, 2018 | raja@nakkheeran.in

மார்ச் 30 - நாட்குறிப்பு மன்னர் ஆனந்தரங்கம் பிறந்த நாள்

ADVERTISEMENT


உலகில் பலரும் டைரி என்கிற நாட்குறிப்பை எழுதுகிறார்கள். அதில் பலர் தங்களது அனுபவங்களை எழுதுகிறேன் என்கிற பெயரில் வீட்டின் மளிகை செலவு கணக்கையும், காதல் விவகாரத்தையும், அலுவலக வேலைகள் பற்றியும் பெரும்பாலான பதிவுகள் எழுதுகிறார்கள். அதையும் தாண்டி பலர் எழுதிய டைரி குறிப்புகள், உலகின் பொக்கிஷங்களாக விளங்குகின்றன. அதில் ஒருவர் இந்தியாவின் நாட்குறிப்பு மன்னர் என புகழப்படும் ஆனந்தரங்கம். இவரது நாட்குறிப்புகள் உலகத்தின் பல நாட்டு நூலகங்களில் உள்ளன. அந்தளவுக்கு முக்கியமானவர் ஒரு தமிழர்.

ADVERTISEMENT

சென்னை பெரம்பூரில் 1709 மார்ச் 30ந்தேதி பிறந்தவர் ஆனந்தரங்கம். இவர் பிறந்த மூன்று வயதாகும்போதே இவரது தாயார் இறந்துவிட்டார். இவரது தந்தை திருவேங்கடம் தான் இவரை வளர்த்து படிக்க வைத்தார்.

படித்து முடித்ததும் புதுவையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். பிரெஞ்ச் அரசாங்கத்தில் பணியாளராக வேலைக்கு சேர்ந்தார். அப்போது இந்திய அலுவலர்களில் அவர் முக்கியமானவராக இருந்தார். பாண்டிச்சேரி ஆளுநர் ஜோசப் பிரான்சிஸ் டூப்ளக்ஸ் என்பவரின் மொழி பெயர்ப்பாளராக நீண்ட காலமாக இருந்த கனகராயர் என்பவர் இறந்துவிட்டார். இதனால் டுப்ளக்ஸ் தனது ஆட்சியிலன் கீழ் இருந்த மன்னர்களிடம் பேச மொழி பெயர்ப்பாளர் இல்லாமல் தடுமாறினார். அப்போது பிரெஞ்ச், ஆங்கிலம், உருது, தெலுங்கு உட்பட பல மொழிகள் அறிந்தவராக விளங்கிய ஆனந்தரங்கம் 1747ல் மொழிபெயர்ப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

பிரெஞ்ச் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராக மாறியவர் படிப்படியாக அரசின் திவானாக பதவி உயர்வு பெற்றார். அதோடு, மன்னர்கள் அவருக்கு பட்டங்களையும் பொருள்களையும் தந்து நட்பை பெற்றனர். மன்னர்களின் நட்புகள், ஆனந்தரங்கத்தை வணிகத்தில் ஈடுபட வைத்தது. பிரெஞ்ச்காரர்கள் உதவியுடன் ஆனந்தப்புரவி என்கிற பெயரில் பாய்மரக்கப்பல் வாங்கி வணிக ரீதியாக வைத்திருந்தார் ஆனந்தரங்கம். அந்தக் கப்பல் வழியாக அக்கால தமிழகத்தில் பிரபலமாக இருந்த சேலை வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சம்பாதிக்கும் வணிகராக இருந்தார். அது மட்டுமல்ல மது உற்பத்தி செய்து விற்பனை செய்யவும் தொடங்கியிருந்தார்.

ஆனந்தரங்கம் மொழி பெயர்ப்பாளராக சேர்ந்தது முதல் நாட்குறிப்பு எழுத துவங்கினார். தமிழின் முதன் முதலில் குருவப்பா என்பவர் தான் டைரியை வங்கினார். அவரை பார்த்தே ஆனந்தரங்கம் நாட்குறிப்பை எழுத துவங்கினார். ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்புகள் தான் இன்று வரை கிடைத்துள்ளன. அதனால் அவையே தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பாகிறது. அவருக்கு முன்பு எழுதிய ஆனந்தரங்கத்தின் மாமா குருவப்பாவின் நாட்குறிப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனந்தரங்கம் நாட்குறிப்பு என்பது, அவரின் தனிப்பட்ட தகவல்களில்லை. அன்றைய பிரெஞ்ச் அரசாங்கத்தின் செயல்பாடுகள், நிர்வாகம், போர்முறை, அரசியல், வியாபாரம் போன்றவை ஆளுநரின் கீழ் எப்படி செயல்பட்டன, ஆளுநர் எப்படி செயல்பட்டார் என்பதை தினசரி நிகழ்ச்சிகள் குறித்து எழுதிவைத்திருந்தார். அதோடு, அக்கால மக்களின் செயல்பாடுகள், சாதி அமைப்புகள், திருமண முறைகள், மக்களின் பழக்க வழக்கங்கள் போன்றவற்றையும் பதிவு செய்துவைத்திருந்தார். அதனால் தான் அது காலம் கடந்து இன்றும் வியந்து பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியில் உள்ள ஆனந்தரங்கம் இல்லம்


பிரெஞ்ச் அரசாங்கத்தில் ஆளுநரின் மொழி பெயர்ப்பாளராக மட்டுமில்லாமல் பொதுமக்களின் புகார்களை விசாரித்து ஆளுநருக்கு பதிலாக தீர்ப்பு வழங்குபவராகவும் விளங்கினார். அதோடு ஆளுநர் அனந்தரங்கம் நெருக்கமான நட்பையும் பேனினார்.

செங்கல்பட்டில் வசித்து வந்த சேஷாத்திரி என்பவரின் மகள் மங்கதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினார் ஆனந்தரங்கம். இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் என்பது குறிப்பிடதக்கது. தமிழ் மீது பற்றுக்கொண்டு தனது பிள்ளைகளுக்கு தமிழ் பெயரே சூட்டினார். அதோடு, அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளது அவரது நாட்குறிப்புகள் மூலமாகவும், அந்தத் தமிழறிஞர்கள் வழியாகவும் உறுதியும் செய்யப்படுகிறது.

சுமார் 28 ஆண்டுகள் பிரெஞ்ச் அரசாங்கத்தின் மொழிபெயர்ப்பாளராக கோலோச்சிய ஆனந்தரங்கம் 1761 ஜனவரி 10ந்தேதி மறைந்தார். இறக்கும்போதும் அவர் அந்தப் பணியில் இருந்தார். அவர் மறைந்து சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு 1846ல் அர்மோன் கலுபா என்கிற பிரெஞ்சம் அரசாங்கத்தின் வருவாய்த்துறை அதிகாரி, ஆனந்தரங்கம் வீட்டில் இருந்த அவரது நாட்குறிப்புகளை தேடியெடுத்து தொகுத்தார். அவர் எழுதியவற்றை அதன்பின் பிரெஞ்சம் அரசாங்கம் பிரெஞ்ச் மொழியில் மொழி பெயர்த்து வியந்தது. அந்த நாட்குறிப்புகள் தற்போது பாரிஸ் நகரத்தில் உள்ள தேசிய நூலகத்திலும் சென்னை ஆவணக் காப்பகத்திலும் உள்ளது. அந்த ஆவணங்கள் முதலில் ஆங்கிலம், பின்னர் பிரெஞ்சம், அதன்பின்னர் தமிழில் நூலாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் நாட்குறிப்பு எழுதியவர் என குறிப்பிடப்படுபவர் சாமுவேல் பெப்ஸ். இந்தியாவின் முதல் நாட்குறிப்பு எழுதியவர் ஆனந்தரங்கம் என்பது தமிழகத்துக்கு பெருமை.

குறிப்பு : படத்தில் இருக்கும் டைரி அசலானது அல்ல

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT