ADVERTISEMENT

ஜெயலலிதா இல்லியே! யாரும் இல்லியே! -அதிமுக ஸ்கேன் ரிப்போர்ட்! பகுதி 2

05:44 PM Jun 04, 2019 | kamalkumar

அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன!

ADVERTISEMENT

2004-ல் நடந்த லோக்சபா தேர்தலில், நாற்பதுக்கு நாற்பதும் தோல்வி. இந்தத் தோல்விக்குப் பின்னும், ஜெயலலிதா தோல்வியை நினைத்து மூலையில் முடங்கி விடவில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, கழகத்தை மீட்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். மிகவும் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த கோபிச்செட்டிபாளையம் என்.ஆர்.கோவிந்தராஜர், நாமக்கல் அன்பழகன், பெரியகுளம் தினகரன் போன்றவர்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பொறுப்புகளை வழங்கினார். அமைச்சர்களிடம் குவிந்து கிடந்த அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன. நாற்பதுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளுக்கு வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன. இதனால், புது ரத்தம் பாய்ச்சப்பட்டு, கட்சி மீண்டும் வலிமையையும், பொலிவையும் பெற்றது.

ADVERTISEMENT


இதனாலேயே, 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., அமைத்த மெகா கூட்டணியையும் மீறி, அ.தி.மு.க.,வால் 68 இடங்களை வெல்ல முடிந்தது. தி.மு.க., ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும், ஐந்தாண்டு காலமும், அக்கட்சியால், தமிழகத்தில் மைனாரிட்டி நிலையிலேயே ஆட்சிப் பொறுப்பில் இருக்க முடிந்தது. இப்படியொரு இக்கட்டை, தி.மு.க.,வுக்கு ஏற்படுத்தி, தமிழகத்தில் அ.தி.மு.க.,வை பிரதான கட்சி என்ற அந்தஸ்துடனேயே இருக்க வைத்திருந்தார் ஜெயலலிதா. தான் மறையும் வரையில், தமிழகத்தில் மிகப் பெரிய ஆளுமைக்குச் சொந்தக்காரராக இருந்தவர் ஜெயலலிதா. அவரே, ஒவ்வொரு முறையும் கட்சிக்கு தோல்வியும்; சோதனையும் வரும்போது, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, சரி செய்யும் முயற்சியில் இறங்கினார். இது வரலாறு. ஒவ்வொரு முறையும், அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்திருப்பதை விரும்பாத ஜெயலலிதா, தொடர்ந்து அதிகாரங்களைப் பரவலாக்கிக் கொண்டே வந்தார்.

ஜெயலலிதாவைக் காட்டிலும் கூடுதல் ஆளுமை உடையவர்களா?

இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான தோல்விக்கு என்ன காரணம்? இதை அறிந்து அதைக் களைய வேண்டாமா? இது குறித்து, பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய நீங்கள் இருவரும், சிந்திக்கக்கூட நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இது நியாயமா? ஜெயலலிதாவை விட கூடுதல் ஆளுமையோடு இருவரும் இருக்கிறோம் என்ற எண்ணம் உங்களை ஆட்கொண்டு விட்டதோ, என்ற எண்ணம்தான், தற்போதைய சூழலை ஆழ்ந்து கவனிக்கும் என்னைப் போன்ற ஒவ்வொரு தொண்டனுக்கும் ஏற்படுகிறது. இந்தத் தேர்தலில், இவ்வளவு மோசமான தோல்வியை கட்சி சந்தித்ததற்கு உங்கள் இருவரைச் சுற்றிலும் உள்ள சுயநலக் கும்பல்கள், என்ன காரணத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்ததுதான், இந்த மோசமான தோல்விக்குக் காரணம் என்று அவர்கள் கூறுவதாக அறிகிறோம்.



துறைகள் அனைத்திலும் தலைவிரித்தாடும் லஞ்சம்!

உண்மையான நிலை அதுவல்ல. தற்போதைய அ.தி.மு.க., ஆட்சி மீது, மக்களுக்கு எந்த விதத்திலும் நல்ல அபிப்ராயம் இல்லை. ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த கோபம்தான், இரட்டை இலை இருந்தும், அ.தி.மு.க., என்னும் ஆலமரம் சாய்ந்திருக்கிறது. இதை, என்னைப் போன்றவர்கள் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டுமென்று அவசியமில்லை. உங்கள் உள் மனதுக்கு நிச்சயம் தெரியும். அரசின் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, பொதுமக்களின் அன்றாடத் தேவையாக இருக்கும் சுகாதாரத் துறை சுகாதாரமற்று பயணிக்கிறது. எல்லா நிலைகளிலும் லஞ்சம் நீக்கமற நிறைந்திருக்கிறது. எல்லாத் துறைகளுமே அப்படித்தான் செயல்படுகிறது. முதல்வர், துணை முதல்வர் என்ற பெரிய அந்தஸ்தில் இருக்கும் உங்கள் இருவரையும் கூட, எளிதில் சந்தித்து விடலாம். ஆனால், துறைகளின் அமைச்சர்களாக இருப்பவர்களை, என்னைப் போன்ற கட்சியின் நீண்ட கால தொண்டன்கூட சந்திக்க முடியவில்லை.

இரும்புத்திரைக்குப் பின்னால் அமைச்சர்கள்!

பணம் கொடுத்தால் மட்டுமே, இந்த ஆட்சியில் காரியம் சாதிக்க முடியும் என்ற அவலமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும், புரோக்கர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதற்குத்தான், லட்சோபலட்சம் தொண்டர்கள் இணைந்து இந்த இயக்கம் நீண்ட காலம் நிலைக்கப் பாடுபட்டார்களா? தொண்டர்களாலும், கழக நிர்வாகிகளாலும் கூட எளிதில் அணுக முடியாத ஒரு இரும்புத் திரையை, அமைச்சர்கள் போட்டு வைத்திருப்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், அதுவும் கூட ஒரு அவலமான நிலைதான். அதுமட்டுமல்ல, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களைப் புறக்கணிக்கும் இவர்கள் அனைவரும் தி.மு.க.,வுடன் ரகசியக் கூட்டணி வைத்துள்ளனரே? அந்த விவரங்களாவது, உங்கள் இருவருக்கும் தெரியுமா? லஞ்ச - லாவண்யம் தலைவிரித்தாடுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போலத்தானே, வருமானவரித்துறை, அமைச்சர்கள் இல்லங்களிலும், தலைமைச் செயலகத்திலும் சோதனை நடத்திச் சென்றது? அப்போது கூட, உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. மாறாக, ஊழலில் ஊறித் திளைக்கும் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் காப்பாற்றவே முயன்றீர்கள்.

முந்தைய பகுதி:

ஜெயலலிதா இல்லியே! யாரும் இல்லியே! -அதிமுக ஸ்கேன் ரிப்போர்ட்! பகுதி 1

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT