ADVERTISEMENT

“கோடிகள் இல்லை... கொள்கைதான் இருக்கு..!” சீண்டிய தயாநிதி... கொந்தளித்த பா.ம.க..! முதல்வர் மாவட்டத்தில் ரசாபாசம்!

11:53 AM Dec 23, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

கோப்புப் படம்
“ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கும் கட்சியுடன்தான் பா.ம.க. கூட்டணி வைக்கும்; அவர்களுக்குக் கொடுக்கும் அளவுக்கு தி.மு.க.விடம் கோடிகள் இல்லை; கொள்கைகள்தான் இருக்கிறது” என தயாநிதி மாறன் எம்.பி, சொன்ன ஒரு கருத்து, பா.ம.க.வினரிடையே கடும் உஷ்ணத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது.

ADVERTISEMENT


'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பேரில் தி.மு.க.வினர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். தயாநிதி மாறன் எம்.பி., சேலம் மேற்கு, ஓமலூர் தொகுதிகளில் கடந்த இரு நாள்களாக பரப்புரையில் ஈடுபட்டார். டிச.21ஆம் தேதி, கட்டுமானத் தொழிலாளர்கள், வெள்ளித் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், விவசாயத் தொழிலாளர்கள், உருக்காலை, மேக்னசைட் தொழிலாளர்கள் என ஒவ்வொரு பிரிவினராகச் சந்தித்துக் கலந்துரையாடினார். பொதுமக்கள் சந்திப்பும் நடந்தது.


டிச.22ஆம் தேதி, பனை, செங்கல் சூளை உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கரும்பாலை உரிமையாளர்கள், கரும்பு விவசாயிகள், மலர் விவசாயிகள், வியாபாரிகள், பழங்குடியினரிடம் கலந்துரையாடினார். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி ஆகியோர் எங்கெங்கு பேச வேண்டும், ஒவ்வொரு பகுதியின் தன்மை, மக்களின் வர்க்க நிலை குறித்தெல்லாம் விரிவாகவே குறிப்புகள் தயாரித்துக் கொடுத்து இருந்தனர்.

எல்லா இடங்களிலுமே தயாநிதி மாறன், மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள், குடியுரிமைச்சட்டம் மற்றும் அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் ஆகிய மூன்று அம்சங்களைத் தவறாமல் பேசினார். கிராமப்புறங்களில் தி.மு.க.வினர் மட்டுமின்றி, பொதுமக்களும் அவரைக் காண ஆர்வத்துடன் திரண்டு வந்திருந்தனர். குறிப்பாக, வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசும்போது பல இடங்களில் கைத்தட்டல்களும் எழுந்தன.

இந்த தேர்தல், உங்களுக்கானத் தேர்தல் மட்டுமல்ல; உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற தேர்தல்; புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், அ.தி.மு.க.வின் ஒரே ஒரு எம்.பி.யான ரவீந்திரநாத் ஆதரித்து வாக்களித்தார். ராஜ்யசபா எம்.பி. அன்புமணியும் வேளாண் சட்டத்தை ஆதரித்தார். அ.தி.மு.க.,- பாஜக கூட்டணி மக்களுக்கு துரோகம் செய்கின்றன என்று தயாநிதி பேசும்போது மக்களிடையே பரவலான வரவேற்பு இருந்தது.

நேற்று ஓமலூர் தொகுதியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தி.மு.க. கூட்டணிக்கு பாமக வருமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு தயாநிதி மாறன், “கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க.விடம் 400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டுதான் பா.ம.க., அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது. ஒருவேளை பா.ம.க., தி.மு.க. கூட்டணிக்கு வருவதாக இருந்தால் இப்போது 500 கோடி, 1,000 கோடி ரூபாய் கேட்பார்கள்.

அவர்களுக்கும் பணம் கொடுத்து கூட்டணியில் சேர்க்கும் அளவுக்கு தி.மு.க.விடம் கோடிகள் இல்லை. கொள்கைகள் மட்டுமே இருக்கிறது. எம்.பி.சி.க்கு இட ஒதுக்கீடு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு எல்லாம் கலைஞர் ஆட்சியின்போதே வழங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில்தான் அவர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்துவார்கள். இதெல்லாமே பா.ம.க. நடத்தும் தேர்தல் கால அரசியல் நாடகம்'' எனச் சொன்னார்.

தயாநிதி மாறன் சொன்ன இந்தக் கருத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவ, பா.ம.க. தரப்பு ரொம்பவே கொதிப்படைந்தது. உடனடியாக பா.ம.க. மாநில துணைச்செயலாளர் அருள், தயாநிதி மாறனுக்குக் கண்டனம் தெரிவித்து பேட்டி அளித்தார்.

ஆரம்பத்தில், ஒருவரின் கருத்துக்கு எதிர்த்தரப்பின் எதிர்வினை எல்லாமே கருத்தியல் மோதலாகத்தான் இருந்தது.

நேற்று இரவு 7 மணியளவில், பொட்டியபுரத்தில் பூ வியாபாரிகளுடன் கலந்துரையாடலை முடித்துவிட்டு, காடையாம்பட்டி அடுத்த கண்ணப்பாடி அருகே பழங்குடி மக்களைச் சந்திப்பதற்காக தயாநிதி மாறன் தனது பரப்புரை வேனில் சென்று கொண்டிருந்தார்.


அப்போது, திடீரென்று பா.ம.க. நிர்வாகிகள் அண்ணாமலை, மாணிக்கம் ஆகியோர் தலைமையில் நூறுக்கும் மேற்பட்டோர் கையில் கறுப்புக்கொடி ஏந்தியபடி தி.மு.க. மற்றும் தயாநிதி மாறனுக்கு எதிராகச் சாலையோரம் நின்றபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். என்ன ஏதென்று அவதானிப்பதற்குள் தயாநிதி மாறன் வந்த பரப்புரை வேன், அந்த கும்பலைக் கடந்து சென்று விட்டது.


ஆனால், பா.ம.க.வினர் பின்னர் சாலை மறியலில் இறங்கினர். போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாத பகுதி என்பதோடு, தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என தி.மு.க. நிர்வாகிகளும் ரொம்ப ஜாக்கிரதையாகவே நிலைமையைக் கையாண்டனர். உடனடியாக மாவட்ட எஸ்.பி., ஓமலூர் டி.எஸ்.பி. உள்ளிட்டோருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு கும்பல் கல் வீச்சிலும் ஈடுபட்டது. இருதரப்புமே கல்வீச்சில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில், பார்த்திபன் எம்.பி., சென்ற கார் லேசாகச் சேதம் அடைந்துள்ளது. பெங்களூருவிலிருந்து சேலம் நோக்கி வந்த ஒரு கார் கண்ணாடியும் சேதம் அடைந்தது. தி.மு.க. தொண்டர்களும் களத்தில் இறங்க, இருதரப்பினருக்கும் இடையே லேசாகக் கைகலப்பும் நடந்தது.

ரசாபாசம் ஆகிவிடும் சூழல் உருவானது. பா.ம.க.வினர் கறுப்புக்கொடி கட்டி வந்த தடிகளால் தாக்கத் தொடங்கினர். அதற்குள் ஓமலூர் டி.எஸ்.பி. தலைமையில் காவல்துறையினரும் அங்கு குவிந்து விட, நிலைமை கட்டுக்குள் அடங்கியது. காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.


பா.ம.க.வினர் திடீரென்று இப்படியான சம்பவத்தில் ஈடுபடுவார்கள் என தி.மு.க. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். அதனால்தான் சுதாரித்துக் கொள்வதற்குள் அவர்கள் சாலையில் அமர்ந்ததுடன், கல் வீச்சிலும் ஈடுபட்டனர் என்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க., பா.ம.க. ஆகிய இருதரப்பும் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றன.


இந்த திடீர் தாக்குதலுக்குப் பின்னால் வேறொரு சம்பவம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


அதாவது, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் சுழன்றடித்து வரும் உதயநிதி ஸ்டாலின், டிச. 22ஆம் தேதி, திடீரென்று மறைந்த காடுவெட்டி குருவின் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு குருவின் மகன் கனல் அரசன், அவருடைய தாயார் ஆகியோரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன், குருவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உதயநிதியை வரவேற்று, அவரின் தலையை வாஞ்சையுடன் தொட்டு ஆசீர்வதித்து இருக்கிறார் குருவின் மனைவி.

பா.ம.க.வின் முகமாக இருந்த காடுவெட்டி குரு, மரணப்படுக்கையில் இருந்தபோது அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் அவரை நிராதவராக விட்டுவிட்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில், காடுவெட்டியாரின் குடும்பத்தின் மீதான தி.மு.க.வின் இணக்கமான போக்கு, பா.ம.க.விடம் இருந்து வன்னியர் வாக்குகளைக் கணிசமாகப் பிரித்து விடுமோ என அக்கட்சி அஞ்சுகிறது.

இதையெல்லாம் மனதில் கொண்டுதான், சேலத்தில் தயாநிதி மாறனைத் தாக்கும் திட்டத்துடன் பா.ம.க. களம் இறங்கியிருப்பதாகவும் தி.மு.க. தரப்பில் ஒரு தகவல் சிலர் சொல்கிறார்கள்.

இதுபற்றி பார்த்திபன் எம்.பி.,யிடம் கேட்டபோது, ''திமுக கூட்டணியில் பா.ம.க. சேருமா என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்டபோது, அதற்கு தயாநிதி மாறன் அக்கட்சிக்கு ஆயிரம் கோடி, ஐந்நூறு கோடி கொடுத்து கூட்டணி வைக்கும் அளவுக்கு தி.மு.க.விடம் பணம் இல்லை.

எங்களிடம் கொள்கைகள் மட்டும்தான் இருக்கு. அ.தி.மு.க.தான் அவர்களைப் பணம் கொடுத்து கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்.

பார்த்திபன் எம்.பி.

இட ஒதுக்கீடு தொடர்பாக அக்கட்சி நாடகம் நடத்துகிறது என்றும் சொன்னார். எப்படி எங்களைக் கொச்சைப்படுத்தலாம் என்று பா.ம.க.வினர் ஒரு பத்து பேர் கறுப்புக்கொடி எடுத்துக்கிட்டு போராட்டம் நடத்தினர்.

நாங்களே பேசி சரி செய்துவிட்டோம். சிலர் வாட்ஸ்அப்பில் தயாநிதி மாறன் அளித்த பேட்டியைப் பகிர்ந்து சாதாரண விஷயத்தைப் பெரிதுபடுத்துகிறார்கள். இதில் ஒன்றுமே இல்ல... நத்திங்...,'' என்றார்.

இதுகுறித்து பா.ம.க. மாநில துணை செயலாளர் அருளிடம் கேட்டதற்கு, ''தயாநிதி மாறன் எங்கு போனாலும் கறுப்புக்கொடி காட்டுவோம் என்று என் மன ஆதங்கத்தைத் தெரிவித்தேன். காடையாம்பட்டி அருகே தி.மு.க.வினர் சென்றபோது எங்கள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர்.

அப்போது தி.மு.க.வினர் முதலில் கல் வீச்சில் ஈடுபட்டனர். அவர்கள் தாக்கும்போது நாங்கள் எப்படி சும்மா இருக்க முடியுமா? பதிலுக்கு நாங்களும் தாக்கினோம். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு 40 வருஷமாகப் போராடி வருகிறோம். அதை தயாநிதி மாறன் அரசியல் நாடகம் என்று பேசியது தவறு.

அருள்
பா.ம.க. கூட்டணியில் சேர 1,000 கோடி ரூபாய் கேட்கும் என்றதும் கண்டிக்கத்தக்கது. ஜனநாயக ரீதியில்தான் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினோம். தி.மு.க.வினர் தாக்கத் தொடங்கியதால் நாங்களும் தாக்குதலில் ஈடுபட வேண்டியதாயிற்று. தயாநிதி மாறன் எப்போது சேலம் வந்தாலும் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT