ஒவ்வொரு தொகுதி மக்களும் தங்கள் பகுதி பிரச்சனைகளை, குறைகளை, தங்கள் பகுதிக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதற்காக எம்.எல்.ஏ.க்களை நாடி அவர்கள் வீடுகளுக்கும், சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் இப்படி சிரமம் அடையக்கூடாது என்பதற்காக 1996 - 2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த கலைஞர், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மக்களைச் சந்திப்பதற்கு அந்தெந்த தொகுதியிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு அலுவலகம் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Advertisment

அதன்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கலைஞரின் எண்ணங்கள் சரியான முறையில் நிறைவேறவில்லை என்றுதான் கூற வேண்டும். காரணம், அந்த அலுவலகங்களின் செயல்பாடுகள் பல இடங்களில் முடங்கிக் கிடக்கின்றன. சுமார் 90 சதவிகித அலுவலகங்கள் மூடியே கிடக்கின்றன.

Advertisment

உதாரணத்திற்கு, தற்போது கடலூரில் உள்ள தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், 2006ஆம் ஆண்டு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐயப்பன், மக்களைச் சந்திப்பதற்காக கட்டப்பட்டது. இதை அப்போதைய வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்து வைத்தார்.

கலைஞர் இலட்சிய நோக்குடன் கட்டிய அந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருக்கும் இடமாக மாறிக் கிடக்கும் அவலத்தையும், அது குறித்த செய்தியையும் கடந்த 28ஆம் தேதி நமது நக்கீரன் இணையதளத்தில் ‘எம்.எல்.ஏ. அலுவலகமா.. பேய் வீடா..? கடலூரில் அவலநிலை..’ எனும் தலைப்பில் புகைப்படங்களுடன் செய்தியாக வெளியிட்டோம். இந்தச் செய்தியின் எதிரொலியாக, நேற்று (30.12.2020) காலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முழுவதும் சுற்றிலும் காடாக மண்டிக் கிடந்த செடி, கொடி மரங்கள் வெட்டி சுத்தம் செய்யப்பட்டன.

Advertisment

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்ற பெயரே சாலையில் செல்வோருக்குத் தெரியாத வகையில் இடையூறாக இருந்த மரங்கள், செடி கொடிகள் வெட்டப்பட்டு, அலுவலகத்தின் பெயர் பளிச்சென வெளியே தெரியும் வகையில் ஆனதற்கு காரணம் நக்கீரன் இணையதள செய்தியின் எதிரொலி என்கிறார்கள்கடலூர் தொகுதி வாக்காளர்கள். பாழடைந்து கிடந்த அலுவலகம் சீரமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கும் தொகுதி மக்கள், இனிமேலாவது அலுவலகத்தை முறையாக திறந்து, ஊழியர்களை நியமித்து மக்களின் கோரிக்கைகள், குறைகள், பிரச்சனைகளைக் கேட்டறிந்து அமைச்சர் சம்பத் தீர்த்து வைப்பாரா அல்லது அப்படியே மீண்டும் பழைய மாதிரியே மூடிக்கிடக்குமா? என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். அலுவலகத்தைத் திறந்து அமைச்சர் மக்களின் குறைகளைக் கேட்க வேண்டும் என்று அத்தொகுதி வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், சுத்தம் செய்தவுடன் சட்டமன்ற உறுப்பினரைச் சந்திக்க மக்கள் வருகிறார்களோ இல்லையோ, அப்பகுதியில் உள்ள பசு மாடுகள் அலுவலகத்தின் முன்பு குவிந்து நின்றன.

மனுநீதி சோழன் மகன் தேரில் செல்லும்போது, ஒரு பசுவின் கன்று அந்தத் தேர்க் காலில் அகப்பட்டு இறந்து போனதைக் கண்டு வேதனையடைந்த தாய்ப் பசு, மனுநீதி சோழனின் அரண்மனை வாயிலில் இருந்த மணியை அடித்து தன் கன்றின் இறப்புக்கு நீதி கேட்டதாம். அதேபோல், அமைச்சர் சம்பத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நீதி கேட்க வருவோம் என்கிறார்கள் அத்தொகுதியில் உள்ள மக்கள்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அமைச்சரைச் சந்திக்க மனுக்களுடன்வரும் மக்களுக்கு நீதி கிடைக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.