ADVERTISEMENT

மார்ச் 13 – திருவள்ளுவராண்டை உருவாக்கிய கா.நமச்சிவாயம்.

10:44 AM Mar 13, 2018 | raja@nakkheeran.in


திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திமுக இனி நடத்தும் பொதுக்கூட்டங்களின் துண்டு பிரச்சுரம், வைக்கப்படும் பதாகைகளில் ஆங்கில தேதியோடு, தலைவர் கலைஞர் சட்டமாக்கிய திருவள்ளுவராண்டு என்கிற தேதியை குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த திருவள்ளுவராண்டுவை வகைப்படுத்தி திமு (திருவள்ளுவருக்கு முன்), திபி (திருவள்ளுவருக்கு பின்) என்பதை காலக்கணக்கிட்டு உருவாக்கி தந்தவர் தமிழறிஞர் கா.நமச்சிவயம் பிள்ளை. அதனைத்தான் கலைஞர் சட்டமாக்கினார், ஸ்டாலின், கட்சியினர் பொதுவெளியில் இதனை நடைமுறைப்படுத்தச்சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

சரி யார் இந்த நமச்சிவாயம் ?.

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த காவேரிப்பாக்கத்தில் வசித்து வந்த ராமசாமி – அகிலாண்டவள்ளி தம்பதியரின் மகனாக 1876 பிப்ரவரி 20ந்தேதி பிறந்தார் நமச்சிவாயம். இவர் தந்தை ராமசாமி திண்ணை பள்ளி வைத்து நடத்திவந்தார். அதில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் படித்துவந்தனர். நமச்சிவாயத்தில் தந்தையே அவருக்கு முதல் குருவானார். அதன்பின்பு சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த மகாவித்துவான் சண்முகம்பிள்ளையிடம், மாணக்காராக சேர்ந்தார். அவர் இவரை தன் மகன்போல் பாவித்து தமிழ் இலக்கணம், இலக்கியம் போன்ற அனைத்தையும் கற்று தந்தார்.

1895ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் கிளர்க் வேலையில் சேர்ந்தார். அவருக்கு அந்த பணி சரிவரவில்லை. ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்துக்கொண்டு இருந்தார். அப்போது தண்டையார்பேட்டையில் இருந்த ஒரு பள்ளியில் பணிக்கிடைத்து அங்கு சேர்ந்தார். பணியில் சேர்ந்தபின்பும் கற்பதில் ஆர்வம் குறையாமல் கற்றுக்கொண்டே இருந்தார். 12 ஆண்டுகள் அவரிடம் பாடம் கற்றார். இதற்காக தினமும் தண்டையார்பேட்டையில் இருந்து சண்முகம்பிள்ளை வசித்த மயிலாப்பூர்க்கு நடந்தேவந்துள்ளார்.

இதனால் வேறு பள்ளிக்கு முயற்சித்துக்கொண்டு இருந்தார். சென்னையில் இருந்த செயின்ட் சேவியர் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்து அதில் சேர்ந்தார். அது தற்காலிக பணி தான். அதனால் மீண்டும் பள்ளி மாறினார். வேப்பேரியில் உள்ள புனித பால்ஸ் பள்ளியில் தமிழாசிரியராக பணிக்கு சேர்ந்தார். 1902 முதல் 1914வரை அங்கு பணியாற்றினார்.

அங்கு பணியாற்றும்போது தான் மாணவர்கள் படித்த பாடத்திட்டத்தை கவனித்தார். ஆங்கில பேராசிரியர்கள் தான் தமிழ்த்துறைக்கான இலக்கண, இலக்கிய நூல்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பாட நூல்களை எழுதுவார்கள், அதனைத்தான் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, மாணவர்களை படிக்க வைத்தது. தமிழ் அறிஞர்கள் எழுதினால் தான் தமிழ் பாடத்திட்டம் முழுமையடையும், மற்ற துறையில் படித்தவர்களால் எப்படி மற்றொரு துறை பாடத்திட்டத்தை வடிவமைக்க முடியும் என நினைத்தார் நமச்சிவாயம். நினைத்ததோடு மட்டும்மல்லாமல் அவரே பாட நூலை எழுத துவங்கினார். 10 ஆம் வகுப்பு, இன்டர்மீடியட், இளங்களை பட்டபடிப்புக்கு தேவையான தமிழ் பாட நூல்களை எழுதி பாட தேர்வு குழுவுக்கு அனுப்பினார். இதனை ஆங்கிலேய அதிகாரிகள் சிலரின் ஆதரவுடன் தமிழ் பாட நூல்கள் எழுதிய ஆங்கிலேய பேராசிரியர்கள் சிலர் எதிர்த்தனர். ஆனால் அதனை பாடநூல் குழு எதிர்த்தது. பள்ளி, கல்லூரிகள் நமச்சிவாயத்தின் பாடநூல்களை வாங்கி பயன்படுத்த துவங்கின. பாடநூல் குழு அங்கீகரித்தது. அதன்பின்பே முதல்முறையாக தமிழ் பேராசிரியரால் எழுதப்பட்ட பாடநூல்களை முதன்முதலாக தமிழ்த்துறை மாணவர்கள் பயில துவங்கினர்.

1914ல் சென்னை கடற்கரையோரம் பெண்களுக்கென ராணிமேரிக்கல்லூரி தொடங்கப்பட்டது. பெண்கள் கல்லூரியா என தமிழ் பேராசிரியர்கள் பின்வாங்கிய நிலையில் நான் செல்கிறேன் என முன்வந்து சென்று தமிழ் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். அங்கு பணியாற்றிக்கொண்டு இருந்த சமயத்தில் சென்னை மாநிலக்கல்லூரிக்கு இவரை அழைத்துக்கொண்டு நிர்வாகம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம் போன்ற துறைகளை கழகமாக வைத்திருந்தது. அப்படியிருந்த தமிழ்க்கழகத்தின் தேர்வுத்துறை தலைவராக 1917ல் ஆங்கிலேய அரசாங்கம் நமச்சிவாயத்தை நியமித்தது. 1920ல் தமிழ் அரசுச்சங்கத்தின் தலைவர் பதவிக்கு சக உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். அவர் அந்த பதவிக்கு வந்தபோது, சமஸ்கிருதம் பயின்றவர்களுக்கே வித்வான் என்கிற அறிஞர் பட்டம் வழங்கப்பட்டு வந்தது. இதனை மாற்றி தமிழ் கற்றவர்களும் அறிஞர்கள் தான் அவர்களுக்கு தமிழ் வித்துவான் என்கிற பட்டம் வழங்கலாம் என உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு சமஸ்கிருத வித்வான்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். அதை நமச்சிவாயம் கண்டுக்கொள்ளவில்லை.

சக தமிழ்பண்டிதர்களான உ.வே.சா, மறைமலையடிகளாருடன் சேர்ந்து திருவள்ளுவர் ஆண்டு உருவாக காரணமாக அமைந்தவரும் இவர் தான். இவர் தான் திருவள்ளுவர் ஆண்டுக்கு முன், திருவள்ளுவர் ஆண்டுக்கு பின் என்கிற காலத்தை நிர்ணயித்து தமிழ் அரசுக்கழகத்தின் சார்பில் உத்தரவு வழங்கியவர். இவரது முயற்சிகளுக்கு ஊக்கம் தந்து, தமிழ் எதிரிகளிடம்மிருந்து நமச்சிவாயத்தின் முயற்சிகளை காப்பாற்றியவர்கள் பனகல்அரசர், பி.டி.ராஜன், ராஜாஅண்ணாமலை செட்டியார் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

தமிழ்க்கடல் என்கிற பெயரில் அச்சம் தொடங்கிய நமச்சிவாயம், தான் எழுதிய தணிகை புராணம், இறையனார் களவியல் உட்பட பல நூல்களை பதிப்பித்ததோடு நல்லாசிரியன் என்கிற பெயரில் இதழ் ஒன்றை 15 ஆண்டுகள் நடத்தினார். இதழ் நடத்தியதோடு வெளி இதழ்களுக்கும் தமிழ் பற்றிய கட்டுரைகளை எழுதி அனுப்பினார்.

1906ல் சுந்தரம் என்ற பெண்மணியை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். தீவிர முருகர் பக்தரான நமச்சிவாயம் தனது மூத்த மகனுக்கு தணிகைவேல் என்றும், இளையமகனுக்கு தணிகைமணி என்றும் பெயர்வைத்தார். 1936 மார்ச் 13ந்தேதி தனது 60வது வயதில் மறைந்தார் நமச்சிவாயம். நுங்கம்பாக்கத்தில் இவர் வாழ்ந்து மறைந்த பகுதிக்கு நமச்சிவாயபுரம் என்கிற பெயர் வைத்தனர். அந்த பெயரில் இப்போதும் ஒரு நகர் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT