ADVERTISEMENT

"வா அதற்காக விழா எடுப்போம்" சென்னை தினம்...உணர்வுகளின் வெளிப்பாடு...

11:52 AM Aug 22, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை... இது வெறும் ஊரின் பெயர் அல்ல. தமிழக மக்களின் அடையாளம். எப்பொழுதும் தமிழ் மக்களின் கருத்து, "சென்னைக்குப் போனால் பொழச்சிக்கலாம்பா" என்பதே. எந்த ஒரு மனிதனும் முதலில் சென்னைக்கு வரும்போது முதலில் சென்னை அவனை பயமுறுத்தும். அதன் பின் பிரமிக்க வைக்கும். பின்னர் தன்னுடன் பழகவிடும். கடைசியில் தன்னுடன் அரவணைத்துக் கொள்ளும். வந்தாரை வாழ வைக்கும் சென்னை நம் எல்லோரையும் வாழ வைக்கிறது.

இன்றுடன் சென்னை தினம் பிறந்து 383 ஆண்டு ஆகிறது. வருடத்தில் ஒரு நாள் ஒதுக்கி சென்னையின் பெருமையை பேசி விட முடியுமா.... பருவம் அடைந்த பெண்ணைப்போல நாளுக்கு நாள் மெறுகேறி பார்ப்போரை எல்லாம் தன்னகத்தே காதல் கொள்ளவைக்கும் திறன் சென்னைக்கு உண்டு. நாள் தோறும் பேசினாலும் தீர்ந்து விடாத, பேசி பேசி சலிக்காத வரலாறை சென்னை தன்னுடன் கொண்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்த நகரங்களை எல்லாம் ஒப்பிட்டால் சென்னையின் வளர்ச்சி அபரிமிதமானது. தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் சென்னை என்ற ஒற்றை நகரைக் கொண்டு கணிக்கலாம். எந்த ஒரு விஷயத்துக்கும் நேர்மறை எதிர்மறை என இரண்டும் இருக்கும். நேர்மறை ஒரு படி அதிகம் இருந்தால் அதுவே போதும்.அந்த வகையில் சென்னை நேர்மறையாக பல படிகள் மேலே இருக்கின்றது.

சென்னையின் வரலாற்றைத் தாண்டி அது தற்போது கொண்டிருக்கும் அழகியலையும் சென்னையின் தாக்கம் கிராமங்களில் என்ன என்பன போன்ற சில விஷயங்களை மேலோட்டமாக தூசு தட்டினால் இந்த கட்டுரை கிடைத்தது.

சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் தனிச்சிறப்பு, பழைய வரலாறு உள்ளது. இன்றும் திராவிட மாநிலங்கள் என கூறப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல்வேறு மாநில மக்களும் நம்மை நம்பி சென்னையை நம்பி வந்து வாழ்கின்றனர். பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள் பல ஊர்களின் மக்கள் என சென்னைக்கு பல்வேறு முகங்கள் உண்டு. உலகின் மிகத் தொன்மையான மாநகராட்சி சென்னை.

பெண்களுக்கு சுதந்திரமான சிறைகளை கொண்டது கிராமங்கள். சென்னைக்கு படிப்பிற்காகவோ, பணிக்காகவோ பயணிக்கும் கிராமத்து பெண்களுக்கு ஆகப்பெரிய விடுதலை உணர்வு தானாகவே சென்னையில் கிடைக்கும். கிராமத்தில் இருந்து தன் சமூகப் பெருமையை கொண்டு வருபருக்கும் சரி, தன் சமூகத்தின் பெயரை வெளியில் கூற விரும்பாதவர்க்கும் சரி, பணக்காரர் ஆனாலும் சரி ஏழையானாலும் சரி எந்த மொழியானாலும் சரி அனைவருக்கும் ஒரே மரியாதையையும் ஒரே விதமான வரவேற்பையும் அளிக்கும் ஊர் இது

கிராமங்களில் இருந்து சென்னைக்கு செல்ல ஒரு பேருந்து கிடைத்தால் போதும். சென்னையில் இருந்து நாம் செல்ல வேண்டிய பகுதிக்கு இங்கிருக்கும் ஆட்டோ நண்பர்கள் சென்று சேர்த்துவிடுவர். "என்ன தல எங்க போகணும்" என எப்போதும் அனைவரையும் வரவேற்க தயாராகவே சென்னை எப்போதும் இருக்கும்.

சென்னைக்கு மற்றுமொரு சிறப்பு. உணவு. மாதம் எவ்வளவு ரூபாய் சம்பளமாக வாங்கினாலும் சரி அதற்கேற்றார் போல் மூன்று வேலையும் சாப்பிடும் வகையில் உணவகங்கள் வீதிக்கு வீதி இருக்கும். நம் பொருளாதார தரத்திற்கு ஏற்ற உணவகங்களில் இருந்து துணிக்கடைகள் வரை அத்தனையும் கிடைக்கும்

இயற்கை எப்படி அடித்தாலும் இந்த சென்னை தாங்கும். மழை, வெயில், புயல், வெள்ளம் என எந்த தட்ப வெப்ப நிலையாகிலும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் தன்மை இதற்குண்டு. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பெருந்தொற்றையும் சென்னை சமாளித்து மீண்டு எழுந்து வந்திருக்கிறது. இவையனைத்தையும் ஒரு சேரப் பார்க்கும் ஒரே ஊர் சென்னை. ஒரு பக்கம் கானா பாடல்கள் நம்மை நடனம் ஆட வைத்தால் மறுபக்கம் சங்கீத சபாக்கள் மெல்லிசையை உணர வைக்கும். சென்னையின் ஒவ்வொரு விடியலும் புதுவிதமான உணர்வை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது.

இங்கிருக்கும் எல்லாம் மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக சென்னையின் பிள்ளைகளாக இருப்பதால் 383-ம் சென்னை தினம் என்ன? 500, 1000 சென்னை தினங்கள் கொண்டாடினாலும் இந்த ஊர் அப்போதும் அரவணைத்துக் கொள்ளும் மாபெரும் சக்தியாக வளர்ந்து கொண்டே தான் இருக்கும்...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT