ADVERTISEMENT

தமிழ் செழுமையடைந்தது தமிழர்களால் மட்டுமா?

11:15 AM Aug 28, 2018 | kamalkumar

சமஸ்கிருதம்தான் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் தாய் என்ற கருத்து மிக வலுவாக வேரூன்றி இருந்த காலகட்டம் அது. இவரின் ஒற்றை புத்தகம் அனைத்தையும் மாற்றியது. 'மொழிக் குடும்பங்களான, இந்தோ - ஆரிய மொழிக்குடும்பம், இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பம் ஆகியவற்றில் சேராத மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம். இதன் தொன்மையும், வன்மையும் மிகச்சிறந்தது. திராவிட குடும்பங்களின் தாய் தமிழ். இது சமஸ்கிருதத்திற்கும் முந்தையது' போன்ற பல உண்மைகளை ஒப்பிலக்கண ஆய்வு மற்றும் ஒலியியல் ஆய்வு மூலம் நிரூபித்தார் ஒருவர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிறப்பைத் தகுதியாய் வைத்து தமிழர்களை இனம் காண்பவர்கள் இவரை ஏற்பார்களா, சந்தேகம்தான். ஆனால், தமிழ் மீது கொண்ட காதலால் இவரை தமிழ்மகனாகவே ஏற்றுக்கொண்டாள் தமிழ்தாய். தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி உண்டு என்பதை ஆய்வறிக்கை மூலம் நிரூபித்தவர். செம்மொழி தகுதிகளான பிறமொழி கலப்பின்மை, கிளைமொழிகளுக்குத் தாய்மொழி உள்ளிட்ட தகுதிகள் தமிழ் மொழிக்கு உண்டு என்பதை 1856லேயே தான் எழுதிய புத்தகத்தின் மூலம் நிரூபித்தவர். அவர்தான் 'திராவிட மொழியியலின் தந்தை' ராபர்ட் கால்டுவெல்.

1838ல் லண்டன் மிஷனரி சார்பாக சமய தொண்டாற்ற வந்த கால்டுவெல், தமிழ்மொழி மீது ஏற்பட்ட ஈர்ப்பால் தமிழ்மொழியை கற்றுக்கொண்டார். பின் திருநெல்வேலியில் பணியாற்றியபோது திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் உள்ளிட்ட நூல்களை கற்றறிந்தார். 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை 1856ல் வெளியிட்டார். வடமொழி அறிஞர்களெல்லாம் சம்ஸ்கிருதம்தான் தொன்மையானது என கர்ஜித்துக்கொண்டிருந்த நிலையில் 'தமிழ் அதற்கும் தொன்மையானது, திராவிட மொழிகள் தனிக்குடும்பம்' போன்ற உண்மைகளை, அமைதியாக ஆனால் ஆணித்தரமாக நிரூபித்தார்.

தமிழின் மீது மட்டுமல்ல தமிழர்களின் மீதும் அவர் மிகுந்த அன்பு வைத்திருந்தார். அப்போதைய சூழலில் பெரும்பாலானோர் மேற்தட்டு மக்களுக்கு மட்டுமே கல்வி போதிக்க விருப்பம் காட்டிய நிலையில் கால்டுவெல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி போதிக்க நினைத்தார், அதன்படியே நடந்தார். ஆர்வமும், உழைப்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்தவர் கால்டுவெல். தமிழ் வளர்ச்சியடைந்ததற்கு இவர் போன்ற பலரும் உதவினார்கள் என்பதை மறுக்கக்கூடாது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT