ADVERTISEMENT

பா.ஜ.க. உத்தரவு போட்டும் சசிகலாவிற்கு விசுவாசமாக இருந்த ஓ.பி.எஸ்... முதல்வருக்கு எதிராக அ.தி.மு.க. அமைச்சர்கள்!

10:28 AM May 29, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT


ஜெ.மறைந்தவுடன் அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். அது முடியாமல் போகவே சசிகலா தேர்ந்தெடுத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. சசிகலா முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யச்சொன்னபோது, நீங்கள் ராஜினாமா செய்யாதீர்கள் என பா.ஜ.க. தடுத்தது. அருண்ஜெட்லி மூலம் பா.ஜ.க. சொன்ன அந்த உத்தரவை மீறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து சசிகலா முதல்வராகத் தனது பதவியை ராஜினாமா செய்து விசுவாசத்தை வெளிப்படுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். கோர்ட் தீர்ப்பால் சசிகலா முதல்வராக முடியாத நிலையில், எடப்பாடியை முதல்வராக்கினார். இதில் ஓ.பி.எஸ் அப்செட். அதன்பின் ஏகப்பட்ட அரசியல் மாற்றங்கள்.

ADVERTISEMENT


"சசிகலா ரீலிசாகவுள்ள நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கி அதை அவசர சட்டமாக்கி, கவர்னர் மூலம் காய் நகர்த்தி சசிகலா, எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகிய மூவரையும் மறுபடியும் ஒரு அரசியல் சதுரங்க காய் நகர்த்தலில் சிக்க வைத்திருக்கிறது'' என்கிறார்கள் அ.தி.மு.க.வின் உள்விவகாரங்களை அறிந்த தலைவர்கள்.


போயஸ் கார்டன் இல்லம் என்பது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி குன்காவால் அரசுக்குச் சொந்தமான சொத்தாக அறிவிக்கப்பட்ட சொத்தாகும். கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தினாலே போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், ஹைத்ராபாத் திராட்சைத் தோட்டம் ஆகியவை அரசு சொத்தாகிவிடும். அப்படியிருக்க அதனை எப்படி அரசு சொத்தாக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார்கள் சசிகலாவின் வழக்கறிஞர்கள். '36 ஏ, போயஸ் கார்டன்' என்கிற முகவரியை சசிகலா மீண்டும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக எடப்பாடியும், பா.ஜ.க.வும் சேர்ந்து இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

சசிகலா முதல்வராக்கிவிட்டு சென்ற பிறகு கடந்த நான்கு வருடத்தில் எடப்பாடி வேறு விதமாக வளர்ந்துவிட்டார்.

திரிவேணி எர்த் மூவர்ஸ் என்கிற கவுண்டர் கம்பெனி மூலமும், ஜக்கி வாசுதேவ் மூலமும், பி.ஜே.பி.க்கு நெருக்கமான தொழில் அதிபரான அதானிக்கு நெருக்கமாகி, தமிழக அரசு ஒப்பந்தங்கள், திட்டங்கள் அனைத்திலும் அதானியின் பணத்தைத் தனக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலமாக முதலீடு செய்து பெரிய பண வருவாயை வளர்த்திருக்கிறார் எடப்பாடி. அதானியும் அவரது பார்ட்னர்களான கொங்கு தொழில் அதிபர்களும் அதிகாரம் சசிகலாவிற்கு செல்வதை விரும்பவில்லை.


அதனால் சசிகலா எதிர்ப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் எடப்பாடி. இதில் முன்னணியில் இருப்பது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியும், சாமியார் ஜக்கிவாசுதேவ் ஆகியோர். இந்த எதிர்ப்பில் முழு உடன்பாடு காட்டாத முக்குலத்து சமூகத்தவரான ஓ.பி.எஸ்ஸை எடப்பாடியுடன் இணைத்துக் கொண்டுவரும் பணியை ஜக்கிவாசுதேவ் ஒருங்கிணைக்கிறார். ஒருவேளை, எடப்பாடி பழைய விசுவவாசத்தை சசிகலாவுக்கு காட்டினால், வேலுமணியை முதல்வராக்கலாம் என பா.ஜ.க.வுக்கு யோசனை தந்திருக்கிறாராம் ஜக்கி.

இதை அறிந்து, தன் விசுவாசத்தை டெல்லிக்கு காட்டும் வகையில், சசிக்கு எதிராக, போயஸ் கார்டனை அரசு இல்லமாக்க அவசர சட்டம் போட்டிருக்கிறார் எடப்பாடி. இந்தப் பின்னணியை அறிந்து கொண்ட சசிகலா அதே போயஸ் கார்டன் பகுதியில் குடியேறத் திட்டமிட்டுள்ளார். ஜெ.வின் வீட்டிற்கு எதிரே சொத்துக் குவிப்பு வழக்கில் வராத காலி இடம் ஒன்று ஜெ.வுடைய பாதுகாப்பு வாகனங்கள் நிற்பதற்காக வாங்கப்பட்டிருந்தது. அந்த நிலத்தில் புதிய வீடு ஒன்றைக் கட்டுவற்கு சசிகலா தயாராகிவிட்டார். சிறையிலிருந்து வருவதற்கு முன் விரைந்து பணி முடித்து குடியேறத் திட்டமிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்களை மாற்றுவதற்கு எடப்பாடி எடுத்த முயற்சிகளுக்கு கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பைச் சிறையிலிருந்தபடியே கிளப்பி விட்டிருக்கிறார் சசி. தென் சென்னை மா.செ.வான தி.நகர் சத்யாவை மாற்றி ஆதிராஜாராமை நியமிக்க எடப்பாடி எடுத்த முயற்சிகளுக்கு செங்கோட்டையனும், திருச்சி மா.செ. குமாரை மாற்றுவதற்கு சி.வி.சண்முகமும் எதிர்ப்பு காட்டியிருக்கிறார்கள். இப்படி பல அமைச்சர்களே காட்டிய எதிர்ப்பை இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் எதிர்பார்க்கவில்லை. மா.செ.க்கள் மாற்ற முயற்சியை எடப்பாடி கைவிட்டுவிட்டார் என்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வில் உள்ள தனது ஆதரவாளர்கள் மூலம், தான்தான் பொதுச் செயலாளர் என்கிற கையெழுத்து இயக்கத்தையும் தொடங்க உத்தரவிட்டுள்ளார். அதில் மந்திரிகள், மா.செ.க்கள் என சசி ஆதரவு மூலம் பதவி பெற்றவர்களின் கையெழுத்தைப் பெற திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக சில முக்கியமான சிறைச் சந்திப்புக்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.


பா.ஜ.க. மேலிடத்திடம், உங்களை எதிர்க்க மாட்டேன் என தூதுவிட்டுள்ள சசிகலா, தன்னை எதிர்ப்பதை அ.தி.மு.க. முன்னிலைப்படுத்தினால், 89 இல் ஏற்பட்டதுபோல வரும் தேர்தலில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். தோல்விக்குப்பிறகே அ.தி.மு.க ஒன்றிணையும், அத்தகைய நிலைமை மறுபடியும் தேவையா என டெக்னிக்கலாக ஒரு கேள்வியையும் பா.ஜ.க.விடம் எழுப்பியிருக்கிறார். சசிகலா எதிர்ப்பினால் அ.தி.மு.க. உடையுமா? என்பதுதான் தமிழக அரசியலில் அ.தி.மு.க. சந்திக்கப்போகும் சவால் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT