Skip to main content

கர்நாடக அரசியலால் உஷாரான ஓபிஎஸ், இபிஎஸ்!

பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளை கவிழ்த்து தாமரையை மலர வைக்கும் திட்டத்தில் கர்நாடக மாநிலத்தை தற்போது குறிவைத்துள்ளது பா.ஜ.க. தலைமை. கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 2018-ல் நடந்த சதேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களையும், காங்கிரஸ் 79 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் கைப் பற்றியது. மூன்று இடங்களை சுயேட்சைகள் பிடித்தனர். பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களை எந்த கட்சியும் பெறாத நிலையில், தனிப்பெரும் கட்சி என்கிற வகையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதால் அதனை தடுப்பதற்காக ம.ஜ.த.வை ஆதரித்தது காங்கிரஸ் கட்சி. மேலும், சுயேட்சைகள் மூவரும் ஆதரித்தனர். இதனையடுத்து, ம.ஜ.த. தலைவர் குமாரசாமி தலைமையில் ம.ஜ.த.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது.

 

mjkகூட்டணி ஆட்சியில் காங்கிரசின் வலிமை அதிகமாக இருந்தாலும், அமைச்சர் பதவிகளில் முக்கிய இலாகாக்களை எல்லாம் குமாரசாமியே வைத்துக்கொண்டார் என்கிற குற்றச்சாட்டுகளும் அதிருப்திகளும் எதிரொலித்தபடி இருந்தன. முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளரும் கர்நாடக காங்கிரசின் மூத்த நிர்வாகியுமான ரமேஷ்கண்ணா, ""குமாரசாமி முதலமைச்சரானதிலிருந்து கடந்த 18 மாதங்களாகவே கூட்டணிக்குள் ஏகத்துக்கும் ரகளைதான். காங்கிரஸ் அமைச்சர்களை சுதந்திரமாக செயல்படவிடவில்லை குமாரசாமி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அவர் மதிப்பதுமில்லை. அவரது குடும்பத்தினரின் தலையீடு ஆட்சி அதிகாரத்தில் அதிகரித்துவிட்டது'' என்றார் அதிரடியாக. துணை முதல்வரும் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பரமேஸ்வரன், "குமாரசாமியின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. யாருடைய யோசனையையும் ஆலோசனையையும் கேட்கும் நிலையில் அவர் இல்லை'' என்றார் வெளிப்படையாக.

 

politicsஇந்த நிலையில், காங்கிரஸ்-ம.ஜ.த. கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பலரும் அமைச்சர் பதவி கேட்டு குமாரசாமிக்கு நெருக்கடி தந்தனர். எல்லாருமே சித்த ராமையாவின் ஆதரவாளர் கள். அவரது சொல்படியே இந்த நெருக்கடியை தனக்குக் கொடுப்பதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கொண்டு போனார் குமாரசாமி. இதனால் இரு தரப்புக்கும் அடிக்கடி பஞ்சாயத்து நடந்தபடி இருந்தது. இந்த சூழலை பயன்படுத்த நினைத்த பா.ஜ.க. தலைமை, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, கர்நாடக அரசியலில் ஆப்ரேசன் லோட்டஸை துவக்கியிருக்கிறது.

 

congressஇதுகுறித்து நாம் விசாரித்தபோது, "கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுள் காலம் இன்னும் மூன்றரை வருடங்கள் இருக்கின்றன. ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தால் மட்டுமே பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வர முடியும். அதற்கு காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணியின் பெரும்பான்மை பலத்தை குறைக்க வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஆபரேசன் லோட்டஸ்! இதில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலிருக்கும் 5 பேர், மத்திய உளவுத்துறையை சேர்ந்த 5 பேர் என 10 பேர் இருக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் பொறுப்பை முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தேசிய செயலர்களில் ஒருவரான முரளிதரராவ் ஆகியோரிடம் கொடுத்துள்ளது பா.ஜ.க. தலைமை.


அந்த 10 பேரும் காங்கிரஸ்-ம.ஜ.த. மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க் களை அணுகி, பா.ஜ.க.வின் திட்டத்துக்கு அவர்களை சம்மதிக்க வைக்கும் பணியில் இறக்கி விடப்பட்டனர். இதற்காக போடப்பட்ட பட்ஜெட் 1000 கோடி ரூபாய். காங்கிரஸ் தரப்பில் 25 எம்.எல்.ஏ.க்களிடமும், ம.ஜ.த. கட்சியில் 15 எம்.எல்.ஏ.க்களிடமும் ரகசிய பேச்சுவார்த்தையை துவக்கியது லோட்டஸ். "பதவியை ராஜினாமா செய்யணும்; இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக அவர்களையே போட்டியிட வாய்ப்பளித்து ஜெயிக்க வைக்கிறோம். ஜெயிப்பவர்களுக்கு அமைச்சரவையில் இடம் உண்டு. ராஜினாமாவுக்காக 60 சி தரப்படும் என்கிற பேரங்களை நடத்தினர். முதல் கட்ட முயற்சிகள் பலன் தராததால், டோக்கன் அட்வான்ஸாகவே 10 "சி' கொடுப்பதாக தயார் நிலையில் சூட்கேஸ்களை காட்டியதும் எம்.எல்.ஏ.க்கள் பலரும் சரணடைந்தனர். குறிப்பாக, காங்கிரசிலிருந்து 13 பேரும், ம.ஜ.த.விலிருந்து 3 பேரும், அமைச்சர்களாக இருந்த 2 சுயேட்சைகள் என மொத்தம் 18 பேர் லோட்டஸின் வலையில் விழுந்தனர். அந்த வகையில், சுமார் 5 மாதங்களாக போடப்பட்ட ஆபரேஷன் கடந்த வாரம் சக்ஸஸ் ஆனது.

 

 

admk18 எம்.எல்.ஏ.க்களும் தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு அனுப்பி வைத்தனர். இதனால், பெரும்பான்மை பலத்தை இழந்தார் குமாரசாமி. ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலை குமாரசாமிக்கு உருவாக்கியது'' என்று ராஜினாமா பின்னணிகளை விவரிக்கிறார்கள் கர்நாடக உளவுத்துறையோடு நெருக்கமாக இருக்கும் பெங்களூரு பத்திரிகையாளர்கள். ராஜினாமா விவகாரத்தில் அரசியல் இருப்பதால் அவர்களின் கடிதங்களை ஏற்க மறுத்தார் சபாநாயகர் ரமேஷ்குமார். இதனை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் உச்சநீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எம்.எல்.ஏ.க்கள் தரப்பு, முதல்வர் குமாரசாமி தரப்பு, சபாநாயகர் தரப்பு என மூன்று தரப்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கடுமையான வாதங்களை முன் வைத்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு, "அதிருப்தி எம். எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகரின் சுதந்திரத்தில் நீதிமன்றம் தலையிடாது. பேரவை அலுவல் விதிகளின்படி அவர் முடிவுகளை எடுக்கலாம். அதேசமயம், நீதிமன்றத் தின் அடுத்த உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என அதிருப்தி எம்.எல். ஏ.க்களை கட்டாயப்படுத்த முடியாது. பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கலாமா? வேண்டாமா? என்பதை அவர்களே முடிவெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தது.


நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பா.ஜ.க.வுக்கு உற்சாகத்தையும் காங்கிரஸ்- ம.ஜ.த.வுக்கு அதிர்ச்சியையும் கொடுத்தது. அதேசமயம், மும்பை யில் பா.ஜ.க. ஆதரவில் பதுங்கி யிருக்கும் அதிருப்தி எம்.எல். ஏ.க்களில் ராமலிங்க ரெட்டியை தவிர மற்றவர்கள் அனைவரும், 18-ந்தேதி நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டோம் என ஆவேசமாக தெரிவித்தனர். கர்நாடகாவில் பா.ஜ.க. நடத்தும் அரசியல் விளையாட்டுகளையும், நீதிமன்றத்தின் உத்தரவு களையும் உன்னிப்பாக கவனித்தபடி இருந்தார் ராகுல்காந்தி. உடனே மூத்த வழக்கறிஞர்களுடன் விவாதித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தும்படி கர்நாடக பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலுக்கு உத்தரவிட்டார் ராகுல். அதற்கேற்ப, காங்கிரசின் மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், அசோக்சிங்வி உள்ளிட்ட சீனியர்களிடம் விவாதித்தார் வேணுகோபால். வழக்கறிஞர்கள் சொன்ன யோசனைகள் சித்தராமையாவுக்கு தெரிவிக்கப்பட்டன. இந்த ஆலோசனைகளை பற்றி விசாரித்த போது, ""பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு 18-ந் தேதி நடக்கும் நிலையில், எம்.எல்.ஏ.க்களை கலந்துகொள்ள வேண்டும் என நிர்பந்திக்க முடியாது என்கிற உச்சநீதிமன்ற உத்தரவு அதிர்ச்சியை தருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது கொறடாவின் உத்தரவில் நடக்கும் ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வில், கொறடா உத்தரவு பிறப்பித்தால் கட்டுப்படுத்தாது என்கிற ரீதியில் இருக்கும் நீதிமன்றத்தின் உத்தரவு கொறடாக் களின் அதிகாரத்தை செல்லாததாக்கும் முயற்சி. இதனை ஏற்க முடியாது.

கொறடாவின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா? கொறடாவின் உத்தர வில்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி நடத்துவது? அதனால் இதில் ஒரு தெளிவான வரையறையை உச்சநீதிமன்றம் சொல்லும் வரையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தேவையில்லை என காங்கிரசின் மூத்த வழக்கறிஞர்கள் இருவரும் தெரிவித்த ஆலோ சனைகளை சித்தராமையாவுக்கு தெரியப்படுத்தினர். அதனடிப்படையில், முதல்வர் குமாரசாமியிடமும் சபாநாயகர் ரமேஷ்குமாரிடமும் தனிப்பட்ட முறையில் விவாதித்தார் சித்தராமையா. அவர்களும் இதுதான் சரியான வழி என சொல்லியிருக்கிறார்கள். பரபரப்பான சூழலில் 18-ந்தேதி சட்டப்பேரவை கூடியதும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை வாசித்தார் குமாரசாமி. இதன் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் காரசாரமாக வாதங்களை முன்வைத்து மோதிக்கொண்டனர். சித்தராமையா பேசிய போது, "கொறடாவின் அதிகாரம் குறித்து நீதிமன்றம் தெளிவுப்படுத்தும் வரை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது. இது குறித்து வழக்கு போடலாம்' என்றார் அழுத்தமாக.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்' என குரல் கொடுத்தனர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள். இதனால் இரு தரப்புக்கும் காரசார விவாதங்கள் பேரவையில் எதிரொலிக்க, "காங்கிரசின் இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்தனர் பா.ஜ.க.வினர்'' என சுட்டிக்காட்டினார்கள் கர்நாடக அரசியலை கவனித்து வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் விடாமல் மும்பையிலேயே பதுக்கி வைப்பதன் மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்து விடும் என கணக்கிட்டிருந்தது பா.ஜ.க. தலைமை. ஆனால், பேரவையில் காங்கிரஸ் அடித்த அதிரடியால் வாக்கெடுப்பை நடத்தாமல் பார்த்துக்கொண்டார் சபாநாயகர் ரமேஷ்குமார். இதனை அறிந்த பா.ஜ.க. தலைவர்கள் அவசரம் அவசரமாக மூத்த வழக்கறிஞர் முகுல்ரோஹத்கி யிடம் ஆலோசித்தனர். அதன்படி வாக் கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு உத்தரவிடச் சொல்லி ஆளுநர் வஜூபாயிடம் முறையிட்டனர் பா.ஜ.க. தலைவர்கள்.

ஜூலை 19-ஆம் தேதி மதியம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் வஜு பாயிடமிருந்து உத்தரவு வந்தது. எம்.எல்.ஏ.க்கள் கடத்தப் பட்டிருக்கும் நிலையில், ஆளுநரின் இந்த உத்தரவு சட்டசர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வழக்கு களையும் தகுதி நீக்க வழக்கு களையும் ஆய்வு செய்து வரும் வழக்கறிஞர் இளங்கோவ னிடம் இதுகுறித்து பேசியபோது, ""சட்டப் பேரவை நிகழ்வுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்கிற நிலை யில், கொறடாக்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் நினைப்பது விரும்பத் தகாத பல சம்பவங்களுக்கு வழிவகுக்கும். மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், தங்களின் விருப்பப்படி ராஜினாமா செய்வதை ஏற்க முடி யாது. ராஜினாமாவுக்கு நியாயமான காரணங்களை அவர்கள் சொல்லியாக வேண்டும். சொல்லாத பட்சத்தில் அவர்களது ராஜினாமாவை ஏற்க வேண்டிய அவசியம் சபாநாயகருக்கு கிடையாது.

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கி அவர்களை ராஜினாமா செய்ய வைக்கிறது பா.ஜ.க. இதற்கு காரணம், வெற்றிபெற்ற கட்சியிலிருந்து மாற்று காட்சிக்கு தாவினால், கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி அவர்களின் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோவதுடன் அடுத்து வரும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால் ராஜினாமா என்கிற குறுக்கு வழியை தேர்ந்தெடுத்துள்ள னர். நியாயமான காரணங்களின்றி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முடியாது. இதனை உணர்ந் திருப்பதினால்தான் பா.ஜ.க. தூண்டுதலில் செயல்படும் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்க மறுக்கிறார் சபாநாயகர்'' என்கிறார். "ஆபரேஷன் லோட்டஸ்' என்ற 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கர்நாடக அரசை கைப்பற்ற பா.ஜ.க. தீவிரமாகியுள்ள நிலையில், அம்மாநில சபாநாயகரின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தங்களுக்கு எந்த அளவுக்கு சாதக- பாதகமாக இருக்கும் என்பதை அ.தி.மு.க. அரசும் ஆலோசித்துள்ளது. ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்திடமிருந்து எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தி.மு.க. தரப்புக்கு சாதகமாகிவிடக் கூடாது என்பதில் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இருவரும் தனித்தனியாக கவனம் செலுத்துகின்றனர். உஷாராக, டெல்லியிடமும் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றனர் என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...