ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான தடைகள்

06:21 PM Nov 14, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறிய பின் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பெண்கள் மீதான அடக்குமுறை சட்ட திட்டங்கள் அளவில்லாமல் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்கள் குறித்து மட்டும் ஒரு பட்டியலே போடலாம்.

* பெண்களைக் களப்பணியாளர்களாக, கள உதவியாளர்களாகப் பயன்படுத்தத் தடை.

* பொது இடங்களில் பெண்கள், கணவர் அல்லது அப்பாவின் துணையில்லாமல் நடந்து செல்லத் தடை.

* பெண்களின் அழகு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

* பெண்கள் ஜிம்முக்கு செல்லத் தடை.

* பெண்கள் ஹிஜாப் அல்லது பர்தா அணியாமல் பொதுவெளியில் நடமாடத் தடை. அடுத்ததாக, முழுக்க மூடக்கூடிய புர்கா மட்டுமே அணிய வேண்டுமென்றும், அதுவும் நீல நிற புர்காவாக இருக்க வேண்டுமென்றும் கட்டாயப்படுத்தப்பட்டது.

* விமானப் பயணங்களில் தனியே பயணிக்கக்கூடாது.

* பெண்களுக்கு டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்படுகிறது. இனி பெண்கள் கார் ஓட்டக்கூடாது.

* பள்ளி, கல்லூரிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே தடுப்புகள் அமைக்கப்பட்டு தனித்தனியே பாடம் நடத்தப்படும்.

இந்நிலையில், பெண்களின் மேல்நிலைப் பள்ளிக் கல்வியையே மூட்டைகட்டும் விதமாக, பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகளை மூட ஆப்கன் அரசு உத்தரவிட்டு அடுத்த அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இப்படியான கட்டுப்பாடுகள் மூலமாக ஆப்கன் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, கல்வி வளர்ச்சி தடுக்கப்பட்டு, வீட்டினுள்ளேயே முடக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக உலகெங்குமுள்ள பெண்கள் அமைப்பினர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

ஆனாலும் இவற்றையெல்லாம் தாலிபான் அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை. அவர்களைப் பொறுத்தவரை இஸ்லாமியச் சட்டங்களைப் பின்பற்றுகிறோம் என்ற காரணத்தைச் சொல்லி இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரத்தை முடக்கும் செயலில்தான் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார்கள். பெண்களின் வளர்ச்சி, ஆண்களுக்குச் சவாலாக அமையுமென்ற அவநம்பிக்கையின் காரணமாகவே இத்தகைய மனித உரிமை மீறலோடு விதிமுறைகளைக் கொண்டுவந்து வாக்கு அரசியலில் மக்களின் ஆதரவைத் திரட்டுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஏழைகளாகவே உள்ளனர். அவர்களின் வீடுகளில் குளியலறை வசதி பெரும்பாலும் இருப்பதில்லை. அதேபோல் தண்ணீர் வசதிக்கும் தட்டுப்பாடு நிலவுவதால் இங்கே பெரும்பாலான ஆண்கள் பொதுக்குளியலறையையே பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் பெண்களும் பொதுக்குளியலறையைப் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. தற்போது ஆப்கன் பெண்களின் பொதுக்குளியலறைப் பயன்பாட்டுக்கு ஆப்கன் அரசு தடை விதித்துள்ளது. பொதுக்குளியலறைப் பயன்பாட்டுக்கு 1996-2001ஆம் ஆண்டுகளில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆண்டபோதும் தடை விதித்தார்கள். பின்னர், அமெரிக்காவின் வசம் ஆப்கானிஸ்தான் சென்ற பிறகு இந்தக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் இறுகி வருகின்றன.

அதேபோல் பூங்காக்களில் பொழுதுபோக்குவதற்கும் பெண்களுக்குத் தடை விதித்துள்ளது. முன்னதாக, பெண்களும் ஆண்களும் ஒன்றாகப் பூங்காக்களுக்குச் செல்லத் தடை என்றிருந்து, பெண்களுக்கு சில நாட்களும், ஆண்களுக்கு சில நாட்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது முழுமையாக பெண்களுக்கான தடை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானில் பெண்களின் மன நிம்மதிக்கு என்னதான் மாற்றுவழி என்று புலம்புகிறார்கள். பெண்களுக்கெதிராக மனோரீதியிலான தாக்குதலைத்தான் இந்த அரசு நடத்திவருகிறது என்று பெண்களிடமிருந்து எதிர்ப்புக்குரல்கள் எழுகின்றன. பெண்களின் கல்விக்கு, சுதந்திரத்துக்கு, பேச்சுரிமைக்கு, பணி செய்யும் உரிமைக்கு முன்னுரிமை தரும் நாடுகளே உண்மையான பாலின சமத்துவமுள்ள, பெண்களை மதிக்கும், பொருளாதாரத்தில் வலிமையுள்ளதாக விளங்கும். பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை முடக்கும்போது, ஆண்களின் வருமானத்தை மட்டுமே நம்பி அந்த நாடு செயல்பட்டாக வேண்டியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கவே செய்யும்.

ஏற்கெனவே ஆப்கானிஸ்தானுக்கு மேற்குப் பகுதியில் ஒட்டி அமைந்துள்ள ஈரானில், ஹிஜாப் அணியும் கட்டாயத்துக்கு எதிராக அங்குள்ள பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஹிஜாப் அணியமாட்டோமென்று கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அந்நாட்டு பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 277 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 14,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் போராட்டம் வீரியம் குறையாமல் தொடர்ந்தபடியுள்ளது. ஈராக்கைப்போல் ஆப்கனிலும் மக்கள் புரட்சி எழுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அப்படியான போராட்டத்தின் மூலமே தாலிபான்களின் ஆட்சி அகற்றப்படும் சூழல் ஏற்படுமென்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தொலைத்தொடர்பு வசதியால் மொத்த உலகமும் பக்கத்துப் பக்கத்து வீடுகளைப் போல் சுருங்கியுள்ள சூழலில் இன்னமும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் ஆங்காங்கே தொடர்வது வேதனையாக உள்ளது.

- தெ.சு.கவுதமன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT