ADVERTISEMENT

ஒரு பக்கெட் தண்ணீரில் தொடங்கிய பிரச்சனை, மரணதண்டனை வரை சென்ற விவகாரம்!!! 

05:55 PM May 08, 2019 | kamalkumar

உலக நாடுகள் உற்றுகவனித்த ஒரு வழக்கு ஒரு பக்கெட் தண்ணீரில் தொடங்கியது என்றால் நம்பமுடியுமா? மதத்தின் பெயராலும், தெய்வத்தின் பெயராலும் நிறைய பிரச்சனைகள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படியொரு சம்பவம்தான் இது.

ADVERTISEMENT


பாகிஸ்தானின் லாகூரில் வசிப்பவர் ஆசியா பிபி என்ற பெண் இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம், லாகூரில் அவர் பழம் பறித்துக்கொண்டிருந்தார், பழம் பறித்து முடித்தவுடன் அங்கு அருகிலிருந்த ஒரு பக்கெட்டில் இருந்த தண்ணீரை பருகினார். அங்குதான் ஆரம்பித்தது பிரச்சனை. ஆசியா பிபி ஒரு கிறித்துவ பெண், அவர் நீர் அருந்தியது இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் கோப்பையில். (பாகிஸ்தானை பொறுத்தவரை இஸ்லாமியர் அல்லாதவர்கள் தூய்மையற்றவர்களாக பார்க்கப்படுகின்றனர் என்பது அங்கிருக்கும் அவலம்)

உடனே அந்த இஸ்லாமியர்கள் இவர் நீர் அருந்தியதால் அந்த நீரின் புனிதம் கெட்டுவிட்டது என்றும், இனி அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாது என்றும் சண்டையிட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஆசியாவை மதம் மாறும்படி வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் முகமது நபியை அவமதித்தாகவும் வழக்கு பதிவுசெய்துள்ளனர். ஐந்து நாட்கள் கழித்து ஆசியா வீட்டிற்குள் நுழைந்து அவரை இழுத்து வந்தனர் காவல்துறையினர். ஆனால் அவருக்கு வெளியே ஒரு பெரிய ஆபத்து காத்திருந்தது. வெளியே மதகுரு உள்ளிட்ட பலர் கொண்ட கூட்டம் நின்றது. ஆசியா வெளியே இழுத்து வரப்பட்டவுடன் காவல்துறையினர் கண்ணெதிரேயே அவர் கடுமையாக தாக்கப்பட்டார்.

ADVERTISEMENT


பின்னர் அவர் சிறையிலடைக்கப்பட்டார். தான் ஒரு நிரபராதி எனக்கூறிய அவருக்கு, 2010ம் ஆண்டு தெய்வ நிந்தனை சட்டத்தின்கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்தார். ஆசியா பீபிக்கு ஆதரவாக அந்த மாகாண ஆளுநர் சல்மான் தசீர் மேல்முறையீடு செய்தார். இதனால் அவர், அவரது பாதுகாவலராலேயே கொல்லப்பட்டார். இதனால் இந்த வழக்கு மேலும் முக்கியத்துவம் பெற்றது. அவரைக் கொன்ற அவரது பாதுகாவலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, 2016ம் ஆண்டு அது நிறைவேற்றப்பட்டது. ஆனால், அவர் இன்றும் பலரால் கதாநாயகனாக கொண்டாடப்படுகிறார்.

கடந்த வருடம் ஆசியாவிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ரத்துசெய்யப்பட்டது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பல கலவரங்கள் நடந்தது. வெளிவந்த அவர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டார், நாட்டைவிட்டு வெளியே செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரை பல நாடுகள் தங்கள் நாட்டிற்கு வரும்படி கூறினர். தற்போது அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. அவர் கனடாவில் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு நாடுகளிலும் மதத்தின் பெயரால் தினமும் ஏதாவது ஒரு கொடுமை நடக்கத்தான் செய்கிறது. இந்த விஷயத்தில் நாடும், மதமும் மாறுகிறதே தவிர கொடுமைகள் மாறுவதில்லை. மதம் மாட்டை பாதுகாத்து, மனிதனை கொல்லும், உயிருடன் எரிக்கும், குழந்தையிடமிருந்து தாயை பிரிக்கும், மொத்தத்தில் மதம் மனிதனை மிருகமாக்கும்...

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT