ADVERTISEMENT

மதுரையின் மற்றுமொரு அடையாளம்; கலைஞரின் காதலர் பார்வையில் உருவான நூற்றாண்டு நூலகம்! 

11:11 AM Jul 14, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கலாச்சாரம், பண்பாடு, சமூகம், அரசியல், உணவு எனப் பலவற்றிலும் தனித்த அடையாளம் பாண்டியர்கள் ஆட்சி செய்த மதுரைக்கு உண்டு. மதுரை மீனாட்சியம்மன் கோவில், நாயக்கர் மஹால், மல்லி பூ, ஜிகர்தண்டா, மதுரை கறி தோசை என அடுக்கிக்கொண்டே போகலாம். இத்தனை அடையாளங்களுள் ஒன்றாக இல்லாமல் தனித்த அடையாளமாக, ராஜாக்களின் மணிமகுடத்தில் ஜொலிக்கும் வைரம்போல் மதுரைக்குத் தனித்த அடையாளத்தைத் தந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.

‘தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்கும்போது, மதுரை மற்றும் தென்மாவட்ட இளைஞர்கள், பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் கலைஞரின் பெயரில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்படும்’ எனத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார் அன்றைய திமுக தலைவரும் இன்றைய தமிழ்நாடு முதல்வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். 2021 மே மாதம் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலின், அதற்கடுத்த மாதமே அதாவது 03.06.2021 ஆம் தேதி ‘மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும்’ என அறிவித்தார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கும் பொறுப்பினைத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் ஒப்படைத்தார். அதற்கான ஆய்வுகளை மேற்கொண்ட அமைச்சர் எ.வ. வேலு, மதுரை டூ நத்தம் சாலையில் 2.73 ஏக்கர் பரப்பளவில் நிலம் எடுக்கப்பட்டது. இதற்கான கட்டட வரைபடம் உருவாக்கப்பட்டது. ஆறு தளங்களுடன் அமைக்கப்படும் அந்த நூலகத்தில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் கட்டடம் அமைக்கப்படுவதை விளக்கினார் அமைச்சர் வேலு.

முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பின்னர் 11.1.2022 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நூலகக் கட்டடம் அமைக்க மட்டும் ரூ. 134 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அறைகளுக்கு அறைகலன்கள் வாங்க ரூ. 17 கோடி எனத் தனியாக ஒதுக்கப்பட்டது.

ஆறு தளங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், ஸ்டூடியோ, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் கணிப்பொறியில் படிக்கும் வசதி எனத் திட்டமிட்டு ஒவ்வொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. பார்வையற்றவர்கள் படிக்க முடியாது என்பதால் அவர்கள், காதால் கேட்டு அறிந்துகொள்ளும் வகையில் ஒலி நூல் பிரிவும் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலத்தில் இளைஞர்களை, குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்து வருவது என்பது பெரும் சவாலானதாக இருக்கிறது. இதனை ஆராய்ந்து குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கக் குழந்தைகளுக்கான சிறப்புப் பகுதிகள் உருவாக்கப்பட்டன.

புத்தகத்தைத் தந்து படிக்கச் சொன்னால் குழந்தைகள் படிக்க மாட்டார்கள். அதனால் அவர்களை விளையாட்டு மூலம் கற்க வைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இந்தியாவிலேயே முதல்முறையாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்ட்ராக்டிவ் பேனல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விலங்குகள், பறவைகள், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றை முப்பரிமாணத்தில் கண்டு கற்பதற்காக ஹாலோகிராம் வசதியோடு ஏற்பாடு செய்துள்ளனர். குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த நிகழ்ச்சி அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அரசு சார்பில் அமைந்துள்ள பொதுத்துறை நூலகத்தில் குழந்தைகளுக்கான திரையரங்கம் என்பது இல்லை. இந்தியாவில் முதல் முறையாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான தனியான திரையரங்கம் உள்ளது. குழந்தைகளுக்கான திரைப்படங்கள், அறிவியல் சார்ந்த வீடியோக்கள், ஆவணப்பட வீடியோக்கள், விலங்குகள் குறித்த வீடியோக்கள் போன்றவை இங்குத் திரையிடவுள்ளனர்.

படிப்பகம் மட்டும் இருந்தால் போதாது குழந்தைகள் விளையாட வேண்டும், பெரியவர்கள் படிக்கிறார்கள் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் குழந்தைகள் விளையாட வேண்டும் என்பதற்காக அறிவியல் பூங்காவையும் அமைத்துள்ளனர். அங்கு ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, விலங்குகள், பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு செய்துள்ளது. பொதுப்பணித்துறையின் பணியாக அதாவது துறை சார்ந்த பணியாக எடுத்துக்கொள்ளாமல் கலைஞர் மீதான காதலாக அவரின் பெயர் வரலாற்றில் இன்னும் நிலைத்து நிற்க வேண்டும் என்கிற கனவோடு இதன் உருவாக்கத்தில் ஈடுபட்டுச் சாதித்துள்ளார் அமைச்சர் எ.வ. வேலு என்கிறார்கள் தி.மு.க.வினர்.

அடிக்கல் நாட்டிய தினத்தில் இருந்து சரியாக 18 மாதம் 5வது நாளில் ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ திறக்கப்படுகிறது. இந்த 18 மாதங்களில் 50 முறைக்கு மேல் மதுரைக்குப் பயணமாகியுள்ளார் அமைச்சர் வேலு. தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்ந்த திட்டங்கள் ஆய்வு, நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் ஆய்வு எனச் சென்றதன் காரணம் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உருவாக்கத்தை ஆய்வு செய்யவே.

மதுரைக்கு விமானத்தில் சென்றாலும், காரில் சென்றாலும் முதலில் அவர் அதிகாரிகளுடன் செல்வது கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டுமான பணியை ஆய்வு செய்யத்தான். அதேபோல் மதுரையைத் தாண்டி விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வுப் பணியை முடித்துவிட்டு சென்னை புறப்படும்போதும் மதுரை வந்து நூலகக் கட்டுமான பணியைக் கவனித்துவிட்டே வருவார். சில நேரங்களில் வாட்ஸ்அப் மூலம் ஃபோட்டோக்கள் வாங்கி பணிகள் எப்படி செய்யப்பட்டுள்ளன என்பதனைப் பார்ப்பார். இப்படி நூலகத்தின் ஒவ்வொரு பணியையும் தன் கண் பார்வையிலேயே வைத்துச் செயல்படுத்தினார் என்று தெரிவிக்கின்றனர்.

பொது நூலகத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நூல்கள் வாங்கி வைக்க 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தன்னார்வலர்கள் தங்களிடம் உள்ள நூல்களையும் வழங்கலாம் என்கிற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கானவர்கள் தங்களிடம் உள்ள நூல்களையும், புதியதாக வாங்கியும் தந்து வருகின்றனர்.

நூலகத்தில் கணினி அமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அவையும் பொருத்தப்பட்டுள்ளன. நூலகத்தில் ஒரு நூலை எடுத்து அதை நூலகரிடம் தந்து அவர் அதனை என்ட்ரி போட்டுத் திரும்ப தருவதற்குள் நேரங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஆர்.எப்.ஐ.டி என்கிற தொழில்நுட்ப வசதி மூலமாக ஸ்கேனர் வசதி செய்யப்பட்டுள்ளது. வாசகர்கள் நூல்களை எடுத்து வந்து ஸ்கேன் செய்து பதிவு செய்துவிட்டு நூல்களை எடுத்துக்கொண்டு செல்லலாம். படித்து முடித்த பின் அதனை அதே வழிமுறையில் திரும்பத் தந்துவிடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

216 கோடி ரூபாயில் பிரமாண்டமாக எழுந்து நின்று மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாக உள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT