ADVERTISEMENT

அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்... நாற்காலியை விடாத தமிழக பாஜக சீனியர்... ரஜினி டூ விஷால்!

11:29 AM Oct 24, 2019 | Anonymous (not verified)

"எங்க கட்சியின் தமிழக தலைவரை எப்பங்க நியமிப்பாங்க, யாரை நியமிப்பாங்க, எப்படி நியமிப்பாங்க, இதப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இப்படி தனக்குத் தெரிந்த பத்திரிகையாளர்களிடம், தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் கேட்டுக் கேட்டு நொந்து போய்விட்டார்கள். தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்ட அறிவிப்பு வெளியான செப்.01-ஆம் தேதியே தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கவர்னராக தமிழிசை பதவி ஏற்பதற்கு முன்பாகவோ அல்லது பதவி ஏற்ற சில நாட்களிலோ தமிழக பா.ஜ.க.விற்கு தலைவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சித் தொண்டர்களிடம் இருந்தது. ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் யார் தலைவர் என்ற குழப்பத்திலும் மாஜி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் விறுவிறு ஆக்ஷன்களாலும் மண்டை காய்ந்து கிடக்கிறார்கள் பா.ஜ.க.வின் தொண்டர்களும் கட்சியின் முன்னணியினரும்.

ADVERTISEMENT



பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின் பிங் வருகையின் போது சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க.சார்பில் வரவேற்போர் பட்டியலை இறுதி செய்தது பொன்னார்தான். இதில் அடுத்த தலைவர் பதவி ரேஸில் இருக்கும் நயினார் நாகேந்திரனை திட்டமிட்டே புறக்கணித்தார் பொன்னார் என்ற புகார் எழுந்தது. அதற்கடுத்ததாக புறக்கணிப்பு லிஸ்டில் இடம் பெற்றவர் சென்னை கோட்டப் பொறுப்பாளர் சக்கரவர்த்தி. ஏனெனில் இந்த சக்கரவர்த்திதான் நயினார் நாகேந்திரனையும் அவரது ஆதரவாளர்களையும் பா.ஜ.க.வுக்கு அழைத்து வந்தவர். தமிழிசையின் ஆதரவாளர்களான, தமிழக பா.ஜ.க.வின் மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம், மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா, சுறுசுறுப்பான களப்பணியாளர் என பெயரெடுத்த பி.டி.அரசகுமார் என புறக்கணிக்கப்பட்டோர் பட்டியல் நீள்கிறது. அதே சமயம் தஞ்சை கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன் ஆகியோரை வரவேற்போர் பட்டியலில் சேர்த்து தனது கெத்தைக் காட்டிவிட்டார் பொன்னார்.

ADVERTISEMENT



"இதெல்லாம் பழைய சமாச்சாரம்தான். புது சமாச்சாரம் என்னன்னா...'’என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் கட்சியின் சீனியர் தலைவர் ஒருவர். "தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தபோது தனக்கு ஒதுக்கப்பட்ட அறையை இப்போதும் தன் வசமே வைத்திருக்கிறாராம் பொன்னார். அப்படின்னா என்ன அர்த்தம், பொன்னாரே மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவர் நாற்காலியை கேட்ச் பண்ண ப்ளான் பண்றாருன்னு அர்த்தம்''’என்றார். பொன்னார் ஆதரவாளர் ஒருவரோ, "மோடி சென்னைக்கு வரும் போதெல்லாம் எம்.என்.ராஜா, கரு.நாகராஜ், சுப்பிரமணிய பிரசாத், அரசகுமார், ஜெய்சங்கர் போன்றவர்கள் வரவேற்கிறார்கள். புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால்தான் அவர்களும் உற்சாகமாக கட்சிப் பணியாற்றுவார்கள் என்ற நோக்கத்தில்தான் பொன்னார் அப்படிச் செய்தாரே தவிர காழ்ப்புணர்ச்சி அரசியல் அவரிடம் இல்லை''’என்கிறார்.



நமக்கு நெருக்கமான அரசியல் விமர்சகர் ஒருவரிடம் தமிழக பா.ஜ.க. நிலவரம் குறித்து பேசினோம். "அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை பரிதாபமாத் தான் இருக்கு. ஆனா தமிழ்நாட்டுல நாங்குநேரி இடைத் தேர்தல்ல அக்கட்சியின் ரூபி மனோகரன் சுறுசுறுப்பா களத்துல இறங்குனார்னா அதுக்குக் காரணம், கூட்டணித் தலைமையான தி.மு.க.தான். அறிவாலயத்தில் கூட் டணிப் பேச்சுவார்த்தை நடந்துக் கிட்டிருக்கும் போதே சி.பி.ஐ.யை ரெய்டுக்கு அனுப்பியவர் ப.சி. அப்போது நடந்த தேர்தலில் தி.மு.க.வை கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டவர் ப.சி. கூடா நட்புன்னு கலைஞரே குமுறிய நிலையெல்லாம் உங்களுக்கும் தெரிந்ததுதான். இதையெல்லாம் மீறி இப்போது நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்தார்னா, அதன் பின்னால் வேறு ஒரு கணக்கு இருக்கும்.


இதை இப்ப ஏன் நான் சொல்றேன்னா, இப்ப நடந்து முடிந்திருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சியான ச.ம.க.வின் ஆதரவைக் கேட்டு, அவரது வீடு தேடிப்போய் சால்வை போடுகிறார்கள் அமைச்சர்கள் ஜெயக்குமாரும் தங்கமணியும். இதே போல்தான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கும் போனார்கள். ஆனால் அகில இந்திய கட்சியின் தமிழக கிளைக்கு யார் தலைவர்னு தெரியாததால் அ.தி.மு.க. பெருந்தலைகள் யாரும் கண்டு கொள்ளவேயில்லை. தெலங்கானா கவர்னராக பதவி ஏற்ற பிறகு மூன்றுமுறை சென்னைக்கு வந்து திரும்பிவிட்டார் தமிழிசை. ஆனாலும் தமிழக தலைவரை மேலிடத்தால் நியமிக்க முடியவில்லை.


ஏன்னா பா.ஜக.வின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா முதலில் ஸ்கெட்ச் போட்டது ரஜினிக்கு. ஆனால் அவரின் முடிவு என்னன்னு அவரைத் தவிர யாருக்கும் தெரியல. நாட்டுக்குத் தேவையான 20 நல்ல திட்டங்களை என் கணவர் வச்சிருக்கார்னு ரஜினியின் மனைவி லதா சொல்லப்போக, அதுல கட்சி ஆரம்பிக்கிற திட்டம் இருக்கான்னு மீம்ஸ் கிரியேட்டர்கள் போடும் அளவுக்கு போயஸ் கார்டன் நிலைமை இருக்கு. அடுத்ததாக வலை விரித்திருப்பது நடிகர் விஷாலுக்கு. மாநிலத் தலைவர் ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு நல்ல பொறுப்புக்கு நாங்க கேரண்டி என்கிறார் அமித்ஷா. ஏன்னா இப்போது விஷால் ஏகப்பட்ட கடன் நெருக்கடியில் இருக்கிறார். எப்படியாவது ஒரு சினிமா பிரபலம் சிக்கிவிட்டால் போதும், எல்லாப் பிரச்சனையும் ஓவர் என உண்மை நிலவரத்தை கடகடவெனச் சொன்னார். டெல்லியின் தேடல் தொடர்வதால் "தல யாரு' என தவிக்கிறார்கள் தமிழக பா.ஜ.க. தொண்டர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT